சி(ரி)த்ராலயா 23: ஒரு படம், ஓஹோ வாழ்க்கை!

By டி.ஏ.நரசிம்மன்

எவ்வளவு சொல்லியும் கேட்காத ஸ்ரீதர், ‘காதலிக்க நேரமில்லை’ படத்தைக் கைவிட்டு விட்டார். மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்தார் கோபு. சிலநாட்கள் கழித்து கோபுவைத் தேடி, திருவல்லிக்கேணிக்கு வந்தார் ஸ்ரீதர். காலாற நடந்துசென்று மெரினா பீச் காந்தி சிலையின் பின்பாக வழக்கமாக அமரும் இடத்தில் நண்பர்கள் இருவரும் அமர்ந்தனர்.

ஸ்ரீதர் இப்போது ஒரு முக்கோணக் காதல் கதையை கோபுவிடம் கூறத் தொடங்கினார். ஆனால் கோபுவின் முகத்தைப் பார்த்த ஸ்ரீதர், “உன்னை இந்தக் கதை இம்பிரஸ் பண்ணினமாதிரி தெரியல.” என்றார். இதுதான் சமயம் என்று துள்ளிய கோபு, “ஸ்ரீ.. ‘ரோமன் ஹாலிடே’ படம் மாதிரி ரோமடி (ரொமான்ஸ் + காமெடி) வகைப் படம் தமிழ்ல இதுவரை வந்ததே இல்ல. நல்ல ஈஸ்ட்மேன் கலர்ல உன்னோட டிரேட்மார்க் காதலை, இளமை ப்ளஸ் இனிமை கலந்து கொடுத்தா வித்தியாசமா இருக்கும்” என்றார் கோபு.

“ பேசிப் பேசியே என்னை உன்பக்கம் இழுத்துடுறேடா. சரி! உன் ஆசையை நான் இதுக்குமேலயும் கெடுக்க விரும்பல. ஆனா இதுவரைக்கும் எடுத்ததை அப்படியே விட்டுவிடலாம். புதுசா தொடக்கத்துலேர்ந்து ‘காதலிக்க நேரமில்லை’க்கு வேற கதையை யோசிப்போம் என்று அங்கேயே கதையை விவாதித்தனர்.

இம்முறை கதை அவர்களது பிடிக்குள் வந்துவிட்டது. அவ்வளவுதான், அடுத்தநாள் மாலையிலும் காந்தி பீச்சில் டேரா போட்டார்கள். அந்த ஹெரால்ட் காரின் பின் சீட்டில் ஸ்ரீதர் காதல் காட்சிகளை எழுத, கோபு முன் சீட்டில் உட்கார்ந்து நகைச்சுவைக் காட்சிகளை எழுதினார்.

பள்ளி மாணவியைப் போன்ற தோற்றத்தில் இருந்த ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை பின்னர் வேறு ஒரு படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்த ஸ்ரீதர். அந்தத் தங்கை கதாபாத்திரத்துக்கு ராஜஸ்ரீயை ஒப்பந்தம் செய்தார். ராஜஸ்ரீ ஏற்கெனவே ‘பூம்புகார்’ போன்ற படங்களில் நடித்திருந்தாலும் அவரைப் புதுமையான கோணத்தில் காட்டினார் ஸ்ரீதர். ‘காதலிக்க நேரமில்லை’ ராஜஸ்ரீக்குப் பெரும் புகழைத் தந்தது. அதன் இந்தி மறு ஆக்கமான ‘பியார் கியே ஜா’விலும் நாயகன் சசிகபூருக்கு ஜோடியாக ராஜஸ்ரீயையே நடிக்க வைத்தார்.

விஸ்வநாதன் வேலை வேண்டும்!

‘காதலிக்க நேரமில்லை’ பட இசையமைப்புக்கு முன்பு, தன் மனைவியுடன் ஏற்காடு சென்றிருந்தார் எம்.எஸ்.வி. அவரது வருகைக்காக அனைவரும் காத்திருந்தனர். ஏற்காட்டிலிருந்து திரும்பியதும், ‘காதலிக்க நேரமில்லை’ பாடல் கம்போசிங் தொடங்கியது. கவிஞர் கண்ணதாசன் தனது காரிலிருந்து இறங்கி கம்போஸிங் அறைக்குள் நுழைந்து எம்.எஸ்.வியை நோக்கி நடந்தார்.

“என்னப்பா... விசு! நீ பாட்டுக்கு உல்லாசப் பயணம் கிளம்பிட்டே. இங்கே நாங்க எல்லாரும் வேலையில்லாம இருக்கோம். விஸ்வநாதா…வேலை வேண்டும். விஸ்வநாதா வேலை கொடு..!” என்று வேடிக்கையாகக் குரலை உயர்த்தி கோஷம் போடுவதுபோல் கூறிக்கொண்டே வர, அதைக் கேட்ட ஸ்ரீதருக்குள் ஒரு அதிர்வு.

உடனே கோபு பக்கம் திரும்பி, “பாலையா கதாபாத்திரத்துக்குப் பெயரை மாத்து. படத்துல அவர் பெயர் இனி விஸ்வநாதன்.” என்று கூறிவிட்டு எம்.எஸ்.வி பக்கம் திரும்பி, “கவிஞர் சொன்னதையே பல்லவியா வச்சு ட்யூன் போடுங்க எம்.எஸ்.” என்றார். அப்படி அங்கே, அப்போதே பிறந்த பாடல்தான், ‘விஸ்வநாதன், வேலை வேண்டும்’

எம்.எஸ்.வியின் குழுவில் பிலிப் என்ற ஒரு கிடார் கலைஞர் இருந்தார். அவர் ரெக்கார்டிங் இல்லாத நேரத்தில் ஏதாவது ஒரு பிறமொழிப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பார். 1940-ல் வெளியான ஒரு ஸ்பானிஷ் பாடலான ‘பீச்சாமே மொச்சு’ என்ற பாடலை அவர் பாடிக்கொண்டிருந்தார். அதைக் கேட்ட எம்.எஸ்.வி, அந்தப் பாடலை கர்னாடக ராகத்தில் மாற்றி மிக அழகான ஒரு மெட்டை கம்போஸ் செய்தார். அந்தப் பாடல்தான், ‘அனுபவம் புதுமை, அவளிடம் கண்டேன்’.

அந்தப் பாடல் படப்பிடிப்பின்போது ஒரு ருசிகர சம்பவம். ஆழியார் அணையில் ஒரு நாள் இரவு, காட்சியைப் படம்பிடித்தார் ஸ்ரீதர், காட்சிக்கு ராஜஸ்ரீ, மற்றும் ரவிச்சந்திரனுக்குத் தேவையான ஆடைகள் வைத்திருந்த பெட்டியை காஸ்டியூம் டிபார்ட்மெண்ட்காரர்கள் படப்பிடிப்புக்குக் கொண்டுவர மறந்துவிட்டனர். வேறு வழியின்றி, ரவிச்சந்திரனுக்கு ஒரு நைட் கோட் மாட்டி, ராஜஸ்ரீயை ரோஸ் நிற நைட் கவுன் ஒன்றை அணிய வைத்து எடுத்தார்கள். வேடிக்கை என்னவென்றால், ராஜஸ்ரீயின் அந்த நைட் கவுன் பிரபலமாகி கடைகளில் பரபரப்பாக விற்பனை ஆனது.

பிஸியான படக் குழு

‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ பாடலுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றியவர் மாஸ்டர் தங்கப்பன். இந்தப் பாடலில் ரவிச்சந்திரனுடன் நடனமாடினார் தங்கப்பனின் உதவியாளர் சுந்தரம். அவரது நடன அசைவுகளுக்கு தியேட்டரில் பலத்த வரவேற்பு. அதை அஸ்திவாரமாகக் கொண்டுதான் பிற்காலத்தில் பல படங்களில் நடனம் ஆடி, சுந்தரம் மாஸ்டராக அவர் பெயர்பெற்றார். அவருடைய மகன்கள் பிரபுதேவா, ராஜுசுந்தரம் ஆகியோர் இன்று கொடிகட்டி பறக்கிறார்கள்.

துணை வசன கர்த்தாவாகிய ‘சித்ராலயா’ கோபு, இந்தப் படத்தின் மூலம் கதை வசன கர்த்தாவாக மாறினார். பின்னர் பல முழுநீள நகைச்சுவைப் படங்களை படைக்க இந்தப் படம் தந்த புகழே உதவியது. அதன் தொடக்கமாக ஏவி.எம்மின் ‘காசேதான் கடவுளடா’ படத்தை எழுதி இயக்கவும் செய்தார் கோபு.

22chrcj_gopu sridar கோபுவும் ஸ்ரீதரும் right

துணை இயக்குநராக இருந்த சி.வி.ராஜேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இணை இயக்குநராக மாறினார். பின்னாளில் நடிகர் திலகத்தின் பல படங்களை இயக்கி ‘சூப்பர் ஹிட்’ இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்தார். ஒரு படத்தின் மாபெரும் வெற்றி அந்தப் படத்தின் நடிகர், நடிகையர் மட்டுமல்லாது படக்குழுவில் இருந்த அத்தனை பேரையும் பிஸியாக்கிய அற்புதம் நடந்தது.

கூட்டு முயற்சியே வெற்றியின் ரகசியம்

ஸ்ரீதரோ ‘ட்ரெண்ட் செட்டர்’ என்ற பெயரை ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் மூலம் பெற்றார். மாநிலம் எங்கும் அப்போது இந்தப் படத்தைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. இப்படி, பலருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ‘காதலிக்க நேரமில்லை’. இன்றுவரை பேசப்படும் பசுமையான திரைப்படம். அதற்குக் காரணம், தேர்ந்த திறமைகளை கொண்ட ஒரு படக் குழுவின் கூட்டு முயற்சிதான்.

அருமையான, நாகரிகமான, நகைச்சுவை வசனங்கள், கண்ணதாசனுடைய இனிமையான பாடல்கள், விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இளமைத் துடிப்பு மிக்க மெட்டமைப்பு இப்படி ஒவ்வொரு அம்சமுமே சூப்பர் ஹிட். ‘அனுபவம் புதுமை’ பாடலை ஸ்ரீதர் படமாக்கிய விதம், இளைஞர்களைச் சுண்டி இழுத்தது. அந்தப் பாட்டுக்குத் தங்கப்பன் மாஸ்டரின் அங்க அசைவுகள், என். எம். சங்கரின் நேர்த்தியான எடிட்டிங்., கங்காவின் கண்ணைப் பறிக்கும் செட் அமைப்புகள், வின்சென்டின் கேமரா என்று எல்லாவற்றிலும் தி பெஸ்ட் என்று கூறப்பட்ட திரைப்படம்.

இவை அனைத்தும் சேர்ந்துதான், இன்றுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை என்று ரசிகர்கள் கூறுமளவுக்குப் பெயர் பெற்றது, ‘காதலிக்க நேரமில்லை’ அந்தப் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்குப்பின் ஒருநாள் மீண்டும் மெரினா பீச். அதே காந்தி சிலையின் பின்னால் அடுத்த படத்துக்கான ஒரு நகைச்சுவைக் கதையைக் கூறத் தொடங்கினார் கோபு. ஸ்ரீதர் அவரைக் கையசைத்துத் தடுத்தார்.

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்