இன்றுவரை இப்படி ஒரு காதல் நகைச்சுவைப் படம் வந்ததில்லை, இனி வரப்போவதுமில்லை என்று ரசிகர்கள் கூறும் அளவுக்கு வரவேற்பைப் பெற்றது ‘காதலிக்க நேரமில்லை’. பாலையாவுக்கு ‘ஓஹோ புரடெக்ஷன்’ நாகேஷ் இயக்குநராகச் செய்யும் ரகளைகளின் உச்சமாக அமைந்தது, அவர் பாலையாவிடம் கதை கூறும் இடம். ‘ஓஹோ புரடெக்ஷன் செல்லப்பா கதாபாத்திரத்தை எங்கிருந்து பிடித்தீர்கள்?’ என்று கோபுவைப் பார்ப்பவர்கள் இன்றும் கூடக் கேட்பார்கள்.
அந்தக் கதாபாத்திரத்துக்கான உந்துதல் ‘புதிய பறவை’ படத்தின் இயக்குநர் தாதா மிராசி என்கிறார் கோபு. தாதா மிராசி சிவாஜியின் நெருங்கிய நண்பர். ஒரு முறை, சிவாஜிகணேசன் அவரை கோபுவிடம் அனுப்பி அவர் கூறும் கதையைக் கேட்டு அபிப்ராயம் கூறும்படி கேட்டார்.
தாதா மிராசி கோபுவிடம் கதை சொன்னபோது அவருக்குக் குரல் எழும்பவேயில்லை. வாயால் சத்தம் செய்து, புருவத்தை உயர்த்தி, கண்களை உருட்டி ஒரு மர்மக்கதை சொன்னார். கதை புரியவில்லையே தவிர, அவரது அங்க சேஷ்டைகள் மிக அற்புதமாக இருந்தன. மிமிக்ரி கலைஞரான கோபு, மிராசியின் கோமாளித்தனம் நிறைந்த உடல்மொழியை அப்படியே உள்வாங்கி நாகேஷுக்கு நடித்துக் காட்ட நாகேஷ் அப்படியே பிடித்துக்கொண்டார். ஆனால், நாகேஷின் கதைசொல்லும் காட்சியில் மிஞ்சிவிட்டது, பாலையா கொடுத்த நொடிக்குநொடி முகபாவங்கள்.
மிரண்ட மெஹ்மூத்!
‘காதலிக்க நேரமில்லை’யின் வெற்றி பம்பாயை எட்டிவிட, பலர் அதன் மறு ஆக்க உரிமைக்காகப் போட்டியிட்டனர். ஆனால், சித்ராலயா நிறுவனமே இந்தியிலும் தெலுங்கிலும் எடுக்கும் என்று அறிவித்துவிட்டது. ரவிச்சந்திரன் கதாபாத்திரத்தில் சசிகபூர், அவருக்கு ஜோடியாகத் தமிழ் படத்தில் நடித்த ராஜஸ்ரீ, முத்துராமன் கதாபாத்திரத்தில் கிஷோர்குமார், காஞ்சனா கதாபாத்திரத்தில் கல்பனா நடிக்க, நாகேஷுக்கு மாற்றாக யாரை ஒப்பந்தம் செய்வது என்று பார்த்தபோது வேறு மாற்று இல்லாமல் இருந்தார் இந்தி நகைச்சுவை நடிகர் மெஹ்மூத். பாலையா கதாபாத்திரத்தை ஓம்பிரகாஷ் செய்தார்.
இந்தி கலைஞர்கள் அனைவருக்கும் ‘ காதலிக்க நேரமில்லை’ படத்தைப் போட்டு காட்டி, வசனங்களை விளக்கினார் கோபு.
படத்தில் நாகேஷின் நடிப்பைப் பார்த்த மெஹ்மூத், “நாகேஷ் கொடுத்த நடிப்பில் பாதியையேனும் தன்னால் தர முடியும் என்று தோன்றவில்லை” என்று கோபுவிடம் மிரண்டுபோய்க் கூறினார். தலைசிறந்த நடிகரான ஓம்பிரகாஷ் கோபுவைக் கட்டித் தழுவி, “இம்மாதிரி நகைச்சுவைக் காட்சிகள் இந்திப் பட உலகத்துக்குப் புதிது மட்டுமல்ல, புது ரத்தம் பாய்ச்சக் கூடியவை” என்று பாராட்டினார்.
திருவல்லிக்கேணி கலாச்சாரக் கழகம் இந்தப் படத்துக்காக நடத்திய பிரம்மாண்ட பாராட்டுவிழாவில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவருக்கும் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்ற பட்டத்தை வழங்கியது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப்பின் சித்ராலயா நிறுவனத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகமாகிவிட்டது.
இந்த நேரத்தில் தன்னைக் காணவந்த ஸ்ரீதரை, மெரினாவில் காந்தி சிலைக்குப் பின்னால் அழைத்துச் சென்று அடுத்த நகைச்சுவையைக் கதையைக் கோபு கூறத் தொடங்கியபோது இடைமறித்த ஸ்ரீதர் “அடுத்து ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட ஒரு கதையை எழுதியிருக்கிறேன். முதலில் அதை நீ கேள்” என்றார். அந்தப் படம்தான் ‘கலைக் கோவில்’.
பாலமுரளியின் குரலுக்காக…
ஒரு வீணை வித்வான்தான் கதாநாயகன். வீணையைத் தன் காதலியாக நினைத்துப் பாடும் பாடல். ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. படித்தவர், பாமரர் என அனைவரையும் அன்றாடம் முணுமுணுக்க வைத்து பலரையும் பைத்தியம்போல் ஆக்கியது அந்தப் பாடல், மிகப்பெரிய ஹிட் அடித்தது! அதற்குக் காரணம் எம்.எஸ்.வியின் கர்னாடகச் சங்கீதப் புலமை மிகுந்த இசைக் கற்பனை மட்டுமல்ல; அந்தப் பாடலுக்கு ஜீவன் கொடுத்த சங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் கம்பீரமான குரலும்தான். பாடலுக்கான சூழ்நிலையை ஸ்ரீதர் கூறியதும் ‘ஆபோகி’ ராகத்தில் அந்தப் பாடலுக்கான மெட்டை மிகக் குறைந்த ஸ்ருதியில் கம்போஸ் செய்திருந்தார் விஸ்வநாதன்.
29chrcj_song recording ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடல் பதிவின்போது பாலமுரளி கிருஷ்ணா, கோபு, ஸ்ரீதர் rightமெட்டைக் கேட்டுப் பாராட்டிய ஸ்ரீதர், “பாலமுரளி கிருஷ்ணாவின் கம்பீரமான குரலுக்கு இதே ராகத்தில் இன்னும் கொஞ்சம் தூக்கிக் கொடுங்களேன்” என்றார். ஸ்ரீதர் கூறியதை ஏற்ற எம்.எஸ்.வி. ராகத்தை மாற்றாமல் பாலமுரளியின் குரல், அவரது பாடும் திறனுக்கு ஏற்ப உடனே ஸ்ருதியை மாற்றிக் கொடுத்ததுதான் நாம் தற்போதும் கேட்டுவரும் எவர்கிரீன் கிளாசிக் பாடலாக நீடித்த ஆயுளுடன் காற்றில் வலம் வந்துகொண்டிருக்கும் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’.
இந்தப் படத்துக்குப் பின் பாலமுரளி கிருஷ்ணா எந்த ஊரில் எந்தநாட்டில் கிளாசிக்கல் கச்சேரி நடத்தினாலும் அந்த மேடையில் சினிமா பாடல் என்பதைப் பொருட்படுத்தாமல் ‘தங்கரதம் வந்தது வீதியிலே’ பாடலைப் பாடினால்தான் ரசிகர்கள் அவரை மங்களம் பாட அனுமதிப்பார்கள் என்ற நிலை நீடித்தது.
செதுக்கிய ஸ்ரீதர்
இசையமைப்புக்கு முன் ஸ்ரீதரிடம் ‘கலைக் கோவில்’ படத்தின் கதையைக் கேட்ட ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.வி. படத்தைத் தாமே தயாரிக்க முன்வந்தார். அவருடன் கங்காவும் இணைந்துகொண்டார். கோபு துணை வசனம் எழுதினார். முத்துராமனுக்காக வீணை இசைத்தவர் வீணை வித்வான் சிட்டிபாபு. இதில் ஸ்ரீதர் எனும் தொழில்நுட்பக் கலைஞன் புதிய சிகரத்தைத் தொட்டார். ஒவ்வொரு காட்சியையும் கலைநயத்துடன் செதுக்கி உருவாக்கியிருந்தார். உதாரணத்துக்கு கச்சேரி ஒன்றில் வித்வானாக எஸ்.வி. சுப்பையா வாசிக்கும் வீணை இசையை, விரல்களுக்கும் வீணைக்குமான பந்தத்தை குளோஸ் அப் காட்சிகளால் படமாக்கித் தொகுத்திருந்தது திரையுலகை வியக்க வைத்தது.
‘காதலிக்க நேரமில்லை’ படத்துக்குப் பிறகு, நாகேஷ், ஸ்ரீதர் படங்களின் ஆஸ்தான நகைச்சுவை நடிகராகிவிட்டார். ‘கலைக் கோவில்’ படத்தில், அவருக்கு சபா காரியதரிசி வேடம். அவருக்கு ஜோடி ஜெயந்தி. நடிக்கும்போது செட்டில் இருக்கும் அனைவரையும் சிரிக்கவைப்பாரே தவிர, அவர் நடிப்பில் மட்டுமே கவனமாக இருப்பார். ஆனால், ‘கலைக் கோவில்’படப்பிடிப்பில் நாகேஷ் தன்னை மறந்து ஒரு வசனத்துக்காகச் சிரித்தார். கதைப்படி ராஜஸ்ரீ ஒரு நாட்டியக் கலைஞர். தனது சபா வளர்ச்சிக்காக அவர் நடனத்தை ஒப்பந்தம் செய்ய நாகேஷ் வருவார். ராஜஸ்ரீயை சந்திப்பார்.
அவரிடம் “எங்க சபா வளர்ச்சி நிதிக்காக நீங்க நடனம் ஆடணும்” என்பார். அதற்கு ராஜஸ்ரீ “ஓ..எஸ்! அதுக்கென்ன, ஆடிடலாமே. ஒரு பத்தாயிரம் கொடுத்துடுங்க” என்பார். அதிர்ச்சியடையும் நாகேஷ் “நான் சபா வளர்ச்சி நிதிக்காக ஆடச் சொல்றேன். நீங்க என் சபாவையே அழிச்சுடுவீங்க போல இருக்கே” என்பார். படப்பிடிப்பில் வயிற்றைப் பிடித்துக்கொண்டு “ டேய் கோபு...எப்படிடா இந்த மாதிரியெல்லாம் எழுதறே...” என்று நினைத்து நினைத்துச் சிரித்தார்.
ஆனால், படம் ஓடவில்லை. படத்தின் தயாரிப்பாளர் எம்.எஸ்.விக்கு லாபம் கிடைக்கவில்லை. ஸ்ரீதருக்கும் புகழை ஈட்டித் தரவில்லை. ‘கலைக் கோவில்’ படத்தை பற்றி விமர்சித்த பத்திரிகை ஒன்று, ‘யானைக்கும் அடி சறுக்கும்’ என்று எழுதியது. ஆனால் ஸ்ரீதர் சோர்ந்துவிடவில்லை ‘காதலிக்க நேரமில்லை’ பட விநியோகஸ்தர்கள் பலர், ‘கலைக் கோவி’லைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கியிருந்தனர். அவர்களுக்குப் பலத்த அடி என்பதை உணர்ந்து, கணிசமான தொகையைத் திருப்பி வழங்கினார் ஸ்ரீதர். “அந்தக் காலத்தில் ‘கிவ் அண்ட் டேக் பாலிசி’ இருந்தது. இப்போது அந்த உண்மைத் தன்மை இல்லை” எனும் கோபுவுக்கு சினிமாவில் பிஸியான நேரத்தில் சிவாஜியிடமிருந்து அழைப்பு வந்தது. ஆனால் அது சினிமாவுக்காக அல்ல!
(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு:tanthehindu@gmail.com
படங்கள் உதவி:ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago