செ
ன்ற வாரம் சற்றுக் கடினமான கேள்விதான். மத்தியமாவதியின் ஆரோகணத்தில் மட்டும் பெரிய நி (நி2) வந்தால் என்ன ராகம் எனக் கேட்டிருந்தேன். வழக்கமாக நூற்றுக்கணக்கான வாசகர்கள் பதில் அளித்துத் திணற அடிப்பார்கள். இந்த வாரம் சிலரே பதிலளித்தனர் அவர்களில் ஈரோடு ஞானப்பிரகாசம் மற்றும் யக்ஞ நாராயணன் ஆகியோருக்குப் பாராட்டுக்கள். அந்த ராகம் ‘பிருந்தாவன சாரங்கா’.
ஸ ரி2 ம1 ப நி2 ஸ் , ஸ் நி1 ப ம1 ரி2 ஸ என்பதே இதன் ஆரோகண அவரோகணங்கள். சிலர் அவரோகணத்தில் ஒரு சின்ன ‘க’வும் சேர்ப்பார்கள். சிலர் அதுதான் ஒரிஜினல் ‘பிருந்தாவன சாரங்கா’, க இல்லாமல் வருவது ‘ப்ருந்தாவனி’ என்பார்கள்.
ராக முத்திரை
மிகவும் இனிமையான ராகம் இது. முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை. எம். எஸ். பாடிக் கேட்டால் அந்த அரங்க மா நகரின் சொர்க்க வாசல் கதவுகளே நமக்குத் திறக்கும். ராகத்தின் பெயரையே கீர்த்தனையில் சொல்வதற்கு ராக முத்திரை என்று பெயர். அதில் தீட்சிதர் வல்லவர். இந்தக் கீர்த்தனையிலும் ராகத்தின் பெயரை அவ்வாறு பிருந்தாவனத்தின் மான்களுக்கெல்லாம் தலைவனே (சாரங்கா – மான்) எனப் பொருள் படும்படி அமைத்திருப்பார். மான் போல் குதிக்கும் இந்த ராகத்தில் பெரியசாமி தூரன் இயற்றிய ‘கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்’ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.
திரை இசையில் மிகவும் பிரபலமானது இந்த ராகம். கொஞ்சம் இந்துஸ்தானி ஜாடையும் இதில் வரும். ஷெனாயில் வாசிக்க ஏற்றதாக இருப்பதால் பல திரைப்படப் பின்னணி இசையில் வரும். இந்த ராகத்தில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ (1959) திரைப்படத்தில் வரும் ‘சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே’ என்ற பாடல் மிகவும் இனிமையானது.
எண்ணிக்கையில் குறைவாகப் பாடினாலும் தரத்தில் நிறைவாகப் பாடிய எஸ். வரலட்சுமியின் குரலில் ஒலிக்கும் இப்பாடலுக்கு இசையமைத்தவர் ராகமேதை ராமநாதன் அவர்கள். ஆரம்பத்தில் ஒரு ஆலாபனை பின்னர் இடையிடையே ஷெனாய் ஒலி என இந்த ராகத்தின் ஜாடையை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
கோவர்த்தன ஆவர்த்தனம்
லேசான இந்துஸ்தானி ஜாடையில் மென்மையாகப் பாட வேண்டும் என்றால் பி.பி.ஸ்ரீநிவாஸ் இல்லாமலா? ‘இதயத்தில் நீ’ (1963) என்ற படத்தில் ஒரு பிரமாதமான பாடல். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இந்த ராகத்தில் அமைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் ஒரு ஹம்மிங் மூலம் பிபிஎஸ் இந்த ராகத்தை ஜாடை காட்டி அற்புதமாகப் பாடியிருக்கும் அந்தப் பாடல் ‘பூ வரையும் பூங்கொடியே’. வாலியின் ஆரம்ப காலப் பாடல்களுள் ஒன்று.
‘என் தம்பி’ (1968) என்ற சிவாஜியின் படம். எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்தது. அதில் இடம்பெற்ற அருமையான பாடல் ‘முத்து நகையே உன்னை நானறிவேன்’, டி.எம்.எஸ். பாடியது. இடையிடையே ஆஹா, ஓஹோ எனப் பாடலில் வருவது போன்றே நாமும் பாடலைக் கேட்டால் ஆஹா, ஓஹோ எனப் பாராட்டுவோம்.
கோவர்த்தனம் என்ற இசையமைப்பாளர். ‘பட்டினத்தில் பூதம்’ போன்ற சில படங்களுக்கே இசையமைத்தவர். அவரது சிறுவயதிலேயே நாகஸ்வர மேதை ராஜரத்தினம்பிள்ளை வாசிக்கும்போது உடனுக்குடன் ஸ்வரங்களைச் சொல்லி அவரிடம் பாராட்டுப் பெற்றாராம். அவர் இசையமைத்த படம் ‘பூவும் பொட்டும்’ (1968). அதில் ஒரு அருமையான பாடலை பிருந்தாவன சாரங்காவில் அமைத்திருப்பார். ஷெனாயைப் போன்றே நாகஸ்வரத்திலும் இனிமையான ஒரு ஆலாபனையுடன் இப்பாடல் தொடங்கும். பி.சுசீலாவின் தேன்குரலில் வரும் ஹம்மிங்களுடன் டி.எம்.எஸ். பாடிய பாடல் ‘நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான்’ என்பது. உண்மையிலேயே பரமண்டலத்திலிருந்து தேவன் பாடும் பாடலைக் கேட்பது போன்ற அனுபவத்தைத் தரும் பாடல் அது.
மெட்டின் இனிமைக்கு மெல்லிசை மன்னர்
இந்த ராகத்தின் மாஸ்டர் பீஸ் என்றால் அது ‘படித்தால் மட்டும் போதுமா?’வில் (1962) அமைந்த ஒரு பாடல்தான். இந்த ராகத்தில் இரண்டு நி எனப் பார்த்தோம். சிறியது ஒன்று பெரிய நி மற்றொன்று. அது போல் இரண்டு வேறு விதமான பாடகர்கள். இரண்டு வேறு விதமான நடிகர்கள். பாத்திரங்கள். படத்தில் சிவாஜி கொஞ்சம் முரட்டுத்தனமானவர், பாலாஜி மென்மையானவர். இருவரும் மற்றவருக்காகப் பெண்பார்த்து விட்டு வந்து பாடும் பாடல். இந்த ராகத்திலும் இரண்டு நிஷாதங்கள் (நி).
கம்பீரமாகப் பாடும் டி.எம்.எஸ்., மென்மையாகப் பாடும் பி. பி. எஸ். என அமைந்திருப்பது தற்செயலான விஷயமாகத் தோன்றவில்லை. ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற அந்தப் பாடல் இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல்களிலேயே முதன்மையானது எனலாம். மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அமைந்த பாடல். வயலின், ஷெனாய், குழல் என இந்த ராகத்தின் பல்வேறு வடிவங்களைக் காட்டியிருப்பார்கள். எம். எஸ். வி. தனது பாடல்களில் ராகத்தின் இலக்கணத்தை ராணுவ ஒழுங்குபோல் கடைப்பிடிக்க மாட்டார்.
இலக்கணத்தைவிட மெட்டின் இனிமைதான் முக்கியம் என்பது அவரது பாணி. இப்பாடலிலும் ‘நான் பார்த்த பெண்ணை’ என்ற இடத்தில் வேறு ஸ்வரங்கள் வந்தாலும் இனிமை கெடாமல் இருக்கிறது.
அதே மெல்லிசை மன்னர் பிற்காலத்தில் பொல்லாதவன் (1980) என்ற படத்தில் சுசீலாவின் குரலில் ‘சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே’ என்ற இனிய பாடலை இந்த ராகத்தில் அமைத்திருப்பார்.
சரி. இசை ஞானிக்கு வருவோம். பல விதமான பாடல்களை இந்த ராகத்தில் அமைத்திருக்கிறார். கல்லுக்குள் ஈரமாய் வந்த பாடல் ஒன்று உண்டு. அது என்ன பாடல் ? க்ளூ: அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கல்லுக்குள் ஈரம் இல்லை.
தொடர்புக்கு: ramsych2@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago