“இ
வ்ளோ சீக்கிரம் தமிழ் பேசக் கத்துக்கிட்டு வர்றீங்களே… டியூஷன் கிளாஸுக்குத்தானே போறீங்கன்னு சிலர் கேட்குறாங்க. அதெல்லாம் எதுவுமே இல்லை. படப்பிடிப்பில் தமிங்கிலீஸ்ல கொடுக்குற வசன பேப்பர்ஸும், ஸ்பாட்ல என்னைச் சுத்தி இருக்குற தமிழ் ஃபிரெண்ட்ஸும்தான் காரணம்’’ என்கிறார் கோடம்பாக்கத்தின் ‘ஹாட் பேப்’ ஆகியிருக்கும் சாயிஷா சைகல்.
‘வனமகன்’ படத்தை முடித்த கையோடு ‘கஜினிகாந்த்’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘ஜூங்கா’ என மூன்று படங்களில் நடித்துவிட்டு அடுத்தடுத்து கதைகேட்டுக்கொண்டிருந்த சாயிஷாவுடன் ஒரு சந்திப்பு.
டான்ஸர், மாடல், மும்பை வாசம் என நவீன வாழ்க்கை வாழ்ந்து வரும் உங்களுக்குக் கிராமத்து வாழ்க்கை பரிச்சயமே இல்லை. ‘கடைக்குட்டி சிங்கம்’ முழுக்க கிராமத்துப் படம். எப்படியிருந்தது அனுபவம்?
இந்தப் படத்துக்காகத் தென்காசி, குற்றாலம், புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பசுமையான கிராமங்களில் கொஞ்ச நாட்கள் வாழ்ந்தேன். படத்துல நடிக்கும் அனுபவத்தோடு ‘பார்டர் பரோட்டா’ மாதிரி நான் இதுவரைக்கும் சாப்பிடாத உணவு வகைகள், தங்குற இடங்கள்னு ஷூட்டிங் முழுக்க அப்படி ஒரு சந்தோஷம். அதோடு ஒவ்வொரு நாள் ஷூட்டிங்லயும் என்னோட கேரக்டருக்காக என் நேச்சுரல் ஸ்கின்னைக் கொஞ்சம் டல் மேக்கப் போட்டு பிரவுன் நிறத்துக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. இப்படி எல்லாமே புதுசா இருந்தது. படத் தயாரிப்பாளர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ், கோ-ஆக்டர் கார்த்தி என ஒவ்வொருத்தரும் அப்படி ஒரு அன்பு காட்டினாங்க. திரும்பவும் அந்த மாதிரியான நாட்கள் அமையுமான்னு தெரியல. நல்ல அனுபவம்.
படத்தில் மூன்று நாயகிகள். உங்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறதா?
மற்ற இருவரும் கார்த்தியின் உறவுக்காரப் பெண்களாக வருகிறார்கள். காதல், திருமணம் உள்ளிட்ட பகுதிகள் எல்லாம் என் மேலதான் ட்ராவல் ஆகுது. அந்த அளவுக்குக் கதையில் எனக்கு முக்கியத்துவம் இருக்கு. அதேபோல எல்லோருக்குமே நடிக்க வாய்ப்பும் சூழலும் உள்ள திரைக்கதை. இதில் போட்டிக்கே வேலையில்லை.
உங்களது நடிப்பில் அடுத்தடுத்து வர உள்ள ‘கஜினிகாந்த்’, ‘ஜூங்கா’ படங்கள் என்ன மாதிரியானவை?
‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு முன்பே ‘கஜினிகாந்த்’ வெளிவர வாய்ப்பு உள்ளது. ‘வனமகன்’ தொடங்கி தமிழ்ல இதுவரை நடித்த ஒவ்வொரு படமுமே ஒவ்வொரு களம். அதுவே எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு. ‘கஜினிகாந்த்’ முழுக்க காமெடி படம். இயக்குநர் சந்தோஷ் 27-ல இருந்து 30-க்குள்ள இருக்குற இளைஞர். ஷூட்டிங் முழுக்க எனர்ஜியா, ஜாலியா இருந்தது. படத்துல சூப்பர் மாடல் மாதிரி வர்றேன். அந்த ஏரியா எனக்கு ரொம்ப ஃபெமிலியர். வெஸ்டெர்ன் காஸ்ட்யூம்ஸ், நடிப்புக்கு வேலைன்னு படத்துல என்னோட பகுதி நல்லாவே இருக்கும்.
‘ஜூங்கா’ படத்துல என்னோட பகுதி முழுக்க பாரீஸ், ஆஸ்திரியா, ஜார்ஜியா பகுதியிலதான் ஷூட் பண்ணினாங்க. இந்தியாவுல ஒரு நாள் மட்டும்தான் படப்பிடிப்பு. ஆக்ஷன், காமெடி படம். குழந்தைகளுக்கும் பிடிக்கும் விதமா செம கலாய் கொண்ட கதை. விஜய்சேதுபதி, இயக்குநர் கோகுல் இருவரும் ஹாட்டான டீம். ஷூட்டிங் ஸ்பாட்ல அப்படி நெருப்பா இருப்பாங்க. ‘ஜூங்கா’வை மறக்கமாட்டேன்.
உங்களைப் போன்ற கதாநாயகிகள் தமிழில் அறிமுகமாகி வெற்றிபெற்றதும் இங்கேயே முதலில் முத்திரையைப் பதிக்காமல் உடனே தெலுங்கு, மலையாளம் என இடம்பெயர்ந்து விடுகிறார்களே?
எனக்கு இப்போதான் இங்க சரியான படங்கள் அமையத் தொடங்கியிருக்கு. பிடிச்ச மாதிரி கதைகளோட வர்றாங்க. இதே மாதிரி தொடர்ந்து அமைந்தால் நிச்சயம் தமிழிலேயே கவனம் செலுத்தலாம். ஆனா தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்த மூன்று மொழிப் படங்களையும் ஏன் பிரிச்சுப் பார்க்கனும். மூணு ஸ்டேட்டிலும் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மக்கள், கல்சர், அவங்க காட்டுற அன்பு எல்லாமே சேம். நடிப்பது என் வேலை. ரசிகர்களுக்கு என்னைப் பிடிச்சா போதும். மொழி, மாநிலம் பற்றித் தயக்கம் காட்ட மாட்டேன்.
இங்கே உள்ள முன்னணி கதாநாயகிகளில் யாருடைய இடத்தை பிடிக்க ஆசை?
நம்பர் 1, நம்பர் 2 இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதைக்கு நல்ல கதைகள் அமையுது. அதுபோதும். இதே மாதிரி எல்லா நேரத்திலும் ஓடிக்கொண்டிருக்க முடியாமான்னு தெரியல. அதனால அந்தமாதிரி அட்டவணை, நம்பர் எல்லாம் வைத்துக்கொண்டு நடிப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை.
‘விஜய் 62’, கே.வி.ஆனந்த், சூர்யா இணையும் படம் ஆகியவற்றில் நீங்கள்தான் நாயகி என்று செய்தி வெளியானதே?
விஜய் படத்தில் நான் இருப்பதாக வந்த தகவலை நானும் கேள்விப்பட்டேன். அப்படி யாரும் என்னை அணுகவில்லை. சூர்யா பட விஷயத்தில்கூட இப்போதைக்கு நான் எதுவும் சொல்ல முடியாது.
சினிமாவுக்கு வந்தாகிவிட்டது. இந்நேரம் சினிமாவுக்குள்ளிருந்தே உங்களுக்குக் காதல் கடிதங்கள் வந்திருக்குமே?
எனக்கு இப்போது வயது 20. அதற்குள் காதல், திருமணம், பற்றியெல்லாம் எதுக்கு யோசிக்கணும். அதெல்லாம் எங்கோ தூரத்துல இருக்குற விஷயம். நான் ஊசி மாதிரி, ஊசி காதுல ஒட்டகத்தை நுழைக்க முடியாது. இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான்.
உங்க ஃபிட்னெஸ் ரகசியம்?
படப்பிடிப்பு இல்லைன்னா 3 மணி நேர நடனம். அதுதான் என் பிட்னெஸ் ரகசியம். ஷூட்டிங் நாட்கள்ல குறைந்தது 45 நிமிடங்கள் வொர்க் அவுட் இருக்கும். மற்றபடி சாப்பாட்டுல எல்லாம் எந்தக் குறையும் வைக்க மாட்டேன். நான் அசைவப் பிரியை. பிரியாணி கொடுத்தா வெளுத்துருவேன்.
படங்கள்: சுரேஷ் சுகு
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago