இயக்குநரின் குரல்: காவல் நிலையம் எனும் ஆடுகளம்!

By ஆர்.சி.ஜெயந்தன்

ஒரு படத்தில் எத்தனை நகைச் சுவை நடிகர்கள் இருந்தாலும் தனது திறமையால் தனித்துத் தெரிபவர் சதீஷ். தற்போது, ‘ஓ மை கோஸ்ட்’, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’, ‘வித்தைக்காரன்’ என வரிசையாக நாயகனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த வரிசையில், சாச்சி எழுதி, இயக்கியிருக்கும் ‘சட்டம் என் கையில்’ படத்தில் கதாநாயகனாக நடித்து முடித்திருக்கிறார். படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

‘சட்டம் என் கையில்’ படத்தின் தலைப்பை எப்படிப் பெற்றீர்கள்? - கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில், டி.என்.பாலு எழுதி, இயக்கித் தயாரித்து 1978இல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘சட்டம் என் கையில்’. டி.என்.பாலு சாரின் மகன் ராஜேந்திரனை நேரில் சந்தித்துத் தலைப்பைக் கேட்டோம். அவர் கதையைத் தெரிந்துகொள்ள விரும்பினார். சொன்னோம். “கச்சிதமாகப் பொருந்தக்கூடிய கதைக்குத்தான் தலைப்பைக் கேட்கிறீர்கள். மகிழ்ச்சியுடன் கொடுக்கிறேன்” என்று வாழ்த்திவிட்டுக் கொடுத்தார்.

சாச்சி

என்ன கதை? சதீஷுக்கு எந்த வகையில் பொருந்துகிறது? - நகைச்சுவை - குணச்சித்திரம் ஆகியவற்றின் சிறந்த கலவை சதீஷ். வலுவான கதாபாத்திரம், கதைக்களம் அமைந்தால் தாமொரு ‘ஹீரோ மெட்டிரியல்’ என்பதை அட்டகாசமாக நிரூபிக்கக்கூடியவர். அவரை மனதில் வைத்தே இந்தக் கதையை எழுதினேன். 80 சதவீதக் கதை ஏற்காட்டில் உள்ள காவல் நிலையத்தில் நடக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினார் என்கிற குற்றச்சாட்டுடன் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்படுகிறார் சதீஷ்.

அவர் செய்த குற்றத்துக்கான அபராதத் தொகையை வசூலித்துக்கொண்டு அவரை போலீசார் விட்டிருக்கலாம். ஆனால், அவர் பிடிபடும்போது செய்த ஒரு காரியத்துக்காக அவருக்குப் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று அந்தக் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் வலுக்கட்டாயமாக அவரை அழைத்து வருகிறார்.

அச்சமயத்தில் காவல் நிலையத்துக்கு வரும் ஓர் எதிர்பாராத நெருக்கடியில் சதீஷ் என்னவாகிறார்? சதீஷ் யார்? அவரது பின்னணி என்ன? அந்தக் காவல் நிலையத்தின் உள்ளடிகளை மீறி அங்கிருந்து எப்படி அவர் வெளியே வருகிறார் என்பதுதான் கதை. இதுவொரு சூப்பர் ஃபாஸ்ட் க்ரைம் த்ரில்லர்.

இதில் கதாநாயகனுக்கான சவால் என்ன? - இன்றைக்கு ஊடகங்கள் வழியாகக் குரலற்ற எளியவர்கள் தங்கள் பிரச்சினையைப் பொதுவெளியில் தெரியப்படுத்த முடியும். ஆனால், அதற்குத் தீர்வு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும்போது ‘நமக்கேன் வம்பும்’ என உறவினர்களும் நண்பர்களும் கூட கைவிட்டு விலகி நிற்க விரும்பும் காலம் இது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு சாமானியன் தன்னைத் தானே மீட்டுக்கொள்ளப் போராட வேண்டும். அப்படியொரு போராட்டம்தான் சதீஷுடையது. அதில் அவர் காட்டும் புத்திசாலித்தனங்கள் ரசிகர்களை ‘சூப்பர்’ என்று சொல்ல வைக்கும்.

படக்குழு குறித்து? - படத்தில் கதாநாயகி கிடையாது. ஆனால், வித்யா பிரதீப் இருக்கிறார். அஜய் ராஜ், பாவெல் நவகீதன், மைம் கோபி, ரித்விகா, கே.பி.ஒய்.சதீஷ், பவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவையும் மார்டின் டைட்டஸ் படத்தொகுப்பையும் கையாண்டிருக்கிறார்கள். எம்.எஸ்.ஜோன்ஸ் இசையமைத்திருக்கிறார். பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், அனந்த கிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்யநாராயணன் ஆகியோர் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

- jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE