திரைப் பார்வை: போகுமிடம் வெகுதூரமில்லை | சற்றும் எதிர்பாரா ஒரு பயணம்!

By திரை பாரதி

கதவுகள் அடைக்கப்பட்ட இருண்ட திரையரங்கினுள் ரசிகன் அமரும் ஒவ்வொரு முறையும் தனது வெளி யுலகை முற்றாக மறக்கச் செய்து, திரையில் விரியும் உலகில் அவனை உலவவைப்பதே மிகச் சிறந்த திரை அனுபவம். அப்படியோர் அசலான உணர்வைக் கடைசி நொடிவரை தரும் புதிய தலைமுறை சினிமா இது.

சென்னையில் சாலை விபத்தொன்றில் உயிரிழக்கிறார் ஒரு முதியவர். அவரது சடலத்தை எடுத்துக்கொண்டு, இறந்தவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க அமரர் ஊர்தியில் திருநெல்வேலி நோக்கிப் புறப்படுகிறார் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான குமார் (விமல்). வழியில் லிஃப்ட் கேட்டு ஏறிக் கொள்கிறார் நடுத்தர வயதுக்காரரான நளின மூர்த்தி (கருணாஸ்).

அதிகம் பேச விரும்பாத குமார், கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். தான் செய்யும் கலைத் தொழில் சார்ந்து அதிகம் பேசிக் கொண்டேயிருக்கிறார் நளின மூர்த்தி. இந்த இரண்டு முரண் மனிதர்கள் மேற்கொள்ளும் பயணத்தின் நடுவழியில் எதிர்பாராத திடீர் பிரச்சினை. அதைத் தாண்டி, இறந்தவரின் சடலத்துக்காகக் காத்திருப்ப வர்களிடம் அதைக் கொண்டுபோய் சேர்த்தார்களா, இல்லையா என்பதுதான் கதை.

இவ்வளவுதானா கதை என்று நீங்கள் இறுமாந்து இருந்துவிட்டீர்கள் என்றால், ஒரு விறுவிறுப் பான திரைப்படம் கொண்டிருக்கும் உயர்ந்த கதாபாத்திரங்களையும் அது கொண்டிருக்கும் விலைமதிக்க முடியாத தருணங்களையும் நீங்கள் இழந்துவிடுவீர்கள்.

இத்திரைக்கதையை எழுதியிருக்கும் அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா, ஓர் இடத்திலாவது தர்க்கப் பிழையைத் தவறவிட்டிருப்பார் என்று எவ் வளவு துருவித் துருவி பார்த்தும் கிடைக்கவில்லை.

தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு நடுவே, சக மனிதனின் பிரச்சினைக்குத் தம்மால் தீர்வளிக்க முடியும் என்றால் அதைச் செய்யத் துணிவதுதான் மனிதம்.

அது ஒரு சிறு துரும்பை நகர்த்தும் செயலாகக்கூட இருக்கலாம். அதை, அவல நகைச்சுவை, உறவுகளுக்கு இடையிலான உணர்வுப் போராட்டம், காதலின் உன்னதம், கிராமியக் கலையின் அந்திமம் எனப் பல இழைகளைத் தொட்டுக் கதை பின்னியிருக்கும் மைக்கேல் கே.ராஜா போன்ற புதிய நீரூற்றுகளே தமிழ் சினிமாவில் ஈரம் பாய்ச்சக்கூடிய நம்பிக்கை நட்சத்திரங்கள்.

வசனம் பேசாமல் முகபாவங்கள் வழியாக குமார் கதாபாத்திரத்தை நமக்கு நெருக்கமாக்கிவிடுகிறார் விமல். நளின மூர்த்தி கதாபாத்திரம் கருணாஸின் திரைப் பயணத்தில் அவருக்குப் பெரும் பொக்கிஷம். அதில் வாழ்ந்திருக்கிறார். வேல.ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன் போன்ற பெரிய நடிகர்களைச் சில துண்டுக் காட்சிகளுக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயக்குநரின் புத்திசாலித்தனம் திரைக்கதையின் ஆன்மாவுக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

இப்படியொரு கதையைத் தயாரிக்க முன்வந்த சிவா கில்லாரி, உணர்வின் இசையால் வருடியிருக்கும் என்.ஆர். ரகுநந்தன், ஒரு பயண வழித் திரைப் படத்துக்குள் பார்வையாளரை உள்ளிழுக்கும் ஒளிப்பதிவைத் தந்திருக்கும் டெமில் சேவியர் எட்வர்ட், இரண்டு இடங்களில் நகரும் கதையின் தொடர்ச்சியைத் தனது படத்தொகுப்பின் வழியாக உயிரூட்டியிருக்கும் எடிட்டர் எம்.தியாகராஜன் ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சிறிய வாழ்க்கைப் பயணத்தில் நாம் சென்றடைய வேண்டிய தூரம் மரணமல்ல, ‘மனிதம்’ என்பதைக் கண்டடையும்போது, அது மகத்தான தருணங்களை உள்ளடக்கிய பயணமாகிவிடுகிறது. அதை வாழ்க்கைக்கு நெருக்கமான கதாபாத்திரங்கள் மூலம் விறுவிறுப்பாக விரித்து நம் மனதை வரித்துக் கொள்கிறது இந்தப் படைப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE