‘தேன் நிலவு’ படப்பிடிப்புக்காக பங்களா போன்ற பெரிய படகு வீடுகளை ஒப்பந்தம் செய்திருந்தது சித்ராலயா. பெரிய பெரிய படுக்கையறைகள், குளியலறை, சமையலறை, பால்கனி, மாடி என்று ஒரு பெரிய பங்களா மோஸ்தரில்தான் அந்த இரண்டு படகு வீடுகளும் இருந்தன. ஒரு படகு பங்களா படப்பிடிப்புக்கு உபயோகிக்கப்பட்டது. மற்றொரு படகு பங்களாவில் நடிகை, நடிகையர், வல்லுநர்கள், நடிகை நடிகையரின் குடும்பங்கள் எல்லாம் தங்கியிருந்தன. ஜெமினி கணேசனின் குடும்பம், நம்பியாரின் மனைவி, யதுகிரி அம்மாள், எல்லாரும் அந்த மற்றொரு படகு பங்களாவில் தங்கி இருந்து படப்பிடிப்பைக் கண்டு வந்தனர்.
வாட்டர் ஸ்கீயிங் செய்தபடி ஜெமினியும் வைஜெயந்தியும் ‘ஓகோ எந்தன் பேபி’ டூயட் பாடலில் நடிக்க, ஸ்ரீநகரின் தால் ஏறி மிகவும் ஆழமானது என்பதால் எச்சரிக்கையுடன் படமாக்கி முடித்தார் ஸ்ரீதர். பிறகு படகு விட்டிலிருந்து வைஜயந்தியை ஏற்றிக்கொண்டு துடுப்புப் படகில் ஜெமினி செல்வதுபோன்ற காட்சியைப் படமாக்கினார்.
மற்றொரு படகு பங்களாவில் தங்கியிருந்த ஜெமினி கணேசனின் மனைவி, இந்தக் காட்சியின் படப்பிடிப்பைக் காண்பதற்காக வேகமாகப் படி ஏறி படகின் மேல்தளத்துக்கு விரைய அப்போது நிலை தடுமாறி, படகு வீட்டிலிருந்து தால் ஏரியினுள் விழுந்து விட்டார். அவர் விழுந்த பகுதி ஆழமான பகுதி. அவர் தண்னீரில் விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை. அனைவரின் கவனமும் படப்பிடிப்பில் இருந்தது.
நிஜ நாயகன்
ஆனால் ஜெமினி கணேசன் கவனித்துவிட்டார். படப்பிடிப்பில் இருந்தவர், சடாரென்று தண்ணீருக்குள் குதித்து நீந்திச் சென்று மனைவியின் கூந்தலைப் பற்றி இழுத்து வந்து படகு பங்களாவினுள் ஏற்றினார். எதிர்பாராத இந்தச் சம்பவத்தால் ஸ்ரீதர் பதைபதைத்துப் போனார். ஒருமணிநேரம் மனைவியின் அருகில் இருந்த ஜெமினி, ஒன்றுமே நடக்காதது போல வந்து, “நான் ஷாட்டுக்கு ரெடி!” என்றார். “ஜெமினி கணேசன் காதல் மன்னன் மட்டுமல்ல. தேவைப்பட்டால் நிஜ வாழ்வில் ஆக்ஷன் ஹீரோதான். அதன் பிறகு, அந்தக் காட்சியில் பிரமாதமாக நடித்துக் கொடுத்தார்!” என்கிறார் கோபு.
ஒரு வழியாக இரண்டு மாதம் காஷ்மீரில் தங்கி, தேனிலவு படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டுத் திரும்பியது சித்ராலயா படக்குழு. ரிலீஸ் தேதியை ஸ்ரீதர் ஏற்கெனவே அறிவித்துவிட்டதால் சென்னை திரும்பியதுமே எடிட்டிங், டப்பிங், ரீரெக்கார்டிங் பணிகளை முடுக்கிவிட்டார். அப்போது, பி. மாதவன், ஸ்ரீதரிடம் இணை இயக்குநராக பணியாற்றி வந்தார்.
உதவி இயக்குநரான சி. வி. ராஜேந்திரன் எடிட்டிங் பணிகளைக் கவனித்து வந்தார். ஒரு நாள் எடிட்டிங் அறைக்கு வேகமாக வந்த ஸ்ரீதர், அங்கிருந்த சி.வி.ராஜேந்திரனிடம், “ஜெமினி-வைஜயந்திமாலா காதல் காட்சி ஒன்றில், ஓடைக்கு அருகே எடுத்த வைஜயந்தியின் க்ளோஸ் -அப் ஷாட் ஒன்றை உடனே பார்க்க வேண்டும்” என்று கேட்டார் ‘க்ளோஸ் ஷாட்’டின் காதலரான ஸ்ரீதர். “அதைத்தான் தேடிகிட்டு இருக்கோம்!” என்று ஸ்ரீதரிடம் பதில் கூறினார் ராஜேந்திரன். “என்ன நடக்குது இங்கே. பீப்பாயில குப்பையா பிலிம் போட்டு வச்சிருக்கீங்க! எப்போ கிடைக்கும் அந்த க்ளோஸ் ஷாட்?” என்று சத்தம் போட்டுவிட்டு ரீரெக்கார்டிங் கிளம்பினார்.
04CHRCJGEMINIWITHHISWIFEANDDAUGHTER மனைவி பாப்ஜியுடன் ஜெமினி கணேசன் கிடைக்காத ஷாட்டும் ஷார்க் ஸ்கின் பேண்ட்டும்
படத்தின் இசையமைப்பாளர் ஏ.எம். ராஜா. ‘ஓஹோ எந்த பேபி, பாட்டு பாடவா’ போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைப் போட்டுக்கொடுத்ததோடு, பின்னணி இசையிலும் பெயர் வாங்கிவிட வேண்டும் என்ற துடிப்புடன் ரீரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார். ஸ்ரீதர் அதை மேற்பார்வை செய்தபடி சில திருந்தங்களைச் சொல்லிக்கொண்டிருந்தபோது சவுண்ட் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தார் சி.வி.ராஜேந்திரன்.
அவரைப் பார்த்த ஸ்ரீதர், “நான் கேட்ட வைஜயந்தியின் கிளோஸ் அப் ஷாட் கிடைச்சுடுச்சா, பார்க்க வரலாமா?” என்று கேட்க, ராஜேந்திரன் தயங்கியபடி, “இன்னும் கிடைக்கலை. தேடிக்கிட்டு இருக்கோம்!” என்று சொன்னார். அப்போது ஸ்ரீதரின் கோபம் உச்சத்துக்குச் சென்றது. “என்ன வேலை செய்யறீங்க? ஷார்க் ஸ்கின் பேண்ட் (Shark Skin pant) போட்டுக்கிட்டு வரதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஆனா வேலை செய்ய வக்கில்லை”என்று ஸ்ரீதர் வெடுக்கென்ற வார்த்தைளை வீச வெலவெலத்துப்போன ராஜேந்திரன் அங்கிருந்து துள்ளிக் குதித்து வெளியேறும் முன் இசையமைப்பாளர் ஏ.எம். ராஜாவைக் காணவில்லை.
ஸ்ரீதர் ‘அதுக்குள்ள மியூசிக் டைரக்டர் பிரேக் எடுக்கப்போயிட்டாரா, கூப்பிடு கோபு’ என்று ஸ்ரீதர் கத்த, வெளியே ஓடிவந்தால் தன் காரின் கதவைத் திறந்துகொண்டிருந்தார் ஏம்.எம்.ராஜா. “என்ன மிஸ்டர் ராஜா! என்னாச்சு? திடீர்னு கிளம்பிடீங்க” கோபு ஓடிப்போய் அவரை வழிமறித்தார். “என்ன கோபு சார்! உங்க டைரக்டர் இப்படிப் பேசிட்டாரு?” என்று ராஜா பொங்கினார்.
எதிர்பாராமல் அவரது பேண்டைக் கவனித்த கோபுவுக்கு பகீர் என்றது. ஏ. எம். ராஜாவும் ஷார்க் ஸ்கின் பேண்ட் அணிந்திருந்தார். “ஷார்க் ஸ்கின் பேண்ட் போட்டவனுக்கு வேலை செய்ய வக்கில்லைனு டைரக்டர் எப்படிச் சொல்லலாம்?” ராஜா கேட்டார். “என்ன சார் நீங்க! அவரோட மாமா பையன் ராஜேந்திரன் சொந்தக்காரன்ங்கிற உரிமையில அவர் எதோ சொன்னார். நீங்க அதைத் தப்பா புரிஞ்சுகிட்டீங்க.?” என்று கோபு சமாதானம் செய்தார்.
“ஸ்ரீதர்தான் என்னை இசையமைப்பாளரா ஆக்கினார். அதற்கு நான் அவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனா, அவர் அடித்த கமெண்ட்தான் என்னால பொறுத்துக்கொள்ள முடியல!” என்று குழந்தைபோல குமுறியவரைக் கெஞ்சிக் கூத்தாடி, மீண்டும் சவுண்ட் ஸ்டுடியோவுக்குள் அழைத்து வந்தார் கோபு.
ரகசியமாக ஸ்ரீதரிடம் நடந்ததைக் கூற, “அய்யோடா சாமி! நான் சவுண்ட் ஸ்டூடியோ பக்கமே வரல, நீ அவரோட உட்காரு. நான் எடிட்டிங் பார்க்கிறேன்” என்று சங்கோஜத்துடன் நழுவியதைக் கண்ட ஏ.எம்.ராஜா முகத்தில் இப்போது பெப்பர்மிண்ட் மிட்டாய் கிடைத்த குழந்தையின் குதூகலம்.
அங்கிருந்து எடிட்டிங் அறைக்குச் சென்ற ஸ்ரீதர், அங்கு அனைவரும் இன்னமும் எதையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், ராஜேந்திரனைக் கேட்டார். “நான் கேட்ட அந்த 14- வது ரீல் க்ளோஸ் அப் ஷாட்டைத் தானே தேடறீங்க?” மாதவன் கூலாக ஸ்ரீதரைப் பார்த்தார். “அதைத் தேடலை சார், 14- வது ரீலையே காணோம். பிலிம் பீப்பாயினுள் எங்கேயோ மாட்டிக்கிட்டு இருக்கு!” என்றார்.
“ரீல் மாட்டிக்கிட்டு இருக்கோ இல்லையோ, சென்சார் தேதியைச் சொல்லிட்டு, நான்தான் உங்க கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கேன்..!” என்றபடி தலையைத் தன் இரண்டு கைகளாலும் கலைத்துக்கொண்ட ஸ்ரீதர், அதை ஒதுக்க மறந்து பரட்டைத் தலையுடன் கிளம்பிப் போனதை பார்த்த கோபுவால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சிரிப்பு தொடரும்
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
இதை மிஸ் பண்ணிடாதீங்க...
‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் புகைப்படங்கள்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago