திரைப் பார்வை: வாஸ்கோடகாமா | நல்லது செய்தால் சிறை!

By திரை பாரதி

எப்போதாவது வெகு மக்கள் சினிமாவில் சோதனை முயற்சி செய்யப்படுவது உண்டு. தமிழ்நாட்டின் தற்போதைய ஆட்சியதிகார அரசியல், சமூக நிலை ஆகியவற்றை ‘ஸ்பூஃப்’ செய்யும் விதமாக ஒரு ‘உடோபியா’ உலகத்தைச் சித்தரித்து அதைப் பார்வையாளர்களிடம் சோதனை செய்ய முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆர்.ஜி.கே.

அறம் தொலைத்து வாழும் அயோக்கி யர்கள் அதிகமாகவும் அவர்கள் செய்யும் அட்டூழியங்களைச் சகித்துக்கொள்ள முடியாத யோக்கியர்கள் குறைவாகவும் வாழும் கற்பனை உலகுதான் கதைக் களம். அதில் நாயகன் வாசுதேவன் (நகுல்) ஒரு யோக்கியன். தங்கச் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் 4 பேரைப் போலீஸிடம் பிடித்துக் கொடுத்த காரணத்துக்காக ‘லாக் அப்’பில் வைக்கப்படுகிறான்.

அவனைப் பிணையில் எடுக்க வரும் அவனுடைய அண்ணன் மகாதேவனிடம் “ரோட்ல போற வர பொம்மளைங்ககிட்ட நிம்மதியா செயினைக் கூட அடிக்க விடமாட்டேங்கிறான் சார் உங்க தம்பி.. அப்படியே உங்க அப்பா மாதிரி யோக்கியனா இருக்கிறான். வாஸ்கோடகாமாவுக்கு அனுப்பி வைக்க வேண்டிய ஆள் இவன். இந்தச் சமூகத்துக்கு லாயக்கு இல்லை” என்கிறார்.

ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊரிலிருந்து மாநகரத்துக்கு வரும் வாசுவுக்கு ‘அயோக்கிய வாசிகள் குடியிரு’ப்பில் ‘இவன் கெட்டவன்’ என்று பரிந்துரை செய்து வாடகைக்கு வீடு பிடித்துக் கொடுக்கிறார் அவனுடைய சித்தப்பா முனீஸ்காந்த். வீட்டின் உரிமையாளருடைய மகளோ, வாசுவின் பள்ளிப் பருவத்துத் தோழி. அதை இருவரும் அடையாளம் கண்டுகொண்டு காதலித்து திருமணம் வரை வந்துவிடுகிறார்கள்.

ஆனால் திருமண நாளன்று வாசு யோக்கியன் என்பது தெரிந்துபோய், திருமணம் நின்றுவிடுகிறது. இனி வேறு வழியே இல்லாத நிலையில் ‘வாஸ்கோடகாமா’ சிறைக்கு வாசு அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த விநோதமான சிறையில் வாசுவின் ‘டாஸ்க்’ என்ன, அதில் அவர் ஜெயித்தாரா என்று செல்கிறது கதை.

கே.எஸ்.ரவிகுமார் தொடங்கி படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள். எல்லோரும் இயக்குநர் சொன்னதை, ‘ஏன், எதற்கு?’ என்று காரணம் கேட்காமல் மந்தைகளைப் போல் மண்டையை ஆட்டியபடி நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். தலைகீழ் உலகத்தில் வெடித்துத் தெறிக்கும் அவல நகைச்சுவையின் கொண்டாட்டமாக மாறியிருக்க வேண்டிய படத்தில், இயக்குநரின் அறியாமையே திரைக்கதை நெடுகிலும் நகைச்சுவையாகிறது.

கற்பனையான தலைகீழ் சமூகத்தில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலை நகைச்சுவை எந்தக் காட்சியிலும் சூல் கொள்ளவில்லை. இப்படியும்கூட ஒரு சிறை இருக்க முடியுமா என்று தெரிந்துகொள்ள நினைத்தால் ‘வாஸ்கோடகாமா’வுக்குப் போய் தண்டனை அனுபவித்துவிட்டு வாருங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE