திரைப் பார்வை: எதுவும் முடிந்துவிடவில்லை! - 102 நாட் அவுட் (இந்தி)

By டோட்டோ

 

‘இ

ந்தியன்’ போன்ற சாகசப் படம் நீங்கலாக, முதியவர்களின் உலகை, ஒட்டுத் தாடியுடன் கூடிய செயற்கை ஒப்பனை இன்றி முதியவர்களை வைத்தே பதிவுசெய்த தமிழ்ப் படங்கள் மிகக் குறைவு (வீடு, சந்தியா ராகம், தலைமுறைகள், பவர் பாண்டி, தேவர் மகனில் கொஞ்சம் சிவாஜி கணேசனைச் சொல்லிக்கொள்ளலாம்). ஆனால், இந்தியில் அக்கலைஞர்களின் இயல்பான வயதில், ஒப்பனை செயற்கையாகத் துருத்திக் கொண்டு தெரியாத அசலான முதியவர் உலகைக் காட்டும் முயற்சிகள் தொடர்ச்சியாக நடக்கின்றன.

‘சீனி கம்’, ‘கிங் லியர்’, ‘பிளாக்’, ‘சர்க்கார்’, ‘ஷமிதாப்’, ‘பா’, ‘பிக்கூ’ போல அமிதாப் பச்சனுக்காகவே எழுதப்படும் கதைகள் திரை வடிவம் கண்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் சசி கபூரின் ‘இன் கஸ்டடி’, ரிஷி கபூரின் ‘கபூர் அண்ட் சன்ஸ்’, நஸ்ருதீன் ஷா வின் ‘வெயிட்டிங்’ எனப் பட்டியல் நீள்கிறது. வணிகத்துக்காக நூறு பேர் நடித்து, ஆடிப்பாடும் ஆடம்பரக் கல்யாண வீட்டுக் கதைகளில் இடம்பெறும் முதியவர்களின் உலகுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து விடுவோம்.

இந்தக் கதை, ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் உறவுச் சிக்கல்கள், முரண்கள் பற்றியும் அவை தொடர்பான இருவரின் பார்வை பற்றியதும்தான். என்ன ஒன்று மகனின் வயது 75 , அவர் தந்தையின் வயது வெறும் 102!

கதை: குஜராத்திலிருந்து மும்பையில் குடியேறிய பரம்பரையில் பிறந்த 102 வயது தாத்தாரேயாதான் அமிதாப். சென்சுரி அடித்த வயதிலும் மனத்தில் இளமையாகவும் வண்ணமயமாகவும் வாழும் அவருக்கு உலகிலேயே வாழும் வயதானவர் என்ற சாதனை படைக்க ஆசை. இதற்குத் தடையாக இருப்பது, நேர்மறை எண்ணத்துடன் எல்லாம் முடிந்துவிட்ட ஒரு விரக்தி மனப்பான்மையில் வாழும் அவரது 75 வயது மகன் பாப்பு.

தந்தை மகனை (ஆமாம்! மகனைத்தான்!) முதியோர் இல்லம் அனுப்பாமல் இருக்க சில கட்டளைகள் விதிக்கிறார். அவ்விருவருக்கும் இடையிலான உறவுச் சிக்கல்களும் 102 வயது அமிதாப்பின் அந்தக் கட்டளைகளால் மாறும் 75 மகன் ரிஷி கபூரின் வாழ்வும் என்ன ஆனது என்பதே கதை.

பார்வை: குஜராத்திக் கவிஞர், இயக்குநர், நடிகர், நாடக ஆசிரியர், திரைக் கதாசிரியர் சவும்யா ஜோஷி என்பவரின் வெற்றிகரமான மேடை நாடகம் இது. திரையிலும் இவரே கதை, வசனத்தைப் பார்த்துக்கொள்ள உமேஷ் சுக்லா இயக்கியிருக்கிறார்.

முதலில் பாராட்டப்பட வேண்டியது முக்கியக் கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு. தேர்ந்துகொண்ட நடிகர்கள் இருவரும் வழங்கியிருக்கும் குறைவில்லாத பங்களிப்பு. கிட்டத்தட்ட 26 வருடங்களுக்குப் பிறகு இரு கதாநாயகர்களும் இணையும் படம் இது. தன் கதாபாத்திரத்தின் வீச்சை அறிந்து மகன் கதாபாத்திரத்துக்கு அதிகம் இடம் கொடுக்கும் அமிதாப் பச்சனும் கிடைத்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி அமிதாப்பைவிட அழகாக நடித்த ரிஷி கபூரும் மனத்தில் நின்றுவிடுகிறார்கள். பார்வையாளர் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் ‘திரு’வாக நடித்த ஜிமித் திரிவேதியும் நிறைவான நடிப்பை அளித்திருக்கிறார்.

கதை மெல்ல பம்பாய் முதல் மும்பைவரை மாறும் 100 வருட நகரத்தை கோட்டோவியமாகக் காட்டி, இந்தக் கதை மாந்தர்களின் வாழ்வில் நுழைந்து, முதுமை என்றாலும் எதுவும் முடிந்துவிடவில்லை என்பதைப் பேசுகிறது. அதீத சந்தோஷம், இளமையான பேச்சு, பாடல் கேட்பது என வாழும் தத்தாத்ரேயா கதாபாத்திரத்தைவிட பாப்பு என்ற 75 வயது மகனாக வரும் ரிஷி கபூரின் பாத்திரப் படைப்பும் அவரின் மாறுதல்களும் இயல்பாகச் சொல்லப்படுகின்றன. ஒவ்வொரு கட்டளையாகத் தந்தை சொல்வதும் அதை மகன் சிரமப்பட்டு முடிப்பதும் என நகைச்சுவையாகவே நகர்கிறது. இறுதிக் கட்டளை இருவரது வாழ்வின் சற்றே கசப்பான பக்கங்களைத் திறக்கிறது.

திரு என்ற கதாபாத்திரத்துக்கு அதிக வேலை இல்லையென்றாலும் நகைச்சுவைக்காகவும், பார்வையாளர்களின் பிரதிநிதியாகவும் அவர் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதாசிரியர் எத்தனை முக்கியம் என்பதை நிறுவுகிறது. மொத்தமாகவே 11 பேர்தான் நடிகர்கள். அதில் ஒருவருக்கு வீட்டுப்பணிப் பெண் வேடம். அவருக்கும் வசனம் எதுவும் கிடையாது.

குறைகளும் உண்டு. நாடகத்தில் இருந்து வந்த படம் என்பதால் படம் நெடுகிலும் திரைமொழி குறைந்து, பெரும்பாலும் வசனங்களாலும், ஒரு வீட்டுக்குள்ளே நடைபெறும் காட்சிஅமைப்புகளாலும் மேடை நாடகம் பார்க்கிற உணர்வே மேலிடுகிறது. அதே போல பாப்புவின் மகனை வழக்கமான குடும்பப்பட நியதியின்படி அப்பாவைப் புரிந்துகொள்ளாமல், வெறும் சொத்துக்காக ஆசைப்படும் மகனாக மட்டும் காட்டியிருப்பது குறை.

லக்ஷ்மன் உடேகரின் ஒளிப்பதிவும் சலீம்-சுலைமான், ரோஹன்-விநாயக் ஆகிய இணைகளின் இசையும் ஜார்ஜ் ஜோசஃப்பின் பின்னணி இசையும் படத்தில் இயல்பாய் ஒலிக்கின்றன. ஆகச் சிறந்த படமாக இது இல்லாமல் போனாலும் இந்த வகைப் படங்கள் எடுப்பதையே ஒரு நல்ல முயற்சியாகக் கருதி வரவேற்கலாம்.

தொடர்புக்கு: tottokv@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்