சினிப்பேச்சு: நெல் திருவிழாவில் எஸ்.கே!

By செய்திப்பிரிவு

எல்லா மாஸ் கதாநாயகர்களும் மக்களை நோக்கிச் செல்வதில்லை. சிவகார்த்திகேயன் ஒரு விதிவிலக்கு. காவேரி டெல்டாவின் இதயம் போன்ற பகுதிகளில் ஒன்றான திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய நெல் ரகங்களைக் காக்கும் விதமாக ‘நெல் திருவிழா’வைப் பல ஆண்டுகளாக நடத்தி வந்தவர் மறைந்த இயற்கை வேளாண் ஆளுமையான நெல் ஜெயராமன்.

அவர் சிகிச்சையில் இருந்தபோது கரம் கொடுத்த சிவகார்த்தியேன், ஜெயராமனின் மகனது கல்விச் செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அத்துடன் நில்லாமல், சமீபத்தில் ராஜீவ் ஒருங்கிணைத்து நடத்திய நெல் திருவிழாவுக்குத் தஞ்சை விவசாயிகளின் அழைப்பை ஏற்றுச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு ‘உழவர்களின் தோழன்’ என்கிற விருதைத் தஞ்சை விவசாயிகள் வழங்கினர்.

மேடையில் இருந்தபடி காரில் ஏறிப் போய்விடாமல், கீழே இறங்கி வந்து விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொரு விவசாயியின் அருகில் போய் அவர்களது கைகளைப் பற்றிப் பேசியதுடன் 5 மணிநேரம் நிகழ்ச்சியில் இருந்ததை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது: “நெல் திருவிழாவைத் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடத்துங்கள். நம்முடைய விவசாயிகளுக்கும் விவசாயத்துக்கும் என்னால் முடிந்ததைக் கடைசிவரை நான் செய்துகொண்டே இருப்பேன்” என்றார். இந்த நிகழ்வில் ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ படங்களின் இயக்குநர் இரா.சரவணனும் கலந்துகொண்டார்.

சிவபெருமானின் உத்தரவு! - தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நாயகனாக நடித்து வரும் பான் இந்திய சினிமா ‘கண்ணப்பா'. ஏ.வி.ஏ என்டர்டெயின் மென்ட்ஸ் - 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருள்செலவில் தயாரித்து வரும் இப்படம், கண்ணப்ப நாயனாரின் காவிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் படமாக முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

விஷ்ணு மஞ்சுவுடன், மோகன் லால், பிரபாஸ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் மோகன் பாபு பேசும்போது: “சிவபெருமானின் உத்தரவினால் தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை எடுத்து முடித்தோம்” என்றார்.

விஷ்னு மஞ்சு பேசும்போது “ கண்ணப்பாவின் பயணம் 2014இல் தொடங்கியது; இது எனக்கு மட்டுமல்ல; எங்கள் குழுவின் கனவுப் படம். இதில் இடம்பெற்றுள்ள பெரிய நட்சத்திரங்கள் ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்” என்றார். சரத்குமார் பேசும்போது “கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நம் தொன்மை வரலாறு. அது திரையில் பிரம்மாண்டமாக வந்திருக்கிறது” என்றார்.

அறம் செய்யவே அரசியல்! - பாலு எஸ். வைத்தியநாதன் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடிக்கும் படம் ‘அறம் செய்’. தாரகை சினிமாஸ் தயாரிப்பில் அரசியல் விமர்சனப் படமாக உருவாகி வரும் இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

அதில் படம் குறித்து இயக்குநர் பேசும்போது: “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் தேசத்தின் அரசியல் மக்களுக்கானதாக மாறவில்லை. வரி வருமானம் வழியாகத் தரமான கல்வியோ, மருத்துவமோ மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கவில்லை. இதை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்.

இதற்காக இன்றைய அரசியல்வாதி களுடன் மோதும் ஓர் இளைஞர் குழுவின் நிலை என்ன ஆகிறது என்பதுதான் படம். இதில் இந்தியாவில் இருக்கிற எந்த அரசியல் கட்சியையோ, அரசியல் தலைவர்களையோ, தனி நபர்களையோ குறை கூறியோ, ஆதரித்தோ ஒரு சின்ன வசனம்கூட கிடையாது.

மாறாக மக்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்டு இருக்கிறோம். இந்திய அரசியல் சாசனத்தின் சட்டங்களை மேற்கோள் காட்டி மக்களுக்கான அரசியலின் அவசியத்தைச் சொல்லி இருக்கிறோம். இது முழு வதும் ஒரு கமர்ஷியல் படம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE