தகவல் ஒன்று: ‘கீசகவதம்’ 1916 -ம் ஆண்டு ஆர். நடராஜ முதலியாரால் எடுக்கப்பட்ட முதல் மவுனப்படம். நூற்றாண்டு கடந்த தமிழ் சினிமாவில் இந்த வாக்கியத்தைத் தவிர இந்தப் படத்தின் பிரதியைப் பற்றிய எந்தத் தகவலும் இன்று இல்லை. உயிரோடு இருக்கும் மிகப் பழைய படமாக 1934 -ல் வெளிவந்த ‘பவளக்கொடி’, ‘சதி சுலோச்சனா’ ஆகியவற்றைச் சொல்லலாம்.
தகவல் இரண்டு: இயக்குநர் மகேந்திரனிடம் அவர் இயக்கிய ‘பூட்டாத பூட்டுக்கள்’ திரைப்படத்தின் பிரதி கிடைக்குமா என்ற கேள்விக்கு “இல்லை” என்று ஒரு படைப்பாளியாக வருத்தப்பட்டு பதில் சொல்லியிருக்கிறார்.
தகவல் மூன்று: பூனாவில் இயங்கிவரும் இந்திய தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தில் மட்டுமே கிடைக்கும் ‘பவளக்கொடி’ திரைப்படத்தைக் காண பூனா சென்றால் ஒருவருக்கான கட்டணம் 2,500 ரூபாய். இது ஏன் நமக்கு டிவிடி வடிவத்தில் கிடைக்கவில்லை, இதற்கு என்ன காரணம், என்ன செய்யலாம் என்று கேள்வியை எழுப்புகிறது சுகித் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கி இருக்கும் ‘தி மிஸ்ஸிங் ரீல்ஸ் ஆஃப் தமிழ் சினிமா’ என்ற ஆவணப்படம்
வரலாற்றைத் தேடி…
திரைப்பட விமர்சனம், நட்சத்திரப் பேட்டிகள், அலசல் கட்டுரைகள், போன்றவை திரைப்படங்கள் பற்றிய பதிவுகள். இவற்றைத் தாண்டி திரைப்படங்கள், முன்னோடிகள், மறக்கப்பட்ட நட்சத்திரங்கள் பற்றிய தகவல்களைத் தேடி தீவிர ஆராய்ச்சிக்குப் பின் அவற்றை ஆவணப்படுத்துதல் மற்றொரு வகை.
உதாரணம்: தியடோர் பாஸ்கரன் எழுதிய ‘எம் தமிழர் செய்த படம்’, ‘பாம்பின் கண்’ போன்ற ஆய்வு நூல்கள். திரையுலகை அந்தந்த காலத்தின் சமூகப் பார்வையுடன் ஆவணப்படுத்தி வந்திருக்கும் பத்திரிகையாளர்களின் பங்கு இதுபோன்ற ஆய்வாளர்களுக்கு அடித்தளமாக அமைந்திருக்கிறது.
25CHRCJ_THEODORE_BASKARAN தியடோர் பாஸ்கரன் rightஆனால், பத்திரிகையாளர்களுக்கு வெளியே பலர் ஆர்வத்துடன் சினிமா தகவல்களை ஆவணப்படுத்துதல் என்ற தளத்தில் சுகித் கிருஷ்ணமூர்த்தியைப் போல தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறார்கள். பொறியியல் பட்டம் பெற்று, கணிப்பொறி நிறுவனத்தில் சிறிது காலம் வேலை செய்து பின்னர் திரை வரலாற்றைப் பின் தொடரும் ஆவலில் 3 ஆண்டுகள் கடும் உழைப்பில் இந்த ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
முதலில் பம்மல் சம்பந்த முதலியார் 1938-ல் எழுதிய ‘பேசும் பட அனுபவங்கள்’ என்னும் படைப்பைத் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். அதில், தொழில்முறை வழக்கறிஞரான சம்பந்த முதலியார் காப்புரிமை பற்றியும் எழுதியிருந்தது அவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அந்தப் பணியே திரை வரலாற்றை நோக்கி அவரை ஆவலுடன் துரத்தியிருக்கிறது.
நேரடித் தரவுகள்
நூறு நிமிடங்கள் ஓடும் ஆவணப் படம், ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முதல் ஏழு பகுதிகளில், சினிமாவின் வரலாற்றையும் காக்கப்படாமல் தொலைந்துபோன தமிழ் மவுன மற்றும் பேசும் படங்கள் பற்றியும் அவற்றோடு தொடர்புடைய தற்போது வாழும் ஆளுமைகளையும் சினிமா வரலாற்றுக் களத்தில் இயங்கிவரும் ஆய்வாளர்களையும் நேர்கண்டு இணைந்திருக்கிறார். புனேயில் தங்கி, இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம், தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் ஆகியவற்றிலிருந்து நேரடி தரவுகள் பெற்றுப் பதிவு செய்திருப்பது இயக்குநரின் உழைப்பை வெளிக்காட்டுகிறது.
மாநிலக் காப்பகம் தேவை
இந்த ஆவணப்படம் வெறும் திரை வரலாற்றுப் பதிவாகவோ தகவல்களாகவோ மட்டும் தேங்கிவிடவில்லை. பழைய திரைப்படங்களின் காப்புரிமை, மேற்கு வங்கத்தின் முக்கியமான படங்களை அவர்கள் எப்படி மீட்டெடுத்தார்கள், பழைய திரைப்படங்களை எப்படி நவீன டிஜிட்டல் தொழிநுட்பத்துக்குள் மீட்டெடுக்கலாம், சட்டரீதியான இதன் சிக்கல்கள், அரசாங்க விதிமுறைகள் பற்றியும் அவசியமான தகவல்களைச் சரம் சரமாகக் கோத்திருக்கிறார்.
25CHRCJ_SUKITH KRISHNAMOORTHY சுகித்முக்கியமாகத் தமிழ் சினிமாவின் அரிய பிரதிகள் இருப்பது தமிழ்நாட்டில் அல்ல, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் என்று தன் தேடலின் கண்டுபிடிப்பை முன்வைக்கிறார்.
அந்தந்த மொழி திரைப்படங்களுக்கான காப்பகங்களைத் தனித்தனியே அந்தந்த மாநிலத்திலேயே அமைப்பதே ஆய்வுகளை முன்னெடுக்கச் சிறந்த தீர்வாக இருக்கும் என்பது இயக்குநரின் அலைச்சல் வழியான குரலாக பதிவாகியிருக்கிறது. தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் பாரம்பரிய மீட்டெடுப்பில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கும் 1000-க்கும் மேற்பட்ட படங்களின் பட்டியலில் முக்கியமான தமிழ்ப் படங்கள் இல்லையென்பதையும் வருத்தத்துடன் ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது. தனி மனித உழைப்பையும் திரைப்பட வரலாற்று ஆர்வத்தையும் இந்த ஆவணப்படத்தில் காணும்போது அதன் படமாக்கல் குறைகள் எதுவும் நம் கண்களுக்குப் புலப்படாமல் போய்விடுகின்றன.
தொடர்புக்கு: tottokv@gmail.com
தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? - கிருத்திகா உதயநிதியின் ஆலோசனை
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago