தரணி ஆளும் கணினி இசை 26: திரையில் வேரூன்றிய இசைமரபு!

By தாஜ்நூர்

திரையிசை வழியே காலத்தால் அழியாத சீர்திருத்தக் கருத்துகள் மக்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. வாழ்க்கை குறித்த அவநம்பிக்கை எழும்போது திரைப்பாடல் வரிகள் தட்டிக்கொடுத்து ஊக்கமூட்டும் மாயத்தைச் செய்திருக்கின்றன. கதாநாயகனின் ஹீரோயிசத்தைப் பேசும் புகழ்ச்சிப் பாடல்கள் கூடப் பார்வையாளனிடம் தலைமைப் பண்பை மறைமுகமாக ஊட்டக் கூடியவைதான். இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தாயை, தந்தையை, சகோதரியை, சகோதரனை, நண்பனைக் கொண்டாடும் பாடல்கள் உறவுகள் மீதான பிடிப்பை உருவாக்கியிருக்கின்றன.

கேட்கும் பார்க்கும் ரசிகரின் உள்ளத்தில் இன்னும் எத்தனையோ மாற்றங்களை உருவாக்கிவரும் திரையிசைப் பாடல்களில் நச்சுக் கருத்துகளும் இடம்பெற்றுவிடுவதும் இச்சையைத் தூண்டும் கொச்சைச் சொற்கள் வலிந்து திணிக்கப்படுவதும் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவைபோன்ற அபத்தங்களுக்கு பாடலாரியரை மட்டுமே குறைசொல்லமுடியாது. கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் இருக்கும் அவர்கள் காசுக்காக மாசுமிக்க வார்த்தைகளை எழுதுவதில்லை. தமிழ்க் கவிதை வரலாறும், திரையிசை வரலாறும் தெரியாத திடீர் ‘நட்சத்திர’க் கவிஞர்கள் வரிகளில் விஷத்தை விதைக்கிறார்கள். வணிகம் என்ற பெயரில் எத்தகைய பாடல் வரிகளை எழுதவேண்டும் என சில கற்றுக்குட்டி பாடலாசிரியர்களுக்கு உத்தரவிடவும் எழுதப்பட்ட வரிகளைச் சிரச்சேதம் செய்யவும் ஒரு கூட்டம் எல்லாக் காலத்திலும் சினிமாவில் இருந்து வந்திருக்கிறது.

இசையும் வரிகளும் நிரந்தரமானவை

ஆனால் தனியிசையில் இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் யாரும் உத்தரவிடமுடியாது. வரிகளும் இசையும் முழுமையான சுதந்திரம் கொண்டவை. இந்தியாவில் திரையிசையில் பாடலுக்கான சூழ்நிலை என்ற கட்டுக்கோப்பும் கட்டுப்பாடும் உண்டு. ஆனால் திரையில் இடம்பெறவே முடியாத சூழ்நிலைக்குக்கூட தனியிசையில் இடம் தரமுடியும். இன்று நல்ல டிஜிட்டல் கேமரா இருந்தால் போதும். உங்களிடம் நல்ல கதையும் காட்சிக் கற்பனையில் கைதேர்ந்தவராகவும் இருக்கவேண்டும். அப்படி இருந்துவிட்டால் நீங்கள் சிறந்த இண்டிபெண்டன் பிலிம்மேக்கராக புகழ்பெறமுடியும்.

அப்படித்தான் இண்டிப்பெண்டண்ட் இசையமைப்பாளரும். உங்களிடம் கவிதையும் பாடலும் எழுதும் திறமை இருக்கிறதா? திரையுலகில் பாடலாசிரியர் ஆகவேண்டும் என்று கோடம்பாக்கம் முழுவதும் அலைந்து திரிந்துகொண்டு இருக்கிறீர்களா? முதலில் அலைவதை நிறுத்துங்கள். ஒரு இண்டிபெண்டெண்ட் சினிமா இயக்குரைப்போல உங்கள் பாடல்களில் சிறந்தவற்றுக்கு இசையமைக்க ஒரு இசையமைப்பாளரைக் கண்டறியுங்கள். ஒரு தனியிசை ஆல்பம் உருவாக்குங்கள். அதைப் பிரபலப்படுத்துங்கள். திரையுலகம் உங்களைத் தேடி அழைத்துக்கொள்ளும்.

ரஹ்மானின் பாராட்டு

திரையிசையைத் தாண்டி தனிஇசையில் நான் தொடர்ந்து இயங்கி வருவதைப் பலரும் கவனித்து வந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழ்ப் படைப்பாளிகள், தமிழ் அமைப்புகள். கவிக்கோ அப்துல் ரகுமானும் அப்படி கவனித்தே என்னை அழைத்தார். மொத்தம் பத்து கவிதைப் பாடல்களை அவர் எழுதியிருந்தார். அவற்றுக்கு விதவிதமாக இசையமைத்தேன். கவிக்கோ அவருக்குப் பிடித்த மெட்டுக்களைத் தேர்ந்தெடுத்தார். அது ‘மகரந்த மழை’ என்ற தலைப்பில் ஆல்பமாக வெளிவந்தது.

அந்த ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்து வாழ்த்திப்பேசினார் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் .“ கவிக்கோவின் கவிதைகளுக்கு இசையமைக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை. ஆனால் தாஜ்நூர் முந்திக்கொண்டார்” என்று இரண்டே வரிகளில் வாழ்த்துக்கூறினார். இது எனக்கு ஆஸ்கர் கிடைத்த சந்தோஷத்தைத் தந்தது.

இரண்டு விதங்களில் திருக்குறள்.

எனது இசையமைப்பில் கடந்த ஆண்டு வெளியான மிக முக்கியமான தனியிசை ஆல்பம் ‘நாட்டுக்குறள்’. தமிழ் அறிஞரும் வரலாற்று ஆசிரியருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எட்டு திருக்குறள்களை தேர்ந்தெடுத்து அவற்றுக்கு கிராமியப் பாடல் வடிவில் கவித்துவமிக்க வரிகளால் விரிவாக்கம் தந்து எழுதினார். நான் இசையமைத்தேன். மிக நல்ல வரவேற்பைப் பெற்றது ‘நாட்டுக்குறள்’. அந்த ஆல்பத்தின் தொடர்ச்சி இந்த ஆண்டு மேற்கத்திய இசை வடிவில் வெளிவர இருக்கிறது ‘நாட்டுக்குறள் இன்பத்துப் பாப்’.

தனியிசையில் இன்று ஒற்றைப் பாடல்களின் தேவை பெருகியிருக்கிறது. அன்றாட நாட்டு நடப்பில் முக்கியத்துவம் பெரும் நிகழ்ச்சிகள், போராட்டங்கள், முக்கிய சமூகப் பிரச்சினைகள் இவற்றுக்கு மக்கள் மத்தியில் மேலும் எழுற்சியை உருவாக்க ஒற்றைப் பாடல்கள் சிறந்த ஊடகம். உதாரணத்துக்கு ஜல்லிக்கட்டுப் பாடல்களை குறிப்பிடலாம். நம் காவிரியை மீட்க, காப்பர் தொழிற்சாலையை விரட்ட, மீத்தேனை மறுக்க என்று பாடல்களை உருவாக்கலாம். ஆனால் மக்களை போதையில் ஆழ்த்தும் சில பிற்போக்கான கேளிக்கைகளுக்கு வணிக ரீதியாக ஒற்றைப் பாடல்கள் உருவாக்கப்பட்டு அவை ‘அப்பீஸியல் கீத’ங்களாக பெயர் சூட்டப்படும் அவலம் நடக்கிறது.

அதிகாரபூர்வ கீதங்கள் நிரந்தரமான பாடல்களாக தலைமுறைகள் கடந்து இசைக்கப்படவேண்டும். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கு இருக்கை அமையவிருக்கும் நிலையில், தமிழ் இருக்கைக்கான அதிகாரபூர்வ கீதத்துக்கு இசையமைக்கும் பணியை, தமிழ் இருக்கைக் குழு என்னிடம் அளித்தது. கவிஞர் பழனிபாரதியின் வரிகளில் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரமும் நித்தியஸ்ரீ மகாதேவனும் இணைந்து பாடியே ‘தாயே தமிழே வணக்கம்… உன் உறவே உயிர்மெய் விளக்கம்’ என்ற பாடல் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களைச் சென்று அடைந்ததில் மட்டுமல்ல, தமிழ் இருக்கை அமையவிருப்பது உறுதியானதிலும் அந்த கீதம் என்றைக்குமான உணர்வுபூர்வப் பாடலாக இருக்கும்.

திரையிசை மரபு

எனது தனியிசை முயற்சிகளில் இந்த ஆண்டு ‘தமிழ் பிள்ளை’ என்ற ஆல்பத்தை மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கிறேன். மறைந்த புரட்சிப் பாவலர் இன்குலாப் உட்பட முன்னனி கவிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். சொந்த மண்ணையும் உறவுகளையும் பிரிந்து வளைகுடா நாடுகளுக்குச் சென்று மிகக்கடினமான பணிகளைச் செய்து பொருளீட்டும் தமிழ்ப்பிள்ளைகளின் வளைகுடா வாழ்க்கையில் இருக்கும் வலிமிகுந்த யதார்த்தம் இசையாகவும் வரிகளாகவும் ‘தமிழ் பிள்ளையையும் ஈர்க்கும். எனது தனிப்பட்ட இசை முயற்சிகள் பற்றி பகிரும் அதேநேரம், தனியிசை எனும் துறை, நம் திரையிசைக்கு இணையான அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.

அதற்குத் திரையிசையைப்போன்ற கவன ஈர்ப்பு மிக அவசியம். ஐரோப்பியர்கள் நமக்குக்கொடுத்த திரைப்படக் கலையில் காலந்தோறும் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மாற்றங்களை நாம் ஏற்றுக்கொண்டோம். அதேபோல் திரையிசையில் கணினி ஏற்படுத்திய தாக்கங்களையும் உள்வாங்கிக்கொண்டோம். ஆனால் நமக்கென்று திரையிசையில் ஒரு மரபை வேரூன்றச் செய்தோம். அதுதான் நம் இன்றைய திரையிசையில் அசைக்கமுடியாத பலமாக இருக்கிறது. அந்த மரபின் தொடர்ச்சியை நவீனத்துக்கு மத்தியிலும் நம்மால் முன்னெடுக்க முடியும்.. அது எப்படி என்பதை அடுத்தவராம் பகிர்கிறேன்.

தொடர்புக்கு: tajnoormd@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்