பாட்டுக்கு மெட்டா, மெட்டுக்குப் பாட்டா? | தமிழ் திரையிசையின் தலைவர்கள்! 

By செய்திப்பிரிவு

இசையா.. மொழியா என்று சட்டையைப் பிடித்து சண்டை போட்டுக்கொள்ளாத குறையாகச் சர்ச்சைக்குள் சிக்கிக் கிடக்கிறது தமிழ்த் திரையிசை. இந்தச் சண்டை பழைய சண்டைதான்.. ஆனால் சில இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மண்டைக்குள் உண்மை நுழைய மறுப்பதால் மீண்டும் தலைதூக்கியிருக்கும் சண்டை. என்றாலும் தமிழ்த் திரையிசையின் தலைவர்கள் என்று பல கலைஞர்களைப் பட்டியல் போட்டுக் கூறலாம்.

வரிகளால் ரசிகர்களை வெறியேற்றிய பாடலாசிரியர்கள் பலர். பட்டுக்கோட்டையார் பாடல்கள் மக்கள் திலகத்தையே மனம் மயங்கச் செய்த காலம் அது! 'தூங்காதே தம்பி தூங்காதே ' பாடல் ‘நாடோடி மன்னன்’ படத்தில் ஓடோடி வந்து இளைஞர்களைத் தட்டி எழுப்பி தமிழில் அக்கால வேதம்போல் ஆனது !

கண்ணதாசன் பாடல்களில் எதைச் சொல்வது, எதை விடுவது? 'மலர்ந்தும் மலராத பாதி மலர் போல' எனப் பாசமலர் தொடுத்தவன் கொடுத்தவன் அல்லவா! வாலியின் பாடல் வலையில் விழாதார் எவர் ? ‘அன்பே வா’ என்று சொல்லி 'புதிய வானம்..புதிய பூமி.. எங்கும் பனி மழை'யை அல்லவா பொழிய வைத்தார்!

‘பொய்கால் குதிரை’ படத்தில் வாலி

அடுத்து வந்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. வில்லுக்கு ஒரு விஜயன் என்றால் சொல்லுக்கு ஒரு வைரமுத்து என்று சொல்ல வைத்த அவரின் முதல் விழுது 'இது ஒரு பொன் மாலைப் பொழுது '. அன்னாரின் மொழி செம்மொழி. காதல் பாடல்கள் அனைவரின் காதிலும் தேன் பாய்ச்சியது. வைரமுத்துவின் சிகரமான வரிகள் ரோஜா படத்தில் வந்த ‘சின்ன சின்ன ஆசை.’ கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அனைத்து இசை மேடைகளிலும் இசைக்கக் கேட்ட பாடல். இந்திப் படவுலக பாடலாசிரியர் ஜாம்பவான் ஜாவேத் அக்தரே திணறித் திணறி பெரும் பாடுபட்டு மொழிபெயர்த்த பாடல். அவரே சொன்னார் "வைரமுத்துவின் கற்பனைகளையும் சொற்களின் வீச்சையும் மொழியின் பாவனைகளையும் என்னால் பிரதிபலிக்க முடியவில்லை. ஒரு அறுபது விழுக்காடு மட்டுமே என்னால் மொழிபெயர்க்க முடிந்தது" என்று ஒப்புக்கொண்டார். ஆக வைரமுத்துவின் வைரம் பாய்ந்த திரைப்பாடல் வரிகள் இலக்கியத் தமிழுக்கு அருகில் வரும் வரம்!

இனி இன்னிசைக்குப் போவோம். எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்திக்கு முன்னும் பின்னும் பல நல்லிசை, மெல்லிசை அமைத்த இசையமைப்பாளர்கள் இருந்தனர். அவர்களின் இசை பாரம்பரிய இசையின் அடித்தளத்திலிருந்து எழும்பிய இசைக் கம்பத்தில் கொடி கட்டி பறந்த காலம்! அந்த மலர் வாசனைக்கு இடையே திடீரென்று ஒரு மண்வாசனை மழை வாசனை தமிழகத்தின் மீது கவிழ்ந்தது. இயக்குநர்கள் இடையே பாரதிராஜாவும் இசையமைப்பாளர்கள் இடையே இளையராஜாவும் உதயமானார்கள். கிராமத்து இசையை கிராமி விருது வரைக்கும் கொண்டு சென்றார் இளையராஜா. இன்றைக்கு ராஜாவின் இசை ராஜாங்கம் காற்று மண்டலமெங்கும் விரிந்து கிடக்கிறது.

அதன் பின் ஓர் இசை வயல் வந்தார்! அவர், சூஃபியின் அமைதி கலந்த ஆர்ப்பரிப்பைத் தவழவிட்ட இசைப் புயல்! அவரே ஏ ஆர் ரகுமான். அனைத்து வயதினரும் இளமை துள்ளும் இவரது இசையால் வசமாகினர். ரஹ்மானோ ஆஸ்கரை அள்ளிக்கொண்டு வந்து தமிழ்நாட்டின் திரையிசையை உலகம் திரும்பிப் பார்க்கும்படி செய்தார். இளையோர் இசைக்கு ஒரு ஏ ஆர் ரகுமான் என்றால் அவருக்குப் பின் அவரைப் பின் தொடர்ந்து பல இளைஞர்கள் இசை உலகில் முத்திரை பதித்துள்ளனர். அவர்களில் யுவன் சங்கர் ராஜாவின் இசை - நா.முத்துக்குமாரின் நவீனக் கவிதை வரிகளோடு இணைந்தபோது பிறந்த பாடல்கள் புத்தாயிரச் சினிமாவின் கவித்துவ மடல்கள் ஆகின. ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்திலிருந்து வந்த ஜி.வி.பிரகாஷும் லதா ரஜினிகாந்த், பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியம் குடும்பத்திலிருந்து வந்த அனிருத் ரவீந்தரும் போட்டிப்போட்டு வெற்றிப்பாடல்களைக் கொடுத்து வருகிறார்கள்.

இசையின் அழகு அதன் மெட்டிலா, மெட்டுக்கு எழுதப்படும் பாட்டிலா, மெட்டைக் குரல் கொண்டு உயிரூட்டும் பாடகனின் பங்களிப்பிலா, அப்பாடலைத் திரையில் நடிப்பாகவும் நடனமாகக் காட்சிக்குள் நிலை நிறுத்தும் நடிகர்களா என்று கேட்டுக்கொண்டே போகலாம். இதில் இசைக்கருவிகளை வாசித்த கலைஞர்களுக்கும், அதைக் கணிப்பொறியில் இசைக்கோர்வை செய்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் அதை ஒலிப்பதிவு செய்தவருக்கும் கூட ஒரு பங்கு உண்டு என்றாலும் எல்லாவற்றுக்கும் இறைவனைப்போல் மையமாக உறைவது இசைதான் என்பதை மறுக்க முடியாது. அதற்காக இசை மட்டும்தான் எல்லாம் என்றும் சொல்லிவிட முடியாது என்பதை இசையமைப்பாளர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

டாக்டர் பி. வி. ஜெகன்மோகன் ஐ.ஏ.எஸ்

(கட்டுரையாளர், முன்னாள் இந்திய ஆட்சிப் பணியாளர் டாக்டர் பி. வி. ஜெகன்மோகன் ஐ.ஏ.எஸ் . கவிஞர் காண்டீபன் என்பது அவரது புனைப்பெயர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்