தீவிரமடையும் திரை யுத்தம்!

By கா.இசக்கி முத்து

வேலை நிறுத்தத்தால் சொந்த வீடாகிய திரையுலகில் நெருக்கடி முற்றிக்கொண்டிருக்கிறது. அதைவிட முக்கியம் தங்களை வாழவைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை உணர்ந்துகொண்டவர்களாய் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காகத் திரையுலகினர் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள், நடிகர்களைத் தாண்டி ஆயிரக்கணக்கான தொழிலாளர்களையும் உள்ளடக்கியதுதான் சினிமா தொழில். தற்போது நடந்துவரும் வேலை நிறுத்தத்தால் சுமார் 24 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பட முதலாளிகள் என்று தொழிலாளர் வர்க்கத்தால் வருணிக்கப்படும் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் களம் காண்பது சினிமா வரலாற்றில் வினோதமானதுதான்.

பொறியில் சிக்கியவர்கள்

சினிமா ஒளிப்பதிவைப் படச்சுருளில் பதிவுசெய்து அதை பிரிண்ட்டாகத் தங்கள் செலவில் பிரதியெடுத்து திரையரங்குகளுக்குக் கொடுத்தார்கள். ஒரு படப்பிரதிக்கு 60,000 ரூபாய் செலவானது. ஆனால் டிஜிட்டல் படப்பதிவு பிரபலமாகி படச்சுருளுக்கு எல்லோரும் விடைகொடுத்ததும் லேப்கள் மூடப்பட்டன. ஒரு கட்டத்தில் இனித் திரையிடல் என்றாலே டிஜிட்டல் சினிமாதான் என்ற நிலை உருவானது. அப்போது சந்தைக்குள் நுழைந்த நிறுவனம் டிஜிட்டல் சேவை புரொஜெக்டரின் விலையைக் கூறியபோது திரையரங்கை நடத்தி வந்தவர்கள் அதிர்ந்துபோனார்கள். நாங்கள் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா என்று மறுத்துவிட்டார்கள். இது தயாரிப்பாளர்களுக்குத் தெரிய வந்தது.

பிலிம் பிரதிக்குப் பதிலாக டிஜிட்டல் சினிமா பிரதிக்கு மாஸ்டரிங் கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று தெரியவந்தபோது திரையரங்க உரிமையாளர்களிடம் ஒரு தொகையை மட்டும் டிஜிட்டல் புரொஜெக்டருக்குக் கொடுக்கச் சொல்லிவிட்டு, மீதியை நாம் அளிக்கலாம் என்று தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அப்போது உருவானதுதான் வி.பி.எஃப் எனப்படும் விஷுவல் புரொஜெக்‌ஷன் ஃபீஸ் எனப்படும் டிஜிட்டல் சேவைக் கட்டணம். இந்த முறை பழைய தயாரிப்பாளர்கள் அனைவருக்குமே தெரியும். தியேட்டர்காரர்களும் நம்மிடம் குறைவாகத் தானே கேட்கிறார்கள், நமக்கு என்ன கவலை புரொஜெக்டர் வந்துவிடுகிறது எனத் தொடக்கத்தில் விட்டுவிட்டார்கள். ஒரு கட்டத்தில் சில தயாரிப்பாளர்களைத் தவிர, மற்றவர்களுக்கு வி.பி.எஃப் பற்றியே தெரியாது. திரையரங்க உரிமையாளர்களும் ‘ டிஜிட்டல் சினிமா வேண்டாம் என்று தானே சொன்னோம், ஆனால் தயாரிப்பாளர்களுக்காக மாற்றியிருக்கிறோம். அதனால்தான் அவர்கள் கட்டுகிறார்கள்’ என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். இப்படி டிஜிட்டல் சினிமா பொறியில் திரையரங்க உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் ஆகிய இரு தரப்புமே சிக்கிக்கொண்டதாகக் கூறுகிறார்கள்.

விளம்பரத்தில் பங்கில்லை

திரையரங்குகளில் படச்சுருள் பிரதி திரையிடப்பட்டபோது வீடியோ வடிவில் விளம்பரம் வருவது குறைவாக இருந்தது. தவிர ஸ்லைட் முறை விளம்பரங்கள்தான் அதிகமாக இருந்தன. ஆனால், டிஜிட்டலாக மாறியவுடன் டிவியில் பார்ப்பது போல திரையரங்கிலும் 20 நிமிடங்கள் வரை விளம்பரங்களைத் திரையிடத் தொடங்கினார்கள். இந்த விளம்பரங்களைத் தனது மார்க்கெட்டிங் டீம் மூலம் வாங்கும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் அவற்றைத் திரையிடத் திரையரங்கை நடத்துபவர்களுக்கு கமிஷன் கொடுக்கிறார்கள். இங்குதான் தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டார்கள். ‘உங்களுக்குப் படம் ஓட்டுவதைத் தவிர வேறு வருமானமில்லை என்பதால்தான் புரொஜெக்டருக்கான விலையில் ஒருபகுதியாக வி.பி.எஃப் தொகையைக் கட்டி வருகிறோம். இப்போது உங்களுக்கு விளம்பரத்தின் மூலம் வருமானம் வரும்போது நாங்கள் ஏன் அதைக் கட்ட வேண்டும்’ எனத் தயாரிப்பாளர்கள் கேட்கத்தொடங்கியபோது பிரச்சினை ஆரம்பித்தது.

“ஒரு திரையரங்கில் புரொஜெக்டர் இல்லையென்றால் அது கல்யாண மண்டபம் போன்றதுதான். மேலும், திரையரங்கை மேம்படுத்துவதற்குப் பல லட்சங்கள் செலவு செய்யும் நீங்கள், புரொஜெக்டர் வாங்கவும் அதில் தொழில்நுட்பம் உயரும்போது அப்டேட் செய்துகொள்ள ஆகும் செலவைச் செய்யத் தயங்குவதும் ஏன்?” என்றும் கேட்கிறார்கள். டிஜிட்டலில் ஷூட் செய்துக் கொடுத்தால், எந்த புரொஜெக்டரில் வேண்டுமானாலும் படம் ஓடும். எங்களுடைய படங்களைத் திரையிடும்போது அவற்றை முன்னிறுத்தி வரும் பார்வையாளர்களை டார்கெட் ஆடியன்ஸாக வைத்துத் திரையிடும் விளம்பரங்கள் மூலம் வரும் வருமானத்தை நீங்கள் எங்களுடன் பகிராமல் வைத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்” என்பதுதான் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் சினிமா நிறுவனங்களிடமும் திரையரங்க உரிமையாளர்களிடமும் வைத்த கேள்வி. இங்கிருந்துதான் பிரச்சினையே தொடங்கியது.

பட வசூலில் சிக்கல்

அடுத்து ஒரு படம் வெளியானால் அதன் வசூல் வருமானத்தில் குறைந்தது 60 முதல் 70 சதவீதம் தயாரிப்பாளர்களுக்குத்தான் வர வேண்டும். ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி படத்தின் வசூல் என்ன என்பது விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அளிக்கும் கணக்காக மட்டுமே இருக்கிறது. இது குறித்து தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, "அரசாங்கம் என்ன டிக்கெட் கட்டணம் வசூலிக்கச் சொல்கிறதோ, அதை வாங்குகள். என்ன கலெக்‌ஷன் வருகிறதோ, அதை அப்படியே வெளிப்படையாகத் தெரிவியுங்கள். படத்துக்கு முன்பணமே வேண்டாம். ஆனால், வரும் வசூலை வாரந்தோறும் கொடுத்துவிடுங்கள் என்கிறோம். இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அனைத்துத் திரையரங்களிலும் டிக்கெட் விற்பனையைக் கணினிமயமாக்கி விட்டால் உண்மையான வசூல் தெரிந்துவிடும். நடிகர்களின் சம்பளமும் தானாகக் குறைந்துவிடும். பெரிய நடிகரின் படம் வரும் போது, எதற்காக மக்களிடம் அதிக டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கேட்கிறோம். உண்மையில், சில தயாரிப்பாளருக்கு அவருடைய படத்தின் வசூலை இன்னும் தராமல் இழுத்தடிக்கிறார்கள்" என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

என்ன தான் தீர்வு?

பிரிண்டிலிருந்து டிஜிட்டல் சேவைக்கு மாறினால் லாபகரமாக இருக்கும் என்று மாறிவிட்டபோது அது தற்போது தயாரிப்பாளர்களுக்குப் பெரும் சுமையாக வந்து நிற்கிறது. விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஆகிய மூன்று தரப்பும் ஒருங்கிணைந்து தங்கள் பிடிவாதங்களையும் கொள்ளை லாபம், ஒருவரை ஒருவர் சுரண்டிக் கொழுப்பது என்ற மனப்பான்மையையும் விட்டுவிட்டு உட்கார்ந்து பேசினால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். அதேபோல குரூப் ரிலீஸ் முறையில் திரையரங்குகளை மோனோபோலி செய்பவர்கள் ஜனநாயகப் பாதைக்குத் திரும்பி டிக்கெட் விற்பனை வசூலை வெளிப்படைத் தன்மைக்கு மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது இவர்களைப் போன்ற திரையரங்க தாதாக்கள் திரையிடல் தொழிலில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுதான் தற்போது திரையுலகில் நடுநிலை வகிப்பவர்களின் தரப்பாக இருக்கிறது.

டிஜிட்டல் சேவையில் புதிய நிறுவனங்கள்

தற்போது சந்தையில் ஆதிக்கம் செலுத்திவரும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஓரளவுக்கு இறங்கி வந்தபோதிலும் அது தயாரிப்பாளர்கள் தரப்பினர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதால், புதிதாக பல டிஜிட்டல் சேவை நிறுவங்களுடன் புதிய ஒப்பந்தங்களைத் தயாரிப்பாளர் சங்கம் செய்துவருகிறது. இதன்மூலம் திரையரங்குகளில் டிஜிட்டல் புரஜெக்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தை 3டியில் உருவாக்கி இருக்கிறார்கள். கண்ணாடி போடாமலேயே 3டியில் பார்வையாளர்கள் பார்க்கும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். இதற்காக. 3டி புரொஜக்டருக்கு திரையரங்குகள் மாறவேண்டுமானாலும் 3 லட்ச ரூபாய் செலவாகும். இதற்காக “2.0 வெளியாக இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்குள் யாரெல்லாம் 3டி புரொஜக்டருக்கு மாறுகிறார்களோ, அவர்களுக்கு 50 சதவீத மானியம் தந்துவிடுதாக" லைகா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதன்மூலம் பன்னாட்டு நிறுவனமான லைகாவும் தமிழகத்தில் டிஜிட்டல் சேவையில் நுழைய இருப்பது உறுதியாகி இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்