சி(ரி)த்ராலயா 12: சினிமா ராஜ்ஜியத்தை ஆண்ட ராஜேந்திரன்

By டி.ஏ.நரசிம்மன்

சென்ற வாரம் ‘சிரித்ராலயா’ தொடரில் சி.வி.ராஜேந்திரன் பற்றிய அறிமுகம் இடம்பெற்றிருந்தது. சிகிச்சைக்குப் பின் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பியிருந்த சி.வி. ராஜேந்திரனைக் காணக் குடும்பத்தினருடன் சென்றிருந்தார் ‘சித்ராலயா’ கோபு. சென்னை பாண்டிபாஜாரை ஒட்டிய ஆர்க்காடு தெருவில் இயக்குநர் ராஜேந்திரன் வீடு. உற்சாகத்துடன் வரவேற்ற சி.வி.ஆர், “சிரித்ராலயா என்ற தலைப்பே அருமை. இந்த வாரம் என்னைப் பற்றிய அறிமுகம் அருமை. எனக்கே எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டாய். உடல்நலம் குன்றியுள்ள எனக்கு இப்போது சிரித்ராலயா நல்ல மருந்து” என்று பாராட்டிவிட்டு சுமார் ஒருமணிநேரம் பழைய நினைவுகளில் மூழ்கியபடி பேசிக்கொண்டிருந்தார்.

“துரதிஷ்டவசமாக காலனும் சிரித்ராலயா படித்து வருகிறான் போலும். சி.வி ராஜேந்திரனை அறிமுகப்படுத்தி அவரது சாதனைகளைப் பற்றி எழுதத் தொடங்கியபோது, சிரித்ராலயாவைக் கண்ணீர் ஆலயமாக மாற்றி விட்டானே” என்று கண்ணீர்விட்டுக் கலங்கிய கோபுவை சி.வி. ராஜேந்திரனின் மரணம், மிகவும் பாதித்து விட்டது.

“சித்ராலயாவின் கடைசித் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. இப்போது நான் தனிமரம்” என்று வருத்தத்துடன் கூறியவர், “மரணம் கொடுமை அல்ல. ஆனால், கூட்டாகச் சாதனைகளைச் செய்துவிட்டு, ஒருவர் மட்டும் தனியாக மற்றவர்களைப் பற்றிய நினைவுகளுடன் வாழ்வதுதான் மிகவும் கொடுமை” என்றார். நண்பனைப் பற்றிய நினைவுகளை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக ‘தி இந்து’ தமிழ் வாசகர்களுடன் பகிர விரும்பிய கோபு அதை ஒரு கடிதமாகவே எழுதிக் கொடுத்தார். இதோ நினைவுகளை வருடும் அந்த உருக்கமான கடிதம்.

என் அருமை ராஜி...

இறைவனின் வீட்டில் இந்நேரம் உனக்கு இடம் கிடைத்திருக்கும். அற்புத அமைதியில் ஆழ்ந்திருப்பாய்… அதற்காகப் பிரார்த்திக்கிறேன். அங்கே நமது சித்ராலயா நிறுவனத்தின் தூண்களான ஸ்ரீதர், வின்சென்ட், பி.என்.சுந்தரம், ஸ்டில்ஸ் அருணாச்சலம், கலை கங்கா, எடிட்டர் என்.எம் ஷங்கர், எம்.எஸ் விஸ்வநாதன், ராமமூர்த்தி, கவியரசு கண்ணதாசன், எம். பாஸ்கர், என்.சி. சக்கரவர்த்தி போன்றவர்களைச் சந்தித்திருப்பாய்.

இவர்களது மறைவுக்கு, பிறகு உனக்கு நானும் எனக்கு நீயும் என இருந்தோம். நீ ஒருவன் இருக்கிறாய் என்றே என்னை இதுவரை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தேன். என்னைவிட நான்கு வயது சிறியவனான உனக்கு அப்படி என்ன அவசரம்? ‘இன்றைய டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிய படமொன்றை இயக்கப்போகிறேன். முழுநீள நகைச்சுவை கதை ஒன்றை எழுதிக்கொடு கோபு’ என்று சொல்லிவிட்டு நீ இப்படி என்னைத் தவிக்க விட்டுச்சென்றது என்ன நியாயம்?

காதலிக்க நேரமில்லை

உனக்கு நினைவிருக்கிறதா, ராஜி! முதன்முதலாக ‘மீண்ட சொர்க்கம்’ படத்தில் ஸ்ரீதரிடம் துணை இயக்குநராகச் சேர ஆசைப்பட்டாய். அதற்காக அரசுப் பணியை விட்டு விட்டு வந்து நின்றாய். ஸ்ரீதரிடம் என்னை சிபாரிசு செய்யச் சொன்னாய். ‘நீ அவருடைய மாமா மகன். இருந்தும் என் மூலமே ஸ்ரீதரை அணுகினாய். ஏனென்றால் என்னை உன் தோழனாய் ஏற்றுக்கொண்டவன். ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம்தான் நம்மை மேலும் நெருங்கிய நண்பர்கள் ஆக்கியது. அதுவரை ஸ்ரீதரிடம் பணிபுரிந்த பி.மாதவன் நமது யூனிட்டை விட்டு வெளியேறியபோது அவரது இணை இயக்குநர் பதவி தகுதிமிக்க உனக்குக் கிட்டியது. ‘காதலிக்க நேரமில்லை’ எத்தனை பேருக்கு வாழ்க்கையில் திருப்பத்தை உண்டாக்கியது.

ரவிச்சந்திரன், காஞ்சனா, முத்துராமன், ராஜஸ்ரீ, சச்சு, நாகேஷ் ஆகியோர் உயர்ந்த இடத்தைப் பெற்றார்கள் என்றால் நகைச்சுவை வசன கர்த்தாவாக எனக்கும் ஓர் உன்னத இடத்தைப் பெற்றுத் தந்தது அந்தப் படம். இணை இயக்குநரான உன்னுள் இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியதும் அந்தப் படம்தான். காஞ்சிபுரத்தில் கண்ணன் டாக்கீஸ் திரையரங்க முதலாளியின் மகன்கள் நிதியுதவி செய்ய, ஒரு தயாரிப்பாளரோடு என்னைக் காண திருவல்லிக்கேணி வீட்டுக்கு வந்தாய். “ கோபு! நான் முதல்முதலாக ஒரு படத்தை இயக்க வேண்டும். உன்னுடைய நகைச்சுவைக் கதை ஒன்றைத் தா. உனது எழுத்தும், எனது இயக்கமும் நிச்சயம் வெற்றியைத் தரும்...” என்று கேட்டாய்.

உனக்காக ‘அனுபவம் புதுமை’ என்ற நகைச்சுவைக் கதையை எழுதிக் கொடுத்தேன். முதல் படத்திலேயே உனது இயக்க முத்திரைகளையும் கேமரா ஜாலங்களையும் சிலாகித்துப் பத்திரிகைகள் எழுதின. ஆங்கிலப் படத்தைப் பார்ப்பது போல் இருந்ததாகப் பத்திரிக்கைகள் கூறின. ‘அனுபவம் புதுமை’ படத்தைப் பார்த்த நம் குருநாதர் ஸ்ரீதர், ‘என்னடா... ரெண்டு பெரும் அமர்க்களப்படுத்துகிறீர்களே.. என்னை அம்போன்னு விட்டுடப் போறீங்க...” என்று சொன்னதுதான் நமக்குக் கிடைத்த நிஜமான விருது.

சிக்னலில் சிக்கிய தலைப்பு

உடனேயே நீ இன்னொரு படத்தை இயக்க முடிவு செய்தாய். ஜெய்சங்கர், நாகேஷ், பாரதி, ஜெயந்தி நடித்த ‘நில் கவனி காதலி’ திரைக்கதையை முடிவு செய்த அன்று “படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்” என்று பேசிக்கொண்டு நாம் இருவரும் காரில் சென்றபோது மவுண்ட் ரோடு, கன்னிமாரா சந்திப்பில் கார் நிற்க, அப்போது சிக்னலில் பளிச்சிட்ட ‘நில்.. கவனி.. புறப்படு ’ என்ற சொற்கள் என் கண்ணில் பட, “ராஜி நம்ம படத்துக்குத் தலைப்பு ‘நில் கவனி காதலி’ ” என்று நான் சொன்னபோது “ சூப்பர்…படம் வெற்றி கோபு” உற்சாகமாகக் கூவி காரை புகார் ஹோட்டலில் ஓரம் கட்டி நிறுத்திச் சுடச்சுட முஸ்லிம் டீ சாப்பிட்டது நினைவிருக்கிறதா நண்பா..

நீ சொன்னபடியே படம் பெரிய வெற்றி பெற்றது அல்லவா! ‘ஜில்லென்று காற்று வந்ததோ’ பாட்டை முதன்முறையாக நீச்சல்குளத்தின் அடியில் படம்பிடித்து பெயர் வாங்கிய இயக்குநர் நீ அல்லவா! அதே போன்று, ‘ராஜா குட்டி… ஓ மை டார்லிங்’ என்ற அதே படத்தின் மற்றொரு பாடலை உயர்ந்த கட்டடத்தின் மொட்டை மாடியில் படம் பிடித்துப் பாராட்டுகளைத் தட்டிச் சென்றாயே!

வெற்றியின் கூட்டணி

கோபு-சிவிஆர் என்றாலே வெற்றிதான் என்று திரையுலகம் கூறுமளவுக்கு நாம் தயாரித்த ‘கலாட்டா கல்யாணம்’ படம் பெயர் பெற்றது. நட்சத்திர இரவுக்காக நான் எழுதிய ஒரு மணி நேர நாடகத்தை சிவாஜி கணேசன் திரைப்படமாக எடுக்க விரும்பியபோது என்னைக் கதை வசனம் எழுதுவதற்கு ஒப்பந்தம் செய்தார். பிறகு வேறு ஒரு இயக்குநரை அவர் ஒப்பந்தம் செய்ய இருந்தபோது, “என் ஸ்கிரிப்ட்டை சி.வி. ராஜேந்திரன் இயக்கினால் எனது வசனங்களைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே கொண்டு சேர்ப்பான்” என்று சொன்னபோது, அவர் உன்னையே இயக்குராக ஒப்பந்தம் செய்தார். அந்தப் படத்தின் வெற்றியைப் பார்த்த பிறகு, “ராஜேந்திரன் இனி நமது ராம்குமார் மற்றும் சிவாஜி பிலிம்ஸ்சின் ஆஸ்தான இயக்குநர்” என்று அறிவிப்பே செய்தாரே சிவாஜி கணேசன். நாம் இருவரும் சேர்ந்து தொடர் வெற்றியை அளித்துக்கொண்டிருந்தோம் அல்லவா…!

‘கலாட்டா கல்யாணம்’ டீமை வைத்து மற்றொரு படம் தயாரிக்க வேண்டும் என்று சிவாஜி சொன்னபோது, நாம் பேசிய கதைதான் ' ‘சுமதி என் சுந்தரி’. நானும் நீயும் ஜெயலலிதாவுக்குக் கதை சொல்லப் போனபோது ‘எனது மனநிலையைப் பிரதிபலிக்கும் கதை! இதில் நான் நடிக்காமல் யார் நடிக்கப் போகிறார்கள்?” என்று ஒப்புக்கொண்டு நடித்தது நினைவிருக்கிறதா. “என்னுடைய அபிமான இயக்குநருக்கும், எழுத்தாளருக்கும் ஒரே நேரத்தில் கலைமாமணி விருதைக் கொடுத்து கௌரவிக்கும் பாக்கியத்தை நான் பெற்றேன்'' என்று கூறி முதல்வர் ஜெயலலிதா நம் இருவருக்குமே 1992-ல் கலைமாமணி தந்து கவுரவப்படுத்தியதை மறக்க முடியுமா?

துக்கம் விசாரிக்கப்பட்டேன்

‘திக்கு தெரியாத காட்டில்’ என்ற எனது நாடகத்தைப் பார்க்க வந்திருந்த நீ, “இந்தநாடகத்தை எனக்குக் கொடு. நான் படமாக எடுக்கிறேன்” என்று உரிமையுடன் எடுத்துக்கொண்டாய். இன்றுவரை பாராட்டப்படும் படம் அந்தப் படத்தை எடுத்து முடித்து முதல் பிரதி பார்த்தபோது “என்ன ராஜி! படம் இவ்வளவு நீளமாக இருக்கு!” என்றேன். “உன் வசனங்களைக் குறைக்கவே மனசு வரலை கோபு!” என்றாய். “உன் நகைச்சுவை ஸ்ரீதருக்கு ஊறுகாய். எனக்கு அதுதான் சோறு” என்று கூறி என்னைக் கலங்க வைத்தவனல்லவோ நீ.

சிவாஜி மகன் பிரபுவை ‘சங்கிலி’ படத்தின் மூலம் நடிகனாக்கினாய். ‘ராஜாவீட்டுக் கன்னுகுட்டி’ படத்துக்கு கோபு கதை வசனம் எழுதினால் நன்றாக இருக்கும் என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் நாம் இருவரும் ஒன்றாகப் பணியாற்ற வழி செய்தாய். “நீ உரத்த குரலில் பேசியது கிடையாது. அமைதியானவன், எதிரிகள் இல்லாதவன்” என்று கவிஞர் வைரமுத்து இப்போதுதான் தொலைபேசியில் தனது வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டார். கவிஞர் வைரமுத்து உன்னை போற்றிக் கூறி,“யாரிடம் துக்கம் விசாரிப்பது என்று யோசித்தேன். பிறகு உங்கள் ஞாபகம் வந்தது” என்றபோது நம் இருவரின் நட்புக்குக் கிடைத்த பெருமையாகவே இதைக் கருதுகிறேன்.

ஸ்ரீதர் ராஜராஜ சோழன் என்றால் நீ ராஜேந்திர சோழன். அவரது படங்கள் பெரிய கோயில் என்றால் உனது படங்கள் கங்கை கொண்ட சோழபுரம். பழுவேட்டரையர் போன்று நான் இருவருக்கும் மதியூகியாக இருந்தேன் என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.

புகழுடன் வாழ்ந்து புகழுடன் மறைந்து விட்டாய். சித்ராலயா என்னும் ஆலயத்தின் கடைசித் தூணாக நான் இருக்கும் வரை உனது நினைவுகளும் என்னோடு இருக்கும்.

உலராத விழிகளோடு

‘சித்ராலயா’ கோபு

படங்கள் உதவி ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்