எண்ணிக்கையில் நான்குக்குக் குறையாத குறும்படங்கள் இடம்பெற வேண்டும். அவற்றை, திரைக்கதை உத்தி அல்லது ஒரு மையப் பொருளை முன்னிறுத்தி, மிகப் பொருத்தமாக ஒரே சரமாகத் தொடுத்துத் தர வேண்டும்.
பல கதைகள் இருந்தாலும் ஒரு தரமான முழு நீளத் திரைப்படம் பார்த்த திரை அனுபவத்தை அது கொடுக்குமானால், அதுவே சிறந்த ஆந்தாலஜி முயற்சி. அதை அயர்ச்சி ஏற்படுத்தாத தரமான முயற்சியாகப் பார்வையாளர்களுக்கு மனம் நிறையக் கொடுத்து அனுப்பும் மாயத்தைச் செய்கிறது ‘ஹாட் ஸ்பாட்’.
நடிகர், வானொலி அறிவிப்பாளர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் எனத் தனது பன்முகத் திறமைகளைக் காட்டி வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக்கின் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் இது.
நல்ல கதைகளைத் தேடிக்கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார் ஓர் உதவி இயக்குநர். ‘ஹேப்பி மேரீட் லைஃப்’, ‘கோல்டன் ரூல்ஸ்’, ‘தக்காளிச் சட்னி’, ‘ஃபேம் கேம்’ ஆகிய நான்கு வெவ்வேறு கதைகளைச் சொல்கிறார்.
அலட்சியமாகக் கதை கேட்க உட்காரும் தயாரிப்பாளர், ஒவ்வொரு கதையையும் கேட்டு முடித்ததும் அவை தரும் அதிர்ச்சியால் ஆடிப்போய், கழிவறைக்கு எழுந்து சென்று வருவது, தண்ணீர் குடித்து ஆசுவாசப்படுத்திக்கொள்வது என்று பார்வையாளர்களின் எண்ணவோட்டத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.
கதை சொல் லும் உதவி இயக்குநருக்கும் ஒரு மறைமுக ‘அஜண்டா’ இருப்பது ‘அட!’ போட வைக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.பாலமணி மார்பனே கதை கேட்கும் தயாரிப்பாளராகவும் படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் உதவி இயக்குநராகவும் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நான்கில், ‘ஹேப்பி மேரீட் லைஃப்’ ‘ தக்காளிச் சட்னி’ ஆகிய இரண்டு கதைகள் பாலினச் சமத்துவம், பெண்ணுரிமை, கற்பு என்பதில் ஆணுலகின் இரட்டை நிலைப்பாடு ஆகியவற்றை அவர்களது சட்டைக் காலரைப் பிடித்து நேர்க்குத்தாக, நச்சென்று கேள்விகளைக் கேட்டிருக்கின்றன. அந்த வகையில் ஒரே மையப் பொருளைக் கொண்டிருக்கின்றன.
‘ஃபேம் கேம்’ என்கிற நான்காவது கதை, தொலைக்காட்சி ‘ரியாலிட்டி’ நிகழ்ச்சிகளில் சிறார்களை, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பெற்றோர்களும்பொறுப்பின்றி எவ்வளவு மோசமாகக் கையாள்கிறோம் என்பதைச் சித்தரிக்கிறது. அது சமுத்திரக்கனியின் பாணியில் சற்று தூக்கலான போதனையாக இருக்கிறது.
என்றபோதும் தொலைக்காட்சி உலகிலிருந்து வந்திருக்கும் விக்னேஷ் கார்த்திக், சிறார்களின் மீதான அணுகுமுறையில் தனது தாய் வீட்டின் பொறுப்பின்மையைத் தயக்கமின்றி விமர்சித்திருப்பதைப் பாராட்டலாம்.
‘கோல்டன் ரூல்ஸ்’ என்கிற இரண்டாவது கதை, காதலின் எதிர்பாராமையைப் பேசு கிறது. காதலித்த இருவர் திருமணம் நோக்கி நகரும் போது, இருவரும் ஒன்றுவிட்ட சகோதர, சகோதரி என்று தெரிய வருகிறது. அப்போது அவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள் என்பதைப் பாதியில் விட்டுச் சென்றிருக்கிறார் இயக்குநர். இது இயக்குநரின் போதாமையைக் காட்டிவிடுகிறது.
அக்காள் மகள், அத்தை மகன், தாய் மாமன், முறை மாமன், முறைப் பெண் என நெருங்கிய ரத்த உறவில் திருமணம் செய்வதால், மரபணுக் குறைபாட்டுச் சிக்கல் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கின்றன என்பது அரசு தரும் புள்ளி விவரம். இது பற்றி காதலர்கள் இருவரும் விவாதித்து, கைக்குலுக்கிப் பிரியும் விதமாக முடிவை அமைத்திருந்தால், அது வெற்று அதிர்ச்சியுடன் முடிந்துபோகும் கதையாக இல்லாமல் அர்த்தம் மிகுந்த அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.
நான்கில் மூன்று கதைகளில் இழையோடும் வெகு இயல்பான நகைச்சுவை, ஒரு கதையில் ஆண் பாலியல் தொழிலாளர் கதாபாத்திரத்தை மையப்படுத்தியது (தமிழ்த் திரையில் முதல் முறை), நான்கு கதைகளிலும் பிரபலமான நடிகர்களை முதன்மைக் கதாபாத்திரங்களுக்குள் பொருத்தி யதுடன், பேசாப் பொருளை அழுத்தமாகப் பேசி சம்பவம் செய்திருக்கிறது இந்த ‘ஹாட் ஸ்பாட்’.
- jesudoss.c@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago