சி
வாஜிகணேசன் ஒத்த உருவத்துடன் கூடிய இரட்டை வேடங்களில் நடித்த ‘உத்தமபுத்திரன்’ திரைப்படம் வெளிவந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், அந்தப் படத்தைத் திரும்பத் திரும்பப் பார்ப்பது இன்னமும் அலுக்காத ஒரு கலையனுபவத்தைத் தருகிறது.
செய்தியைக் கொண்டுசெல்லும் வீரனை மறைந்திருந்து அம்பெய்திக் கொல்லும் முதல் காட்சியிலேயே தொற்றிக்கொள்கிற பரபரப்பு, படம் முடியும்வரை தொய்வின்றித் தொடர்கிறது. இரண்டே கால் மணி நேரத் திரைப்படத்தில் முதல் இருபது நிமிடங்களிலேயே படத்தின் மொத்த முன்கதைச் சுருக்கத்தையும் சொல்லிமுடித்து அரைமணி நேரத்தில் படத்தின் உச்சக்கட்டச் சிக்கலுக்குள் அழைத்துச்சென்றுவிடுகிறது இப்படம். முதல் காட்சியிலேயே திரைப்படம் தொடங்கிவிட வேண்டும் என்ற திரைக்கதையின் வெற்றிச்சூத்திரம் சரியாகப் பொருந்திவந்த மிகச் சில தமிழ்த் திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
வியப்பூட்டும் அம்சங்கள்
படத்தில் இடம்பெறும் முதல் பாடல் ஒரு தாலாட்டு. தாய்மாமனின் தவறான வழிநடத்தலில் வளரும் விக்கிரமனையும் அரண்மனைப் பணியாளரின் பொறுப்பில் தலைமறைவாக வளரும் பார்த்திபனையும் அந்த ஒரே பாடலில் அடுத்தடுத்து காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் இன்னமும் ஆச்சர்யப்படுத்துகிறது. அரண்மனை இளவரசன் பொம்மைக் குதிரையில் ஆடிக்கொண்டிருக்கும்போது கானகத்தில் வளரும் அவனுடைய சகோதரன் உண்மையான குதிரையிலேயே பவனிவந்துகொண்டிருக்கும் காட்சியே இரண்டு பேரையும் ஒப்பிட்டுக் காட்டும் ஒரு சிறந்த குறியீடுதான்.
‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று ஸ்ரீதர் எழுதிய நறுக்குத் தெறித்தாற்போன்ற வசனம் படத்தின் முழுக்கதையையும் ஒரே வாக்கியத்தில் சொல்லி முடிக்கிறது. முடிசூட்டும் விழா மண்டபத்துக்கு சிவாஜிகணேசன் நடந்துவரும் காட்சியும் தாய்மாமன் நாகநாதனை நிர்வாகப் பொறுப்பில் அமர்த்திவிட்டு, அவையினரிடம் சம்மதம்தானே எனக் கேட்டு இல்லையா என ஒரே வார்த்தையில் அதை உறுதிப்படுத்திக்கொள்ளும் விதமும் இன்னமும் ரசிக்கவைக்கின்றன.
‘முல்லை மலர் மேலே’ என்று கனிந்துருகும் காதலும் ‘யாரடி நீ மோகினி’ என்று நடனமிடவைக்கும் கொண்டாட்டமும் ‘காத்திருப்பான் கமலக்கண்ணன்’ என்று காதலின் ஏக்கமும் பாடல்களை இன்னமும் முணுமுணுக்கவைத்துக்கொண்டிருக்கிறது. பாடல்களுக்கான முக்கியத்துவம், படம் முழுக்கத் தொய்வே இல்லாமல் விறுவிறுப்பாக நகர்வது, கவனம் ஈர்க்கும் ஒளிப்பதிவு என்று ஸ்ரீதர் பின்னாட்களில் இயக்கிய படங்களில் இந்தக் கூறுகளைப் பார்க்க முடிகிறது.
இலக்கியத்தின் வழியாக
சிவாஜி-பத்மினி- எம்.என்.நம்பியார் என்று திறமையான கலைஞர்களின் நடிப்பும் ஜி.ராமநாதனின் இசையும் வின்சென்ட்டின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு மேலும் செழுமை சேர்த்தன. எனினும், இந்தப் படத்தின் மையம், உருவத்தில் ஒத்திருக்கும் இரட்டைச் சகோதரர்களின் கதை என்பதுதான்.
இதே கதை இதே பெயரில் 1940-ல் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடிக்கப் படமாகியிருக்கிறது. பி.யு.சின்னப்பா நடித்த அந்த முதலாவது ‘உத்தமபுத்திரன்’தான் தமிழின் முதல் இரட்டை வேடப் படம். 1929-ல் ஆலன் வான் இயக்கத்தில் வெளிவந்த ‘தி அயன் மாஸ்க்’ படத்தின் தழுவல்தான் அந்தப் படம். அந்தப் படத்துக்கான ஆதாரக் கதை பிரெஞ்ச் எழுத்தாளர் அலெக்ஸாண்டர் த்யுமா 1850-ல் எழுதிய ‘தி மேன் இன் தி அயன் மாஸ்க்’ என்ற நாவல்.
16chrcj_uttamapudran 3rightபி.யு.சின்னப்பா நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் சிவாஜி நடித்த ‘உத்தமபுத்திர’னுக்கும் நடுவில் இன்னொரு உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட இன்னொரு தமிழ்த் திரைப்படமும் வெளிவந்தது. அந்தப் படம் 1949-ல் வெளிவந்த ‘அபூர்வ சகோதரர்கள்’. சிவாஜியின் ‘உத்தமபுத்திர’னில் அவருக்குத் தந்தையாக நடித்தாரே எம்.கே.ராதா. அவர்தான் அபூர்வ சகோதர்களாக நடித்தவர்.
அந்தப் படத்தின் மூலக்கதையாசிரியரும் அலெக்ஸாண்டர் த்யுமாதான். அவர் எழுதிய தி கார்சிகன் பிரதர்ஸ் நாவலைத் தழுவித்தான் ‘அபூர்வ சகோதரர்கள்’ உருவானார்கள். ஆக, திரைப்படத்தின் வித்தியாசமான கதைகளுக்கும் களங்களுக்கும் கதாபாத்திரங்களுக்கும் இலக்கியமே அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக இருந்துவருகிறது என்பதற்கு ‘உத்தமபுத்திரன்’ ஓர் உதாரணம்.
தமிழில் அதன் பிறகு வெளிவந்த உருவ ஒற்றுமை கொண்ட சகோதரர்களின் கதைகளில் எல்லாம் ‘உத்தமபுத்திர’னின் தாக்கம் கொஞ்சமாகவோ முழுமையாகவோ இருக்கிறது. இயக்குநர்களிடத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்பதைத் தாண்டி ‘உத்தமபுத்திரன்’ ரசிகர்களிடத்தில் உருவாக்கிய தாக்கம்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும்.
‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ அதே கதையை நகைச்சுவை, சமகால அரசியலோடு சேர்த்துச் சொல்லி வெற்றிபெற்றது. அடுத்த பாகமும் தயாராகிவருகிறது. தழுவல் ஒருபக்கம் இருக்கட்டும், ஒரிஜினல் ‘உத்தமபுத்திரன்’ படத்தின் கதையும் வசனங்களும்கூட இன்றைய அரசியல் சூழலுக்குப் பொருத்தமாகத்தானே இருக்கின்றன.
‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’.
படங்கள் உதவி: ஞானம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago