லைவ் சர்வதேசப் படவிழா 2018: மண், தண்ணீர், காற்று மற்றும் திரைவிழா

By திரை பாரதி

ர்வதேச, தேச அளவிலான தலையாய பிரச்சினை பொருளியல் சார்ந்ததோ வளர்ச்சி சார்ந்ததோ அல்ல. உலகம் முழுமைக்குமான பொதுவான சிக்கல், சூழல் மற்றும் பருவநிலை சார்ந்த மாறுபாடுகளும் அதனால் உருவாகியுள்ள அசாதாரண நிலையுமே.

இதுவரை பூமியில் வாழும் அத்தனை உயிர்களும் எதிர்கொண்ட சிக்கல்களிலிருந்து இது முற்றிலும் வேறானது. உயிர்வாழ்வதற்கான சூழல் ஒட்டுமொத்தமாக அழிந்துகொண்டிருக்கிறது. தங்களைக் காத்துக்கொள்ள அல்லது எஞ்சியிருக்கும் சூழலைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டிய அவசியமான தருணம் இது.

அழிவின் பிரதான சாட்சியாய் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரம் இன்று நம் முன் நிற்கிறது. அந்த நகரில் தண்ணீர் சுத்தமாக இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளதாக சமீபத்திய செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. இன்று அந்த நகருக்கு ஏற்பட்ட நிலை நாளை உலகம் முழுமைக்கும் நடக்கப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. சூழலுக்கான ஆபத்து என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் சார்ந்ததோ ஒரு நாட்டுக்கு மட்டும் உள்ள தனிப்பட்ட பிரச்சினையோ அல்ல. இது பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழலை முற்றிலும் சிதைக்கிறது. இது ஒட்டுமொத்த பூமிக்குமான பிரச்சினை.

தண்ணீர், உணவு, காற்று, மண் உள்ளிட்ட அனைத்தும் வாழும் அத்தனை உயிர்களுக்கும் பொதுவானவை. ஆனால், மனித சமூகமானது இவை அனைத்தையும் தங்களின் சுயநலத்துக்காக மாசு படுத்தி, ஒரு மிகப் பெரிய அழிவுக்கு இட்டுச் செல்கிறது. இந்தத் தருணத்தில்தான், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த குரல், முன் எப்போதும் இல்லாத வகையில் ஓங்கி ஒலிக்க வேண்டி இருக்கிறது. அரசியல், கலை, இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் சுற்றுச்சூழல் பேசுபொருளாக்கப்பட வேண்டும்.

இதைக் கலை வடிவில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முயற்சியின் தொடக்கமாக, சென்னை லயோலா கல்லூரியின் LIVE (Loyola Institute of vocational Education) துறையும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் சர்வதேசச் சூழலியல் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்திருக்கின்றன.

இதுபற்றி லயோலா கல்லூரியின் முதல்வர் சேவியர் ஆரோக்கியசாமியிடம் கேட்டபோது, “சென்னை லயோலா கல்லூரி கடந்த 90 ஆண்டுகளாகக் கல்விப் பணியில் அனைத்துத் தரப்பு மக்களோடும் இணைந்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. காட்சி ஊடகத் துறையைத் (LIVE) தொடங்கி 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது லயோலா. இதை அர்த்தபூர்வமாகக் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்துடன் கல்லூரியில் இந்த ஆண்டு நடத்தும் எல்லா நிகழ்வுகளையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னிறுத்தியே நடத்திவருகிறோம்.

அதில் முக்கியமான ஒன்றாக, நான்கு நாட்கள் நடைபெறும் சர்வதேசச் சுற்றுச்சூழல் திரைப்பட விழாவைச் சொல்லலாம். தமிழகத்தில் சூழலியல் தளத்தில் முன்னின்று செயல்படும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்போடும் சுற்றுச்சூழலுக்கு என்று தனி இணைப்பிதழை வெளியிட்டுவரும் ‘தி இந்து’ தமிழ் நாளிதழுடனும் இணைந்து இந்தத் திரைப்பட விழாவை முன்னெடுப்பதை இன்னும் அர்த்தபூர்வமாக மாற்றியிருக்கிறோம்” என்கிறார்.

முக்கிய முகங்களும் படத் தேர்வும்

வரும் பிப்ரவரி 20 முதல் 23 வரை சென்னை லயோலா கல்லூரியின் காட்சி ஊடகத்துறை அரங்கில் நடைபெறும் இந்த சர்வதேசத் திரைப்பட விழாவை நடிகர் விஜய் சேதுபதி தொடங்கிவைக்கிறார். எழுத்தாளர் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ நாடகத்தை இயக்குநர் அருண்மொழியின் உருவாக்கத்தில் ஸ்தானிலாவ்கி குழுவினர் நவீன நாடகமாக வெளிப்படுத்தும் நிகழ்வுடன் திரைப்பட விழா தொடங்குகிறது. இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின், நலன் குமரசாமி, லிஜோ ஜோஸ் பெல்லிசெரி, பி.சி. ஸ்ரீராம், ஸ்ரீகர் பிரசாத் போன்ற ஆளுமைகள் இதில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

பல்வேறு பகுதி மக்களின் சூழலியல் சிக்கல்கள் குறித்து பொதுவான ஒரு புரிதலைப் பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்க அருண் கண்ணன் தலைமையிலான பேராசிரியர் குழு படத் தேர்வில் கவனம் செலுத்தியிருக்கிறது. தேர்வுக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் வங்கதேசம், திபெத், அமெரிக்கா, ஈரான், பொலிவியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மொழித் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

“ஒரு உண்மையான படைப்பாளி மக்களின் மொழியில், மக்களுக்காகப் பேச வேண்டும். அன்றைய ஹிட்லரின் பாசிசத்தை சாப்ளின் தன் திரைமொழியில் துணிவுடன் வெளிப்படுத்தியதைப் போல, சாதியத்தின் கொடுமைகளைத் தற்கால மராத்தி பட இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே தனது திரைப்படங்களில் பதிவு செய்வதைப்போல இருக்க வேண்டும். சூழலியல் படங்களில் அதுபோன்ற படைப்புகளுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறோம்” என்கிறார்கள் படத் தேர்வுக் குழுவினர்.

கொஞ்சம் முன்னோட்டம்

படவிழாவில் திரையிடப்பட இருக்கும் படங்களில் ‘த டாம்ட் ரெய்ன்’ (The Damned rain) என்ற மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த படம் பார்வையாளர்களை உலுக்கி எடுக்கும் என்று நம்பலாம். நம் நாட்டு விவசாயிகளின் பிரச்சினைகளை மையமாக வைத்துப் பேசுகிறது இந்தப் படம். குறிப்பாக, மராட்டிய மாநிலம் விதர்பா பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி எத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார், அதற்கான எதிர்வினைகளை எவ்வாறு அவர் வெளிப்படுத்துகிறார் என்பதை உண்மைக்கு மிக அருகில் நின்று பேசுகிறது.

பொலிவிய நாட்டின் தண்ணீர் சார்ந்த சிக்கலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது ‘ஈவன் த ரெய்ன்’ (Even the Rain). தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்து அங்கு நடைபெறும் போராட்டத்தையும் அதனால் ஏற்படும் நிகழ்வுகளையும் அந்தப் பகுதியின் மக்களை வைத்தே காட்சிப்படுத்தியுள்ளனர். சர்வதேச அளவிலான சூழலியல் படங்களின் வரிசையில் இந்தப் படத்துக்கு முக்கிய இடமுண்டு. தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கத் தொடங்கியிருக்கும் நமக்கு இந்தப் படம் எப்படி அறிவூட்டுகிறது என்பதைப் படத்தைக் காண்பதன் மூலமே உணர முடியும்.

ஈராக், துருக்கி நாடுகளின் எல்லையில் நடைபெறும் அமெரிக்கத் தாக்குதல்களிலிருந்து தப்பித்து, அகதிகள் முகாமில் தஞ்சமடையும் 13 வயது சிறுமி எதிர்நோக்குகிற சூழலை, பிரச்சினைகளை அதன் அரசியல் பின்னணியோடு நம்மை உறைய வைக்கும்விதமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறது ‘டர்ட்டில்ஸ் கேன் ப்ளை’ (Turtles can fly). பல சர்வதேச விருதுகளைப் பெற்ற இப்படம் வெகுஜனங்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்த ஒன்று.

இதுபோன்ற முக்கிய படங்களைத் திரையிடும் அதேநேரம் பார்வையாளன் தன்னை அமைதிப் படுத்திக்கொள்ளும்விதமாகச் சூழலியல் சார்ந்த சில கதைப்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. அவற்றில் ஒன்று ‘த இம்பாஸிபிள்’ (The Impossible).

2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில், சுமத்ரா தீவில் சுனாமி ஏற்பட்டது. அந்த நேரத்தில் தாய்லாந்துக்குச் சுற்றுலா வந்த குடும்பம் சுனாமியில் மாட்டிக்கொண்டது. ஒட்டுமொத்த உலகத்தையே அதிரவைத்த அந்த இயற்கைப் பேரிடரில் சிக்கும் அந்தக் குடும்பம் எதிர்கொண்ட நிகழ்வுகளின் உண்மைக் கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தரும் செய்திகள் வெளிப்படையானவை.

தினசரி திரையிடலுக்கு நடுவே முக்கியப் பங்கேற்பாளர்களுடன் படம் பற்றியும் சூழலியல் பற்றியும் உரையாடல் நடைபெற இருக்கிறது. மாணவர்களுக்கு 200 ரூபாயும் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்களுக்கு 250 ரூபாயும் மற்ற சினிமா ஆர்வலர்கள் அனைவருக்கும் 300 ரூபாயுமாகப் பங்கேற்புக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘லைவ்’ சர்வதேசப் படவிழாவில் பங்கேற்க 9500149944, 9500092712 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்