காட்சி ஊடக வகைமையில் உண்மையின் ஒளிவு மறைவற்ற முகமாகச் சாட்சியம் சொல்பவை ஆவணப்படங்கள். தமிழ் ஆவணப் படத்துறையில் அதன் வலிமையை உணர்ந்து, அதில் முழுநேரச் செயற்பாட்டாளராகத் தொடர்ந்து இயங்குபவர்கள் அரிதினும் அரிது. அப்படியோர் அரிய கலைஞர், களச் செயற்பாட்டாளர் என்று ஆர்.பி.அமுதனை ஐயத்துக்கு இடமின்றிக் கூறிவிடலாம்.
தமிழகத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ‘வளர்ச்சிக்கான தொடர்பிய’லில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், இந்திய அளவில் அறியப்படும் முக்கிய ஆவணப்படப் படைப்பாளி. சமூகவியல், அரசியல், பொருளியல் எனப் பல்வேறு கருப்பொருள்களில் இதுவரை 20க்கும் அதிகமான ஆவணப்படங்களை இயக்கியிருக்கும் இவர், அவற்றின் வழி சமூக உரையாடலை உருவாக்க முயன்று வருகிறார்.
கடந்த 1996இல் ‘மறுபக்கம்’ என்கிற மாற்று ஊடகக் குழுவை உருவாக்கி, மதுரையில் கடந்த 25 ஆண்டுகளாகவும் சென்னையில் 12 ஆண்டுகளாகவும் ‘பன்னாட்டு ஆவணப்பட – குறும்பட விழா’க்களை ஒருங்கிணைத்து நடத்தி வருபவர். தற்போது 12வது சென்னை பன்னாட்டு ஆவணப்பட விழாவை அவர் நடத்தி முடித்திருந்த ஒரு வைகறையில் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
புத்தாயிரத்துக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் ஆவணப்படத்துறை எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது? - பொதுவாகத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படத் துறை இன்னும் போதுமான வளர்ச்சியை அடையவில்லை என்றே சொல்வேன். காரணம், ஆவணப்படம் என்கிற கலை வடிவத்துக்கு இன்னும் போதுமான ஆதரவு இல்லை.
தரவுகளை, உண்மையை மையமாகக் கொண்ட அறிவியல்பூர்வமான வரலாற்றுப் பார்வையை நம்மிடம் ஒரு ஆவணப்படம் கோருவதால், நிர்ப்பந்திப்பதால், நாம் இன்னும் அதற்கு தயாராக இல்லை. கதைகளின் மீதும் புனைவுகளின் மீதும் நமக்கு அதிக மோகம் இருப்பதால் நாம் இன்னும் ஒரு செறிவான ஆவணப்படத் துறையை, அதற்கான பண்பாட்டை உருவாக்கவில்லை.
மேலும் ஆவணப்படம் என்றால் அது ஒரு பிரச்சினையை மையமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நம்மிடையே இருக்கும் குறுகிய பார்வை கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். எதைப் பற்றியும் ஆவணப்படம் எடுக் கலாம்.
நமது மொழியை, பண்பாட்டை, கல்வி முறையை, சுற்றுச்சூழலை, உணவு முறையை, வழிபாட்டை, விளையாட்டு களை, கதைகளை, சாதனைகளை நாம் ஆவணமாகப் பதியவேண்டும்.
சமீபத்தில் நான் கவிஞர் மனுஷ்யபுத்திரனுடன் இணைந்து ஒருங்கிணைத்த எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படவிழாவின் போது, ‘நம்மிடம் போதுமான எண்ணிக்கையில் படைப் பாளிகளைப் பற்றிய ஆவணப்படங்கள் இல்லை’ என்கிற உண்மை ஓங்கி ஒலித்தது.
அதே நேரம், இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் உருவாக்கமாக வந்திருக்கிற கவிஞர் இந்திரன் பற்றிய ஆவணப்படமும் ராஜ் கெளதமன் பற்றிய ஆவணப்படமும் கலைப்பூர்வமாகவும் அரசியல்ரீதியாகவும் முக்கியமான முன்னெடுப்புகள் என்று சொல்லலாம்.
ஓடிடி தளத்தில் வீரப்பன் பற்றி சமீபத்தில் வந்திருக்கிற இரண்டு புதிய ஆவணப் படங்களும் வெகுசன அளவில் பாராட்டைப் பெற்றிருப்பதும் அதை வியாபார ரீதியாகக் கொண்டு செல்லமுடியும் என்பதும் வரவேற்கத்தக்கதே.
ஆனாலும் கதைப் படத்துடன் ஒப்பிடும்போது நாம் ஆவணப் படத் துறையில் மிகவும் பின்தங்கியுள்ளோம். சொற்பமான எண்ணிக்கையிலேயே படங்கள் வருகின்றன. அவற்றைத் திரையிடுவதற்கான தளங்களும் நம்மிடம் மிகக்குறைவாகவே உள்ளன.
கேரளாத்தில் மாநில அரசே ஒரு பன்னாட்டு ஆவணப்பட விழாவை நடத்துகிறது. நமது மாநில அரசும் அதைப் பரிசீலிக்கலாம். நமக்கென்று ஒரு ஆவணப்பட விழாவை நடத்தலாம். தமிழ்நாட்டில் ஒரு ஆவணப்படப் பண்பாட்டை உருவாக்கலாம்.
உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் ஓர் ஆவணப்பட இயக்குநருக்கு இருக்கும் சவால்கள் என்ன? - உண்மையைத் தற்காலத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் ஆவணப்பட இயக்குநருக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் சிக்கல் தான். இந்தியாவின் மூத்த ஆவணப்பட இயக்குநர்களில் ஒருவரான ஆனந்த் பட்டவர்த்தனின் ‘ரீசன்’ என்கிற படத்தைத் தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் மட்டும்தான் திரையிட முடிந்தது.
சர்வதேச விருதுகள் பெற்ற அந்தப் படம், இந்தியாவில் மதவாதிகளால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், கெளரி லங்கேஷ், கல்புர்கி ஆகிய அறிவுஜீவிகளைப் பற்றியது என்பதாலேயே அதைப் பிற மாநிலங்களில் திரையிடவே இதுவரை முடியவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் முசாபர் நகர் கலவரம் பற்றிய படத்தையோ, ரோஹித் வெமுலா பற்றிய படத்தையோ தமிழ்நாட்டில் திரையிட முடியவில்லை. உண்மை சுடத்தானே செய்யும்.
இன்றைய திறன்பேசி யுகத்தில் இளைஞர்களிடம் ஆவணப்படம் குறித்த புரிதல் இருக்கிறதா? - திறன்பேசிகள் ஆவணப்படத் துறைக்கு மிகுந்த பலனைத் தந்துள்ளன. ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகியவற்றுக்கென்று பிரத்யேகச் செயலிகள் வந்துள்ளன. சிறப்பான உபகரணங்கள் வந்துள்ளன. அவை குறைவான விலையிலும் கிடைக்கின்றன.
இப்போது நம்மிடையே இருக்கும் 4ஜி, 5ஜி இணைய அலைக்கற்றை வசதி, திறன்பேசியில் தயாரிக்கப்பட்ட படங்களை வெகு எளிதாகப் பதிவேற்ற வகை செய்கிறது. ஆனால், இந்த வசதிகள் இளைஞர்கள் மத்தியில் ஆவணப்படமாக உருவெடுத்திருக்கின்றனவா என்பது தெரியவில்லை. நானும் அதற்கான பயிலரங்குகளை இந்திய அளவில் நடத்திவருகிறேன். கூடிய விரைவில் திறன்பேசியைக் கொண்டு எடுக்கப்பட்ட நல்ல ஆவணப்பட முயற்சிகளை எதிர்பார்க்கலாம்.
ஆவணப்படம் எடுப்பது, அவற்றை எடுக்க பயிற்சி அளிப்பது, பட விழாக்களை நடத்துவது என்று தொடர்ந்து மூன்று பத்தாண்டு களாக உங்களால் எப்படி இயங்க முடிகிறது? - நானும் மற்றவர்களைப் போல் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்தவன் தான். என் அம்மா புஷ்பம்தான் எனக்கு எம்.ஜி.ஆர். திரைப்படங்களை அறிமுகப் படுத்தியவர். அதே நேரத்தில் எனது தந்தை இராமலிங்கம் (இப்போது மறைந்துவிட்டார்) பொதுவுடைமை இயக்கத்தில் இருந்ததால், அரசியல் பற்றிய அறிமுகம் அவர் மூலம் சிறு வயதிலேயே கிடைக்கப்பெற்றேன். களப்பணி என்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது.
மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை படிக்கும் போதே டெல்லியில் போய் ஆவணப்படம் பற்றிய பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. சிறுவயதில் எனது பெற்றோர் மூலம் கிடைத்த சினிமா, அரசியல் ஆகிய இரண்டு முக்கியப் பண்பாட்டுக் கூறுகள் ஆவணப் படங்களின் மூலம் இணைவதை அப்போது உணர்ந்தேன்.
உண்மைக்கு நெருக்கமான திரைப்படம் சாத்தியம் என்பதை ஆனந்த் பட்டவர்த்தன், கே.பி.சசி, தீபா தன்ராஜ், சலாம் பென்னுர்கர் ஆகியோரின் படங்களின் மூலமாக கண்கூடாக அறிந்தேன். அவற்றின் போராளிக் குணம் என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது. அதுவே என்னை ஓர் ஆவணப்படச் செயல்பாட்டாளராக்கியது. நான் இதுவரை எடுத்திருக்கும் ஆவணப் படங்கள் அரசியலும் சினிமாவும் கலந்த படைப்புகளாகவே அமைந்துள்ளன என்பதும் தற்செயலானது அல்ல.
நான் ஒரு ஆவணப்பட இயக்குநராக இருப்பதாலேயே, நான் எடுத்த படங்களைத் திரையிடுவதில் இருக்கும் சிக்கல்களை, போதாமைகளை அறிவேன். அவற்றுக்கென்று ஒரு சந்தை இல்லை. விநியோகஸ்தர்கள் இல்லை. தயாரிப்பாளர்களும் இல்லை. நாமேதான் எல்லா வற்றையும் உருவாக்க வேண்டும். மக்கள் இயக்கங்களும் பண்பாட்டு அமைப்புகளும் கல்வி நிறுவனங்களும் கலை ஆர்வம் கொண்ட தனிநபர்களும்தான் என்னைப் போன்ற பல ஆவணப்பட இயக்குநர்களுக்கு தோள் கொடுத்தனர்.
மத்திய அரசாங்கத்தின் நிதி உதவி பெரும்பாலும் வட இந்திய மேட்டுக்குடி இயக்குநர்களுக்கே போய்ச் சேரும். தமிழ்நாட்டில் மாநில அரசு சார்பில் நிதி உதவி எதுவும் இதற்கென்று எப்போதுமே கிடையாது. நமது மைய நீரோட்ட மனநிலையில் ஆவணப்படத்துக்கு இடமே இல்லை.
மதுரையில் யதார்த்தா திரைப்பட இயக்கம் எண்பது, தொண்ணூறு களில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அவர்களின் திரையிடல்களில்தான் நான் உலக சினிமாவை மதுரையில் எனது கல்லூரி, பல்கலைக்கழக காலத்தில் பார்த்தேன். அந்தத் திரையிடல் கொடுக்கும் அறிவெழுச்சியை நான் அனுபவித்திருக்கிறேன்.
இப்படி நான் பெற்ற அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவே எனது நண்பர்களுடன் கல்லூரி பேராசிரியர்களின் உதவியுடன் ‘மறுபக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கினோம். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான திரைப்பட விழாக்களை, திரையிடல் களை இந்தியாவெங்கும் நடத்தியிருக் கிறோம். அதற்கான தேவை மேலும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சமூக மாற்றத்துக்காகவும் உரையாடலை உருவாக்குவதற் காகவும் கடின உழைப்பின் வழி உருவாகும் ஆவணப்படங்களுக்குத் தொலைக்காட்சிகள் ஏன் இடம் தருவதில்லை? - இந்தியாவில் ஆவணப்படங்களை தேசியத்தொலைக்காட்சியான தூர்தர்சன் முன்பு தயாரித்து வந்திருக்கிறது. பல இயக்குநர்கள் தம் திறமைகளை அதன் மூலம் வளர்த்துக் கொண்டுள்ளனர், வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
தனியார் தொலைக்காட்சிகள் வந்த பிறகு அந்த வழமை வளரவில்லை. சில தொலைக்காட்சிகள் ஆங்காங்கே சில முயற்சிகள் செய்திருந்தாலும், அது பெரிதாக உருவெடுக்கவில்லை. உடனடிச் செய்திகளைப் பரபரப்பாக ஒளிபரப்புவதிலும் விவாதம் என்கிற பெயரில் நடக்கும் மல்யுத்தத்திலும் இருக்கும் மோகமும் நிதானமான ஆவணப்படங்களுக்கான இடத்தைச் சுருக்கிவிட்டது. மேலும் ஆவணப்படம் என்பது ஒரு அறிவுச் செயல்பாடு.
அதை வியாபார நோக்கில் பார்க்காது சமூக முதலீடாகப் பார்க்கும் பட்சத்தில் தமிழ்த் தொலைக்காட்சிகளோ, தமிழ்நாடு அரசோ நல்ல இடையீடு செய்யமுடியும்.
தற்போது நீங்கள் நடத்தி முடித்துள்ள 12வது சென்னை சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களின் முக்கியத்துவம் குறித்துக் கூறுங்கள்? - இந்தத் திரைப்பட விழா ஒரு சிறப்பான கூட்டுச் செயல்பாடு. பல்வேறு இயக்குநர்கள், கல்லூரிகள், பண்பாட்டு அமைப்புகள் இணைந்து எந்தக் கைமாறும் எதிர்பாராமல் இந்த விழாவை நடத்தினோம். நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய, பன்னாட்டு ஆவணப்படங்களை, குறும்படங்களை 13 இடங்களில் பத்து நாள்களில் திரையிட்டோம்.
ஆயிரக்கணக்கானோர் இவ்விழாவில் தரமான படங்களைக் கண்டுகளித்துள்ளனர். பலர் முதன்முறையாக இத்தகைய படங்களைப் பார்த்ததாகப் பகிர்ந்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் தாமாகவே கலந்து கொண்டு தமது படைப்புகளைத் திரையிட்டனர். கலந்துரையாடலிலும் பங்கேற்றனர். இந்த மக்கள் இயக்கம் தொடரும்.
சிறந்த திரைப்படங்களைப் பள்ளி மாணவ-மாணவியர் மத்தியில் திரையிடும் அதேநேரம், ஆவணப்படங்களைப் பள்ளிக்கூடங் களில் திரையிட முடியாதா? - நாங்கள் பல பள்ளிகளில் ஆவணப் படங்களையும் திரையிடுகிறோம். மாணவர்களுக்கு மொழி புரியவில்லை யென்றால் அப்போதே மொழிபெயர்ப்பும் செய்து படம் பார்க்கும் அனுபவத்தை ஊக்குவிக்கிறோம்.
பள்ளிகளில் தமிழ்நாடு அரசு படங்களைத் திரையிடும் திட்டத்தில் ஆவணப்படங்களையும் சேர்க்கவேண்டும் என்பதை வேண்டு கோளாக வைக்க விரும்புகிறோம். எங்களைத் தொடர்புகொண்டால் இந்திய மற்றும் பன்னாட்டு அளவில் ஆவணப் படங்களைச் சேகரித்துக் கொடுக்கவும் தயாராக உள்ளோம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago