நீர்க்குமிழி: குடும்பத்தைக் காப்பாற்ற திரை நடிப்பு! - கே.ஆர் செல்லம்

By பிரதீப் மாதவன்

சி

னிமா பேசத்தொடங்கியபோது, நடிகர்கள் பாடுவதும் செந்தமிழில் பேசுவதுமே மக்களுக்கு அதன் மீதான கவர்ச்சியைக் கூட்டியது. ஆனால் அடுத்தகட்ட கவர்ச்சி என்பது, காதல் வசனங்கள், காதலையும் பாலுணர்வையும் தூண்டும் வரிகளைக் கொண்ட பாடல்கள், நாயகனும் நாயகியும் கைகளைப் பிணைத்தபடி நந்தவனத்தில் நடப்பது எனத் தொடங்கி ஒரு கட்டத்தில் கதாநாயகன் கதாநாயகியை அலேக்காகத் தூக்கி மஞ்சத்தில் கிடத்தும் காட்சி என்பதுவரை அதன் எல்லை விரிந்துகொண்டே சென்றது.

காட்டு மனிதன் பிடியில்

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் நேரடியாக வெளியாகத் தொடங்கியிருந்த இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களில் காலும் தொடையும் தெரிய கதாநாயகிகள் வலம் வந்தனர். இது தமிழ் சினிமா எடுத்துக்கொண்டிருந்தவர்களில் சிலருக்குத் துணிவைத் தந்தது. அதன் விளைவுதான் 1938-ல் வெளியான ‘வனராஜ கார்ஸன்’ திரைப்படம். சந்தர்ப்ப வசத்தால் சிறுவயது முதல் காட்டில் வளர்ந்த கதாநாயகன், வில்லனின் மகளான கதாநாயகியைக் காட்டுக்குள் தூக்கிச் சென்றுவிடுகிறான். முதலில் மிரளும் நாயகி, பின் வனராஜனின் நல்ல குணங்களைப் பார்த்து அவனுக்குப் பேசக் கற்றுத் தருகிறாள். இருவரும் காதல் கொள்கிறார்கள்.

15chrcj_balayogini பாலயோகினி’ படத்தில் பேபி சரோஜாவுடன் கே.ஆர்.செல்லம்

கதாநாயகிக்குச் சிறுத்தைப் புலியின் தோலை ஆடையாக அணிவிக்கிறான் நாயகன். வில்லன் இப்போது காட்டுக்குள் நுழைந்து மகளை மீட்க, துப்பாக்கியுடன் வருகிறான். அவனிடமிருந்து நாயகியை அலேக்காகத் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு கடும் பாறைகளும் செடிகளும் நிறைந்த கானகத்துள் ஓடித் தப்பிக்கிறான்.

தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல; தென்னிந்திய சினிமாவுக்கே முதல் வனத் திரைப்படம் அல்லது டார்சான் படம் ‘வனராஜ கார்ஸன்’தான். நாற்பதுகளின் இந்திப் பட உலகில் சாகச நாயகனாகப் புகழ்பெற்றிருந்த ஜான் கவாஸ், காட்டு மனிதன் கார்ஸன் கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்க, அவர் தூக்கி தோளில் வைத்துக்கொண்ட அந்தக் கதாநாயகியாக நடித்தவர் கே.ஆர்.செல்லம்.

‘லக்ஸ் ப்யூட்டி’யின் பரிதாபப் பேட்டி

ஒரு தமிழ்ப் பெண் தொடைகள் முழுவதும் தெரிய அந்தப் படத்தில் நடித்திருந்தது பெரும் பரபரப்பை உருவாக்கியது. ‘வனராஜ கார்ஸன்’ வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தார்கள். ஜான் காவாஸுக்காக அல்லாமல், செல்லம் வரும் காட்சிகளைக் காணத் திரும்பத் திரும்பத் திரையரங்கில் அன்றைய ரசிகர்கள் திரண்டார்கள். படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. பல பத்திரிகைகள் கதாநாயகியின் கவர்ச்சிக்காகக் கடும் விமர்சனங்களை வைத்தன. கதாநாயகனும் அரை நிர்வாண ஆடையோடுதான் நடித்தார் என்பதுபற்றி அவை மூச்சு விடவில்லை.

“ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இவ்வளவு துடுக்குத்தனம் கூடாது” என ஒரு பத்திரிகை கண்டித்தது. அப்போது செல்லம், “என்னை இந்தப் படத்தில் இவ்வளவு கவர்ச்சியாக நடிக்க வைப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. ஒப்பந்தம் போட்டுக்கொண்டதால் என்னால் எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது” என்று பேட்டி அளித்து, அனைவரது பரிதாபத்தையும் சம்பாதித்துக்கொண்டார்.

15chrcj_lux beuty ‘லக்ஸ்’ விளம்பரத்தில் right

அதன் பிறகு செல்லம் எந்தக் கவர்ச்சிக் கதாபாத்திரத்திலும் நடிக்கவில்லை. ஆனால், இந்தப் படத்தின் மூலம் செல்லத்துக்குக் கிடைத்த புகழை, ‘லக்ஸ்’ குளியல் சோப் நிறுவனம் தனது விளம்பரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டது. ‘வனராஜ கார்ஸன்’ படத்தைத் தொடர்ந்து செல்லம் கதாநாயகியாகவும் இரண்டாம் கதாநாயகியாகவும் நடித்த படங்களின் எண்ணிக்கை குறைவே என்றாலும் அவரது எழிலார்ந்த, குழந்தைத்தனம் மிகுந்திருந்த இளமையான தோற்றம் காரணமாக அவரை ‘லக்ஸ்’ பியூட்டி என்று பத்திரிகைகள் அழைத்தன. அவரது பேட்டியை வெளியிட முண்டியடித்தன. ஆனால், செல்லத்தின் நிஜமான பூர்விகம் எந்தப் பேட்டியிலும் பதிவாகவில்லை.

தஞ்சையின் புத்ரி

அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் ஜில்லாவின் பாபநாசம் தாலுகாவுக்கு உட்பட்ட கம்பயநத்தம் கிராமம்தான் கே.ஆர்.செல்லத்தின் சொந்த ஊர். செல்லத்தின் தகப்பனார் கே.ரங்கசாமி பள்ளிக்கூட வாத்தியார். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். பெயர் கனகவல்லி. கடைக்குட்டிப் பெண். படிப்பிலும் பாட்டிலும் படுசுட்டி. அன்றைய வழக்கப்படி பெண் பெரியவளாகிவிட்டால் வருடம் திரும்பியதும் கல்யாணம்தான். அப்படித்தான் கனகவல்லிக்கு 14 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள்.

புகுந்தவீட்டில் கனகவல்லிக்குச் சொல்லொண்ணா துயரம். சம்பாத்தியம் ஏதுமில்லாத கணவன், மாமியார் கொடுமை. துளைத்தெடுக்கும் வறுமை. இவற்றுக்கு மத்தியில் இரண்டு குழந்தைகளை ஈன்றெடுத்தாள். தகப்பனார் தந்த சீதனம் அத்தனையும் கரைந்துவிட, கணவனை விட்டுக்கொடுக்காமல் அவருடைய உறவினர்கள் செல்வாக்குடன் வாழ்ந்து வந்த பம்பாய்க்குச் சென்று பிழைத்துக்கொள்ளலாம் என்று அங்கே சென்றது குடும்பம். உறவினர் வீட்டில் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத்தானே? சுவரிலடித்த பந்துபோல் மதராஸ் வந்து சேர்ந்தார்கள்.

பிள்ளைகளைக் காக்க

மதராஸில் ‘கௌசல்யா’ என்ற படத்தை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது சவுத் இந்தியன் பிலிம் கார்பரேஷன் என்ற நிறுவனம். அந்தப் பட கம்பெனியில் கனகவல்லியுடைய கணவரின் நண்பர் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நண்பனிடம் கெஞ்சிக் கூத்தாடி கம்பெனி வீட்டிலேயே குடும்பத்தை தங்கவைத்தார் கனகவல்லியின் கணவர். அவருக்கு வேலை கிடைத்ததும் வேறு வீடு பார்த்துக்கொண்டுவிடலாம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள் கனகவல்லி. ஒருநாள் வேலைதேடிச் சென்ற கணவன் திரும்ப வரவே இல்லை.

ஒருவாரம் ஆனது, ஒருமாதம் ஆனது. இரண்டு வயதும் மூன்று வயதும் நிரம்பிய இரு குழந்தைகளோடும் கண்ணீரோடும் நின்ற கனகவல்லியின் நிலையைப் பார்த்த கம்பெனியார், “ உன் கஷ்டத்தைப் போக்கிக்கொள்ள இந்தப் படத்தில் நடி. இங்கேயே தங்கிக்கொள்” என்று இரக்கம் காட்டினார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வி.ஐயர் நான்கு காட்சிகளில் வரும் கதாபாத்திரத்தைக் கனகவல்லிக்குக் கொடுத்தார். கனகவல்லி என்ற பெயரை கே.ஆர்.செல்லம் என்று மாற்றினார்.

பிள்ளைகளைக் காக்க சினிமாவில் நடித்தார் செல்லம். அவர் நடித்த முதல் படமான ‘கௌசல்யா’ தோல்வி அடைந்தது. கம்பெனியும் மூடப்பட்டது. இந்த நேரத்தில்தான் அதே படத்தில் நடித்த கே.என்.மீனாட்சி என்ற மூத்த நடிகையின் உதவியால் பல கம்பெனிகளில் அறிமுகப்படுத்தப்பட்டார் கே.ஆர்.செல்லம். ‘தஞ்சாவூர்ப் பெண்’ என்று கேள்விப்பட்டதும் ஊர்ப்பாசம் காரணமாகத் தனது ‘பாலயோகினி’ (1937) படத்தில் முழுநீளக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார், அன்று புரட்சிகர இயக்குநராக மலரத் தொடங்கியிருந்த கே.சுப்ரமணியம். ‘பாலயோகினி’யில் நடித்த பின் கே.ஆர்.செல்லத்துக்கு வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

தேசபக்தியும் நகைச்சுவை சக்தியும்

திருமணம் ஆனவர், இரண்டு பிள்ளைகளின் தாய் என்று கூறினாலும் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத அழகிய இளங்குமரியாகத் திரையில் வலம் வரத் தொடங்கினார் செல்லம். அவற்றில் அவர் நடித்த ‘தேச முன்னேற்றம்’ ‘சூர்யபுத்திரி’ போன்ற தேசபக்திப் படங்களும் ‘மதனகாமராஜன்’, ‘மீரா’ போன்ற புராணப் படங்களும் அவருக்குப் பெயர் பெற்றுத்தந்தன. அதன் பின்னர் அவர் ‘நகைச்சுவைத் தென்றல்’ கே.சாரங்கபாணியின் மனைவி செல்லமாக, ‘என் மனைவி’(1942) படத்தில் கணவரின் நடத்தையைச் சந்தேகப்படும் அசட்டு மனைவியாக மிகச் சிறந்த நகைச்சுவை நடிப்பை வழங்கினார்.

நகைச்சுவை குணச்சித்திர நடிப்பில் அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக நகைச்சுவையுடன் கூடிய குணச்சித்திர அம்மா கதாபாத்திரங்களில் மிளிரத் தொடங்கினார். கே.சாரங்கபாணி - கே.ஆர்.செல்லம் நகைச்சுவை குணச்சித்திரக் கூட்டணி பல படங்களில் தொடர்ந்து ‘பாட்டாளியின் வெற்றி’ (1960) வரை பயணித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்