குடும்பமும் காதலும் கலந்த ஆக்ஷன் கதைகளில் கச்சிதமாகப் பொருந்திவிடும் மாஸ் ஹீரோ ஜெயம் ரவி. ‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தொடர்ந்து, மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடிக்கிறார் ஜெயம் ரவி. இதற்கிடையில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள ‘சைரன்’ வெளியாகவிருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிப்பதற்கு முன் அந்த நாவலை ஒருமுறையாவது படித்தீர்களா? - எனது அம்மா தமிழ் எம்.ஏ. படித்தவர். நான் தமிழை நன்றாக வாசிக்கக் கற்றுக்கொள்ளும் முன்னர், எனது பள்ளிக் காலத்தில் பொன்னியின் செல்வனை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்துக் காட்டியிருக்கிறார். இன்னும் பல புகழ்பெற்ற நாவல்களை அம்மா கதை சொல்வதுபோல் எனக்கு வாசித்துக் காட்டினார்.
சில வருடங்களுக்கு முன்பு பாம்பே கண்ணன் குழுவினர் உருவாக்கிய ‘ஆடியோ புக்’ வழியாக முழு நாவலையும் கேட்டு வியந்தேன். படம் தொடங்கியபோது திரைக்கதையின் இறுதி வடிவம் வந்துவிட்டது. அதை வாசித்தபோது நாவலிலிருந்து அது முற்றிலும் வேறொன்றாக இருந்தது. குழப்பங்களைத் தவிர்க்க நாவல் வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.
‘பொன்னியின் செல்வ’னுக்குப் பிறகு வரலாற்றுத் திரைக்கதைகள் உங்களைத் தேடி வந்தனவா? - பல வந்தன. நமது பெருமைக்குரிய சங்ககால மன்னர் ‘வேள்பாரி’ திரைக்கதை வடிவில் என்னைத் தேடி வந்தார். திரைக்கதையுடன் வந்தவர்கள் செலவு செய்யவும் தயாராக இருந்தார்கள். ஆனால், இயக்குநரைப் பரிந்துரை செய்யும்படி என்னிடம் கேட்டார்கள். அதில் எனக்கு விருப்பம் இல்லை. இயக்குநரைப் பரிந்துரைப்பது நடிகனின் வேலையல்ல.
மக்களின் வாழ்க்கையைப் பேசும் நவீன இலக்கிய நாவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படமாகின்றன. நாவலிலிருந்து உருவாகும் கதைகளில் நடிக்கும் என்ன உண்டா? - திரைக்கதைக்கு ஏற்ற வாழ்க்கைக் கதைகள் நம்மிடம் நாவல்களாக இருப்பது நமது இலக்கியப் பெருமை. அவை படமாகும்போது ரசிகர்களிடம் நிச்சயமாக எடுபடும். இதுபோன்ற ‘ரூட்டெட்’ ஆன கதைகளில் நடிக்கும்போதுதான் நடிகர்களுக்கும் நடிப்புக்கான சிறந்த களம் அமைகிறது. ‘தனி ஒருவன்’ படமும் ‘பூலோக’மும் ஒரே ஆண்டில்தான் வெளிவந்தன.
ஆனால், ‘பூலோகம்’ படத்துக்காக எனக்கு விருது கிடைத்தது. ஏனென்றால் ‘பூலோகம்’ ‘ரூட்டெட்’ கதை. ஆனால் ஒன்று; எவ்வளவு சிறந்த நாவல் என்றாலும் திரைக்கதையாக்குவதில்தான் விஷயமே இருக்கிறது. மணி ரத்னம் சார், வெற்றிமாறன் சார் போன்ற சிலர்தான் அதில் சிறந்து விளங்குகிறார்கள். ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ என ஒருவரே அனைத்தையும் செய்யும் கலாச்சாரம் சில திறமை யாளர்களின் தொடர் வெற்றியால் நமக்கு இடையில் வந்த ஒரு போக்கு.
தமிழ் சினிமாவைத் தவிர வேறு எந்த சினிமா உலகத்துக்குப் போனாலும் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என நான்குமே தனித் தனித் துறைப் பங்களிப்புகளாக உருவாகின்றன. அது இனி இங்கேயும் மாறும். மாறி ஆக வேண்டும்.
‘சைரன்’ படத்தின் ட்ரைலரில் 14 வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு, வயது முதிர்ந்த தோற்றத் தில் வெளியே வருகிறீர்கள். இப்படி யொரு தோற்றம் முதல் முயற்சியா? - ‘நிமிர்ந்து நில்’ படத்தில் ஒரு சில காட்சிகளில் ஒரு முதிர்ச்சியான தோற்றத்தில் வந்தேன். ‘சைரன்’ படத்தின் கதாபாத்திரத் தோற்றம் அதிலி ருந்து முற்றிலும் வேறுபட்டது. கதையில் என் மனைவி, என் எதிரிகள் ஆகியோருக்கும் அந்த 14 வருடத் தோற்ற முதிர்ச்சி இருந்ததா, இல்லையா என்பதைப் படத்தில் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
படத்தில் கீர்த்தி சுரேஷுக்கும் எனக்குமான ‘கேட் அண்ட் மவுஸ்’ ‘கேம்’தான் திரைக்கதையை நகர்த்திச் செல்லும். இந்த விளையாட்டுக்கு என்ன காரணம் என்பது அழுத்தமான பிளாஷ் பேக் ஆக வெளிப்படும். அதேநேரம் அப்பா - மகள் ‘எமோஷன்’ படத்தின் மைய அம்சமாக இருக்கும்.
இப்போதுவரை அறிமுக இயக்கு நர்களுக்கு ஆதரவு தரும் நட்சத்திரமாக எப்படி உங்களால் தொடர முடிகிறது? - எனக்கு எனது அப்பாதான் முதல் வாய்ப்பைக் கொடுத்தார். ஒரு தயாரிப் பாளரின் மகன் என்பதை அவர் துளியும் பொருள்படுத்தவில்லை. அதைத் தாண்டி, என்னிடம் என்ன திறமை, ஆர்வம், தேடல் இருக்கிறது என்று பார்த்தார். நான் செய்து காட்டிய வீடியோக்களின் வழியாக எனது திறமையைத் தெரிந்துகொண்டு வாய்ப்புக் கொடுத்தார்.
அதற்காக என் கனவை நோக்கி உழைத்தேன். அந்த நன்றியின் அடிப் படையில்தான் நான் புதியவர்களுக்கு என் அலுவலகத்தின் கதவைத் திறந்து வைத்திருக் கிறேன். ஒரு வெற்றி யாவது கொடுத்திருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துவிட்டால், புதிய திறமைகள் எப்படி நமது சினிமாவுக்குக் கிடைப்பார்கள்.
என்னைப் போன்ற ஒருவருக்குச் சவாலான விஷயம், கதை கேட்க நேரம் ஒதுக்குவதில் இருக்கும் சிக்கல். 20 புதியவர்களிடம் கதை கேட்டால், அதில் ஒரு சிறந்த திறமையாளரை அடையாளம் கண்டுவிடலாம்.
எனக்கும் ஹிட் தேவை. அவர் களுக்கும் என்னைப் போன்ற ஒரு நட்சத்திர நடிகன் தேவை. இது ‘கிவ் அண்ட் டேக்’ என்கிற இருவழிப் பாதைதான். இந்த வழிமுறையில் புதிய திறமைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு அமைகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
‘தனியொருவன் 2’ எப்போது? - வேலைகள் நடந்துகொண்டிருக் கின்றன. ‘தனியொருவன்’ படக்குழுவை மீண்டும் ஒருங்கிணைப்பது அத்தனை எளிதல்ல; என்றாலும் அண்ணன் திரைக்கதையின் இறுதி வடிவத்தை எழுதி முடித்துவிட்டார். கதையில் அரவிந்தசாமி சாரை அனுப்பிவிட்டதால் இம்முறை வில்லன் நடிகரும் மாறி விடுவார்.
மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறீர்கள். தவிர கமலுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறீர்கள். கமலுடன் இணைந்து நடித்துவிட வேண்டும் என்பது அடுத்த தலைமுறை நடிகர்கள் அனைவரிடமும் இருக்கும் ஆசை. எனக்கும் அந்த ஆசை உண்டு. அது மணிரத்னம் சாரின் படத்தில் நிறைவேறுவது மகிழ்ச்சி. படத்தில் எனக்கு எப்படிப்பட்ட கதாபாத்திரம் என்பதெல்லாம் படமாகப் படமாகத்தான் எனக்கே தெரிய வரும்.
ஜெயம் ரவியின் படங்கள் என்றால் இனிமையான பாடல்கள் இருக்கும். தற்போது உங்கள் படங்களிலும் பாடல்களைத் தேட வேண்டியிருக் கிறதே? - ஒப்புக்கொள்கிறேன். கதையை முதன்மைப்படுத்தித் திரைக்கதையை நகர்த்தத் தொடங்கிவிட்டோம். அப்படியிருக்கும்போது பாடலை ஹிட் செய்வது கஷ்டம். ஆனால், சில கதைகளை இசையைப் பயன்படுத்தி நகர்த்த முடியும். அப்படியொரு படம் தான் நான் நடித்துவரும் ‘பிரதர்’. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அந்தப் படத்தில் துள்ளலான ஒரு நடனப் பாடல் இடம் பெற்றுள்ளது. சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்திருக் கிறார். அந்தப் பாடல் உறுதியாக ஹிட் ஆகும்.
‘பேராண்மை’ உங்களுக்கு வலி மையான அடையாளத்தைக் கொடுத்த படம். எஸ்.பி.ஜன நாதன் இருந்திருந்தால் மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்திருப்பீர்கள் இல்லையா? - நிச்சயமாக.. என்னுடைய குடும்ப விழாக்களுக்குத் தவறாமல் அவரை அழைத்துவிடுவேன். ஏனென்றால், சினிமா என்பதைத் தாண்டி, அண்ண னுக்கும் அப்பாவுக்கும் நடுவி லிருக்கும் ஓர் ஆத்மார்த்த உறவாக அவர் எனக்கு இருந்தார். இன்றைய தமிழ் சினிமாவில் அடித்தட்டு மக்களின் உரிமையைக் கதாநாயகர்கள் பேசுவதற்கு அவர் போட்டுக்கொடுத்த பாதை ஒரு முக் கியக் காரணம்.
உங்கள் அப்பாவிடம் ‘படத்தொகுப்பு’ கற்றுக்கொண்டீர்களா? - எனக்கும் சரி, அண்ணனுக்கும் சரி அவர் எடிட்டிங் கற்றுக்கொடுத்தது கிடையாது. ஆனால், மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா என்ன? நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் அப்பா எடிட் செய்வதை வேடிக்கைப் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கி றேன். படத்தொகுப்பு என்பது ஒரு சென்ஸ். அது இயக்குநரால் எந்த வழி முறையில் கதை சொல்லப்படுகிறதோ அதற்கு உயிரைக் கொண்டுவருவது.
கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய இருவரும் நீங்கள் படித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள். இருவரில் உங்களுக்கு யாரைப் பிடிக்கும்? - இரண்டு பேரையுமே பிடிக்கும். இருவருமே அவரவர் துறையில் ‘சக்ஸஸ்ஃபுல்’ ஆளுமைகளாக இருக்கிறார்கள். சுந்தர் பிச்சை பிரபலமாகும் முன்புவரை ‘ஜெயம் ரவி படித்த ஸ்கூல்’ என்றார்கள். இப்போது சுந்தர் பிச்சை படித்த ஸ்கூல் என்கிறார்கள். அதில் மட்டும் ஒரு சின்ன வருத்தமும் ஏக்கமும் உண்டு.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago