2023 தமிழ் சினிமா: குரூர வன்முறையின் ஆண்டு!

By ஆர்.சி.ஜெயந்தன்

தமிழ் சினிமாவுக்கும் மற்ற மூன்று தென்னிந்திய மொழி சினிமாக்களுக்கும் தாய் - சேய் பிணைப்பு உண்டு. மொழிவாரி மாநிலங்கள் உருவாவதற்கு முன்பு வரை, கோடம்பாக்கம்தான் தெலுங்கு, கன்னட, மலையாள மொழி சினிமாக்கள் கருவாகி, உருவாகும் தாய் மடியாக இருந்தது. இந்த நான்கு மொழிக் கறுப்பு - வெள்ளைத் திரைப்படங்களை இப்போது பார்த்தாலும் மொழியைத் தவிர, கதை, திரைக்கதை, காட்சியாக்கம், நடிப்பு தொடங்கி பெரும்பாலான அம்சங்கள் ஒன்றுபோல் இருப்பதைப் பார்க்க முடியும்.

அறுபதுகளுக்குப் பிறகு இந்த நிலை மாறத் தொடங்கி னாலும், ஒரு தென்னிந்திய மொழியில் வெற்றிபெறும் படம், மற்றொரு மொழியில் மறுஆக்கம் செய்யப்படும் வழக்கமானது, இந்தத் தொப்புள் கொடி உறவின் தொடர்ச்சியாக இன்றுவரை நீடிக்கிறது. ஆனால், புத்தாயிரத்துக்குப் பிறகு, இந்த உறவே வெகுஜனத் தமிழ் சினிமாவின் ‘சட்டக’த்தை வன்முறையின் தொழிற்சாலையாக மெல்ல மெல்ல மாற்றத் தொடங்கியது. அது, ‘பான் இந்தியா’ படங்களின் வருகையால் கட்டற்ற நிலையில் எல்லை மீறிப் போய் நிற்கிறது.

இவ்வகை ‘டப்பிங்’ சினிமாக்களின் படையெடுப்பால் 2023இன் தமிழ் சினிமா, கசாப்புக் கடையில் ரத்தம் சொட்டியபடி தலையின்றித் தொங்கும் விலங்குகளின் உடல்களுக்குப் பதிலாக, மனித உடல்களை நம் முன் காட்சிக்கு வைத்தது. கசாப்புக் கடையிலாவது இறைச்சிக்காக அவைக் கழுத்தை அறுத்துக் கொல்லப்படுவது மறைமுகமாகச் செய்யப்படும்.

‘பான் இந்தியா’ டப்பிங் சினிமாக்களிலும் அவற்றின் வணிகப் போட்டியை எதிர்கொள்வதற்காக உருவாகும் ‘பான் இந்தியா’ தமிழ்ப் படங்களும் கழுத்தை அறுப்பது, ஒரே வெட்டில் தலை காற்றில் பறப்பது, வெட்டப்பட்ட தலையற்ற உடலின் கழுத்திலிருந்து தண்ணீர்க் குழாய்போல் ரத்தம் பீய்ச்சியடிப்பது, கொல்லாமல் உயிருடன் இருக்கும் போதே உடல் உறுப்புகளை வெட்டிப் பிய்த்து எடுப்பது, சிதைப்பது, துடிக்கத் துடிக்கப் பிறப்பு உறுப்பில் அமிலம் ஊற்றுவது, கூர்மையான ஆயுதத்தைத் தொண்டைக் குழியில் வைத்து ஆணியடித்து உள்ளே இறக்குவதுபோல் கொல்வது, கசாப்புக் கடைக்குள்ளேயே நுழைந்து, துரத்திச் சென்ற ஆளைக் கொன்று, இறைச்சி தொங்கவிடப்படும் கொக்கியில் உடலை மாட்டித் தொங்க விடுவது என, வன்முறைக் காட்சிகளைக் கொடூரமாகச் சித்தரிப்பதற்கான ‘கற்பனை வளம்’ ரத்த ஆறாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

பட்டியல் பெரியது! - ‘பாகுபலி’, ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற ‘பான் இந்தியா’ படங்கள் வருவதற்கு முன்னர் தமிழ் சினிமாவில் வன்முறை இல்லையா என்கிற கேள்வியை எழுப்பலாம். நிச்சயமாக இருந்தே வருகிறது. ஆனால், அவை மட்டுப்படுத்தப்பட்ட சித்தரிப்பாக, கடுமையாகச் சண்டையிட்டு இறுதியில் கொல்லும் தருணத்தில் அதைக் காட்சியில் நேரடியாகச் சித்தரிப்பதைத் தவிர்த்துவிட்டுத் தாவிச் செல்லும் கேமரா, ரத்தம் தெறிப்பதை மட்டும் காட்டியது.

அல்லது வன்முறைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தின் ஓலக்குரல் மட்டும் கட்டிடத்துக்குள்ளியிலிருந்து ஒலிப்பதாகக் காட்சி அமைக்கப்பட்டது. அவ்வளவு ஏன்? தூக்குத் தண்டனை பெற்றுள்ள முதன்மைக் கதாபாத்திரம் தூக்கிலிடப்படும் காட்சியில், மரணத் தண்டனையை நிறைவேற்றும் அரச வன்முறையின் அவலத்தை நேரடியாகக் காட்டாமல், தூக்கிலிட்டபின், உடல் துடிப்பதால் ஏற்படும் அதிர்வில், தூக்குக் கயிறு எவ்வாறு வெட்டி வெட்டி அசைகிறது என்பதைக் காட்டுவதின் மூலம் மட்டுமே சித்தரித்தார் தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற இயக்குநர், எடிட்டர், பி.லெனின்.

அப்படியெல்லாம் இருந்த தமிழ் சினிமாவில், இன்று கமல், ரஜினி, விஜய், அஜித் தொடங்கி பெரும்பாலான மாஸ் ஹீரோ படங்களிலும் நேற்று முளைத்த புதுமுக ஹீரோக்களின் படங்களிலும் கூட ‘ராவான’ சித்தரிப்பு என்கிற போர்வையில், கன்னட, தெலுங்குப் பட கசாப்புக் கடை பாணி நேரடி வன்முறை சித்தரிப்புகளைத் தமிழுக்கு வெற்றிகரமாக இறக்குமதி செய்திருக்கிறார்கள் நம்முடைய ‘சக்சஸ்ஃபுல்’ இயக்குநர்கள்.

2023இன் இறுதியில் வெளியான ‘சலார்’வரை வெளியான வரம்பற்ற வன்முறைக் காட்சிகள் நிறைந்த படங்களைப் பட்டியல் போட்டால் இங்கே இடம் போதாது. ‘சலார்’ போன்ற குரூர வன்முறை ‘கிரிஞ்ச்’ வகைப் படங்களுக்கு ஈடு கொடுத்து வசூல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்கள் எவ்வளவு வேண்டுமானாலும் திரை வெளியில் ஹீரோயிசம் என்கிற பெய ரில் ரத்தம் குடிக்கத் தயாராகிவிட்டதை அவர்களது 2023 படங்கள் நமக்குச் சொல்லியிருக்கின்றன.

திணிக்கப்படும் ரசனை: கலாச்சார ரீதியாகப் பல ஒற்றுமை கள் இருந்தாலும் நான்கு மொழிப் பார்வையாளர்களின் வெகுஜன ரசனையில் உணர்வு ரீதியாகப் பல ‘ஏற்றல்’களும் ‘மறுப்பு’களும் உண்டு. இந்த ஒருமித்த உணர்வைத் தாண்டி, கன்னட, தெலுங்கு மாஸ் சினிமாக்களுக்கென்று நிலைபெற்று விட்ட சித்தரிப்புகள் பலவும் தமிழ், மலையாளப் பார்வையாளர்களுக்கு ‘கிரிஞ்ச்’ (Cringe) ஆகத் தெரிகின்றன.

ஆனால், ‘பான் இந்தியா’ சினிமாவில் இவ்வகை ‘கிரிஞ்ச்’களை நான்கு மொழி பார்வையாளர்களும் விரும்பியோ விரும்பாமலோ பார்க்க வேண்டிய கட்டாயம் உருவாகிறது. குரூர வன்முறை, பெரும்பாலான தமிழ்ப் பார்வையாளர்களுக்குக் குமட்டலான ‘கிரிஞ்ச்’ காட்சிகளாகவே அமைந்துவிடுகின்றன (கிரிஞ்ச்: ஒரு பகுதி மக்கள் அல்லது இனக்கூட்டம் பெருமிதமாகவோ, சரியென்றோ நினைக்கும் ஒரு விஷயம் அல்லது செயலை, வேறொரு பகுதி மக்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒவ்வாமை யுடன் இருப்பார்கள்.

இது அவரவரின் பண்பாட்டுக் கூறுகள் வழியாகப் பெற்றுக்கொண்ட முற்போக்கு எண்ணம் காரணமாகவோ, கல்வி, சமூக, அரசியல் சூழல் காரண மாகவோ மனிதருக்கு மனிதர், இனக்குழுக்களுக்கு நடுவில் இது வேறுபடும்).

அவ்வகையில், ஒரு மொழியைச் சேர்ந்த பார்வையாளர்களின் வெகுஜன ரசனையை மனதில் வைத்து உருவாக்கப்பட்டும் காட்சி களை, அத்தகைய ரசனையை ஏற்க மனமில்லாத பிறமொழிப் பார்வையாளர்களிடம் வலிந்து திணிப்பவையாக பான் இந்தியா ‘டப்பிங்’ சினிமாக்கள் இருக்கின்றன.

அதேசமயம், தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளிலுமே, ‘சித்தா’, ‘நாடு’, ‘சப்த சாகரதாச்சே எல்லோ’ (கன்னடம்), ‘பலகம்’ (தெலுங்கு) போன்று, மக்களின் வாழ்க்கையிலிருந்து கதைக் களங்களை எடுத்துக்கொள்ளும் படங்கள், இந்த வரம்பற்ற வன்முறைச் சட்டகத்துக்கு வெளியே நிற்கும் படங்கள் எண்ணிக்கையில் குறைவாக வெளியாகின்றன.

இருப்பினும் இவை போன்ற படங்கள் மட்டும்தான் தென்னிந்திய சினிமா மீதான கடைசி நம்பிக்கையின் மிச்சமாக இருக்கிறது. 2024இல் வெளியாகும் படங்களிலாவது வன்முறையின் தாண்டவம், புகை, மது, போதைப்பொருள்களை வெகு சகஜமாகக் கதாபாத்திரங்கள் பயன்படுத்துவது போன்ற காட்சிகளையும் , பாலியல் இச்சையை வலிந்து தூண்டும் காட்சிகளையும் இயக்குநர்கள் விலக்கி வைக்க முயற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்.

- jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்