மாஸ் ஹீரோக்கள் எனக்கு வேண்டாம்!- பிரபு சாலமன்

By கா.இசக்கி முத்து

‘மைனா’, ‘கும்கி’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரபு சாலமன், அடுத்து ‘கயல்’ படத்தை முடித்துவிட்டார். அதற்கான டப்பிங் பணிகளில் இருந்தவரிடம், ஒரு மழை நேர மாலைப் பொழுதில் கையில் தேநீர்க் கோப்பையுடன் உரையாடியபோது...

சுனாமி வந்து 10 வருஷமாச்சு. அதை ஞாபகப்படுத்துற படமா இது?

கயல் என்பது கதாநாயகியின் பேரு. அவள்தான் படத்தின் மையம். “In memory of, those who lost their lives and their loved ones” இதுதான் ‘கயல்’ படத்தோட ஓபனிங். “Many lost their loved ones, A man lost his love” இதுதான் கதையோட மையக் கரு. சுனாமியில் உறவுகளையும், காதலையும் தொலைத்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். அன்றைக்கு பீச்சுக்கு வந்தவர்களில் எத்தனை காதல் காணாமல் போயிருக்கும். அதே மாதிரியான ஒரு காதல்தான் ‘கயல்’. தொலைந்து போனவள் கிடைத்தாளா, இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்குமே தெரியாது. இதான் வாழ்க்கை. அது எல்லோரது மனசுக்குள்ளும் இருக்கணும். 2004 டிசம்பர் 25-ம் தேதி எல்லாரும் கிறிஸ்துமஸ் கொண்டாடினார்கள். 26-ம் தேதி இப்படி ஒரு துயரச் சம்பவம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு பயணம் இருக்கும். நாயகன் கயலை எங்கு சந்தித்தான், எப்படிக் காதல் வயப்பட்டார்கள், சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் கதை.

‘கொக்கி’யில் ஜாதகம், ‘கும்கி’யில் யானை ஏன் காட்டை விட்டு வெளியே வருகிறது என்பதைச் சொன்னீர்கள். ‘கயல்’ படத்தில்…

படத்தோட முதல் ரீலிலேயே “இன்றைய சூழலில் எல்லாருமே பயங்கர எதிர்பார்ப்போட வாழ்க்கையை வைச்சுக்காதீங்க” என்று சொல்லியிருக்கேன். இன்றைய இளைஞர்களுக்கு இதுதான் பிரச்சினையே. இந்தியாவில் 17 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்தான் அதிகமா தற்கொலை பண்ணிக்கறாங்க. தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கு. காரணம், மன அழுத்தம்னு சொல்றாங்க. 1990களில்தான் ‘ஸ்ட்ரெஸ்’ங்கிற வார்த்தையையே கேள்விப்பட்டேன். அப்போ மீடியா, இண்டர்நெட் தாக்கம் பெரியளவில் கிடையாது.

இப்படி இருக்கிற வாழ்க்கையில் இருந்து மாறுபட்டு இரண்டு பாத்திரங்கள் ‘கயல்’ படத்தில் இருக்கு. அவங்க கையில் செல்போனே கிடையாது. இன்றைக்குக் கிடைச்ச நாளை சந்தோஷமாக அனுபவின்னு சொல்றேன். ‘கயல்’ படத்தைப் பார்க்கிறவங்க கண்டிப்பா ஒரு மாசம் லீவு போட்டுட்டு வெளியே கிளம்புவாங்க. நமக்கு வாழ்க்கையில் முக்கியம் அமைதிதான், நாம இருக்கிறது மட்டும் வாழ்க்கை கிடையாதுன்னு நினைப்பாங்க.

முன்னணி இயக்குநரான நீங்கள் ஏன் படத்திற்குப் படம் புதுமுக நடிகர்களைத் தேடுகிறீர்கள்?

படத்தின் கதை என்ன கேட்குதோ, அதன்படிதான் போவேன். இந்தக் கதைக்காக பொன்னேரி கிட்ட தொட்டி ஒண்ணு கட்டினேன். மூன்றரை மாசம் தண்ணீருக்குள் வேலை செய்தோம். காலை 7 மணிக்குத் தண்ணீருக்குள் இறங்கினால், மதியம் பிரேக்கிற்கு வெளியே வருவோம். அதற்கு பிறகு இறங்கினால் மாலை 6 மணிக்கு தான் வெளியே வருவோம்.

இந்தச் சூழலில் நான் எந்த நடிகரை வைத்து வேலை செய்ய முடியும்? நான் அவங்களைக் கூப்பிட்டு வருத்தவும் முடியாது. ஒரு புதுமுக நடிகர்தான் எதையும் செய்வார். அடுத்த படத்தில் அவரே தண்ணீர் பக்கத்தில் வர மாட்டார். இந்த மாதிரி பிரச்சினைகள் இருப்பதால்தான் பெரிய நடிகர்கள் வேண்டாம் என்று நினைக்கிறேன்.

இவர் படம்தான் பார்ப்பேன், அவர் படம்தான் பார்ப்பேன் என்ற காலம் எல்லாம் போய்விட்டது. சில இயக்குநர்களுக்குப் பெரிய நடிகர்களை வைத்துப் பண்ண முடியாமல் போய்விட்டதே என்ற எண்ணம் இருக்கு. எனக்கு அப்படி இல்லை. கதையை ஹீரோவாக நம்பி நான் ஓடிக்கொண்டு இருக்கிறேன்.

பெரிய நாயகரை வைத்துப் படம் இயக்கவே மாட்டாரா பிரபு சாலமன்?

கதை அமையணும். அவருக்காக நான் ஒரு சட்டையை தைக்க மாட்டேன். ஒரு கதை எழுதிவிட்டு, இதை இவர் பண்ணினா நல்லாயிருக்கும் என்று நினைத்தால் நானே தேடிப் போவேன். அவங்க என்னிடம் வந்தால், அதற்கான கதை அமைந்தால் நான் தயார்.

உங்கள் படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் இருக்கும் மெனக்கெடல் தேவையா? அதற்கு என்ன காரணம்?

ரசிகர்களோட அப்டேட்தான் காரணம். ஒரு பாட்டுக்கு 40 டான்ஸர்கள் ஆடுகிறார்கள் என்பது போரடிக்கிற விஷயமாகிவிட்டது. 40 டான்ஸர்கள், ஃபைட் என்பதைத் தாண்டி சினிமா எங்கோ போய்க்கொண்டிருக்கிறது.

‘டைட்டானிக்’, ‘அவதார்’ படங்கள் மதுரையில் 100 நாட்கள் ஓடின. நான் அதைப் போட்டியாக நினைக்கிறேன். இதற்கு நடுவில் நான் ஜாலியாகப் படம் பண்ணலாம் என்று நினைத்தால், என்னை நானே ஏமாத்திக்கிற மாதிரி. இந்த அணுகுமுறைதான் என்னோட முதலீடு. என்னோட படம்னா நம்பி வர்றாங்க. ‘மைனா’, ‘கும்கி’ அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கையோட ‘கயல்’ படத்திற்கு வந்தார்கள் என்றால் கண்டிப்பாகத் திருப்திப்படுத்தும்.

நான் ஒரு விஷயம் யோசிக்கிறப்பவே, கஷ்டமா யோசிச்சுருவேன். கிராபிக்ஸில் செயற்கை அலைகள் என்பது மிகவும் கஷ்டம். ஹாலிவுட்டில்கூட மிகப் பெரிய வேலை. அதை ‘கயல்’ படத்தில் பண்ணியிருக்கேன். இதை யூடியூபில் சின்ன ஸ்கிரீனில் பார்த்திருப்பார்கள். இப்போது பெரிய திரையில் பார்க்கலாம். இந்தப் படத்தில் 20 நிமிடக் காட்சிகள் இருக்கு. பாருங்க, புதுசா இருக்கும். அதற்கான பணிகள் ஒரு வருஷமா போயிட்டு இருக்கு. ஒன்றரை வருஷம் வெயிட் பண்ணினால், அடுத்து 4,5 வருஷத்துக்குப் பேசப்படும் படமாக ‘கயல்’ இருக்கும்.

உங்களது அடுத்த படம் சிங்கத்தைப் பின்னணியாகக் கொண்டு பண்ணப் போவதாகக் கேள்விப்பட்டோமே..?

ரொம்ப நாள் ஐடியா அது. அதற்கான மாடல் வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. ‘கயல்' படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் பண்ணிய நிறுவனம்தான் அதையும் பண்ணிக்கொண்டிருக்கிறது. அது சரியாக அமைந்தால் ‘லைஃப் ஆஃப் பை’ (LIFE OF PI) மாதிரி தமிழில் ஒரு படம் பண்ண ஆசை. 3டியில் குழந்தைகளுக்கான படமாக அது இருக்கும். குழந்தைகளை வீட்டில் இருந்து பெரியவர்கள்தானே அழைத்து வர வேண்டும். ஆகையால், அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கிற வகையில் இருக்கும். அதற்கு நிறைய விஷயங்கள் ஒத்துவர வேண்டும். பார்க்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்