ஃப்ளாஷ்பேக்- இயக்குநர் பாண்டிராஜ்

By இயக்குநர் பாண்டிராஜ்

எனக்கு எப்போதுமே கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது வெகுவாய் பிடிக்கும். சரி, அதைப் பற்றியே எழுதலாம் என்று முடிவெடுத்துதான் இந்த தொடரை தொடங்கினேன். முதல் வாரம் தொட்டு இதோ இந்த இறுதி வாரம் வரை ஒரு சினிமா இயக்கும் சிரத்தையோடுதான் ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், இந்த தொடரில் எனது அடுத்த சில படங்களுக்கான கதைக்கருவே இருக்கிறது.

“விநாயகனே வினை தீர்ப்பவனே” என எங்கள் ஊரின் டூரிங் டாக்கீஸ் பற்றிய நினைவுகளில் இருந்துதான் இந்த தொடரை தொடங்கினேன். எங்கள் குலதெய்வம் மற்றும் ஊர்க்காவல் தெய்வம் பற்றி எழுதி பதிவுகளை கடந்த வாரம் நிறைவு செய்தேன். யதேச்சையாக அமைந்ததுதான் என்றாலும், என் பார்வையில் தெய்வத்தில் தொடங்கி தெய்வத்தில் முடித்திருக்கிறேன்.

‘பிளாஷ்பேக்’ தொடர் தொடங்கி நான்கு வாரமிருக்கும். திருப்பதியில் சாமி தரிசனத்துக்காக இயக்குநர்கள் திரு மற்றும் சுசீந்திரனுடன் வரிசையில் நின்றிருந்தேன். அப்போது, என்னை அடையாளம் கண்டுகொண்ட ஒரு குடும்பம், ‘பசங்க’ படத்தின் தாக்கத்தில் தங்கள் மகனுக்கு அன்புக்கரசு என்று பெயர் வைத்ததாகச் சொன்னபோது அவ்வளவு நெகிழ்ச்சியாய் இருந்தது. அடுத்த நொடியே இன்னொருவர், ‘‘சார், ‘தி இந்து’ல வாரம் தவறாம உங்க பிளாஷ்பேக் தொடர் படிக்கிறேன். என் வாழ்க்கைய திரும்பிப் பார்க்கிற மாதிரியே இருக்கு’’ என்று கைகுலுக்கிவிட்டுப் போனார். ஒவ்வொரு வாரப் பதிவும் ஒரு திரைப்படத்துக்கு இணையான தாக்கத்தையும் வீச்சையும் கொண்டிருக்கிறது என அன்றுதான் உணர்ந்தேன்.

கால இயந்திரம் என்று ஒன்று இருக்குமா என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த தொடர் எழுதிய பிறகு உறுதியாய் நம்புகிறேன். கால இயந்திரம் என்பது எழுத்துதான்.

தஞ்சாவூரில் ஒரு எலக்ட்ரிகல்ஸ் கடையில் வேலை பார்த்தபோது நண்பரானவர்தான் ரமேஷ். ரோட்டில் வேஷ்டி துண்டு வியாபாரம் செய்பவர். நான்கு படங்கள் எடுத்திருந்தபோதும், எனக்கு போன் செய்து பேசாதவர் இந்த தொடரைப் படித்துவிட்டு முதன்முறையாய் போன் செய்து பேசினார். அது வாராவாரம் தவறாமல் தொடர்கிறது.

திருக்குளம் பற்றி எழுதியபோது அந்த குளத்தில் நீச்சலடித்த நினைவலைகளில் மிதந்துபார்க்க முடிந்தது. என் அம்மா பற்றி எழுதியபோது மீண்டும் கருவறை புகுந்து வாழ்ந்துபார்த்த சிலிர்ப்பு ஏற்பட்டது. என் அப்பா பற்றிய ஞாபகங்கள் அவரது கைபிடித்தபடி நடந்துபோகும் வாய்ப்பைக் கொடுத்தது. எனது மாமாக்கள் பற்றிய வார்த்தைகள் அவர்கள் என்னை குழந்தையாக்கி அம்பாரி ஆட்டிய சந்தோஷத்தைக் கொடுத்தது. குறிப்பாக கருப்பையா மாமா, ‘ப்ளாஷ்பேக்’ வெளியான ‘தி இந்து’ இதழை கையில் எடுத்துக்கொண்டு, ஊருக்குள் ஒரு வீடு விடாமல் போய், ‘‘பாருங்க என் மாப்பிள்ளை என்னைப் பத்தி எழுதிருக்காரு’’ என்று பெருமை பொங்க பேசியதாய் சொன்னார்கள். அதோடு உரிமையாய் என்னிடம், ‘‘மாப்ளே, புதுசா ஒரு பைக் வாங்கிக் கொடுங்க’’ என கேட்டார். இப்படி உறவுகளையும் உணர்வு களையும் இணைத்தது இந்த ‘பிளாஷ்பேக்’ தொடர்.

அந்த மாமாக்கள் பற்றிய பதிவைப் படித்துவிட்டு அதிகாலையில் அழைத்த அஜயன்பாலா, ‘‘என்ன பாண்டி, ஒரு படத்துக்கான கதையை பதிவா எழுதிட்டியே’’ என அரை மணி நேரம் பேசினார். மாணிக்கம் வாத்தியார் பற்றிய பதிவைப் படித்துவிட்டு மதுரையில் இருந்து அழைத்த டாக்டர்.கோகிலா தங்கசாமி, ‘ஆசிரியர்களைப் பற்றி இவ்வளவு சிலாகித்து எழுதப்பட்ட ஒரு பதிவை சமீபத்தில் படித்ததில்லை’ என்றபோது சந்தோஷமாய் இருந்தது.

ஒரு சில வாரங்களில் தொடரை எழுதிவிட்டு என்ன தலைப்பு வைப்பதென்று தலைமுடியை பிய்த்துக் கொண்டிருக்கிறேன். என் படங்களின் தலைப்புகள் எப்படி ஜனரஞ்சகமாக இருக்கவேண்டும் என பார்த்துப் பார்த்து வைப்பேனோ, அப்படி யோசித்துதான் ஆனா..முனா..கானா..ருனா, பேனா காதலன், கொரங்குபெடல் போன்ற தலைப்புகள் உருவாகின. கொரங்கு பெடல் பதிவைப் படித்துவிட்டு ‘நக்கீரன்’ கோபால் அண்ணன், ‘‘தொடர் படிச்சேன் தம்பி.. ஊருக்கு கார்ல போயிட்டிருக்கேன்.. ஆனா கொரங்கு பெடல் போட்டுகிட்டு போற மாதிரி இருக்கு’’ என்று சொல்லி பலமாய் சிரித்தார்.

மேலும் ஒவ்வொரு வாரமும் தொடரைப் படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்த திரையுலக நண்பர்கள் மதன், ஜெகன், நந்தா பெரியசாமி, சண்முகராஜ், மகிழ் திருமேனி, கவிஞர் நா.முத்துக்குமார், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் மனைவி திருமதி.மாலா, எனது குருநாதர் தங்கர்பச்சான் சார் என அனைவருக்கும் நன்றி களை உரித்தாக்குகிறேன்.

அதிலும் வாரம் தவறாமல் நந்தா பெரிய சாமியிடம் இருந்து அழைப்பு வரும். ஒருமுறை கோவா சென்றிருந்த போது கூட அங்கிருந்து அவர் மனைவியிடம் போனிலேயே அந்த வாரம் வந்த தொடரைப் படித்துக் காட்டச் சொல்லி தெரிந்து கொண்ட தாய்ச் சொன்னார். அப்போது ஏற்பட்ட மனநிறைவுக்கு ஈடில்லை. அதேபோல லொக்கேஷன் பார்க்க கும்பகோணம் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.. எனது குருநாதர் தங்கர்பச்சான் சார் அழைக்கிறார். ‘‘பாண்டி, தொடர் படிச்சேன்டா.. மனச தொட்டுட்ட.. அம்மா ஞாபகம் வந்திடுச்சுடா..’’ என வெள்ளந்தியாய் அள்ளி அணைத்து வாழ்த்து சொன்னார்.

என் உணர்வுப் பதிவுகளுக்கு பொருத்தமான படங்களை தீட்டிய ஓவியர் இளஞ்செழியனுக்கு என் வாழ்த்துக்களை பகிர விரும்புகிறேன். குறிப்பாக அவர் வரைந்த என் அம்மாவின் ஓவியம், இப்போது என் வீட்டின் சுவரை அலங்கரிக்கிறது. அவ்வளவு தத்ரூபமாக என் அம்மாவுக்கு உயிரூட்டியிருந்தார். நன்றி இளஞ்செழியன் சார்.

ஒவ்வொரு வாரமும் இந்த தொடரில் எனது எண்ணங்களை, வார்த்தைகளை எழுத்து வடிவில் வார்த்த எனது உதவி இயக்குநர் ராஜவேல் நாகராஜனுக்கும், இந்த தொடரின் முதல் வாசகனாய் கருத்துக்களை பகிர்ந்து, விமர்சனம் செய்த அனைத்து உதவி இயக்குநர்களுக்கும், எனது மனைவி வசந்திக்கும் நன்றி.

இவர்களை எல்லாம் தாண்டி, வாரம் தவறாமல் தொடரைப் படித்தும், நான் இப்படி ஒரு தொடர் எழுதுவதே தெரியாது என்பதுபோல், என்னிடம் காட்டிக்கொள்ள முயன்று மாட்டிக்கொண்ட அந்த நல்உள்ளங்களுக்கும் எனது நன்றிகளை முக்கியமாய் நவில்கிறேன்.

இருபத்தைந்து வாரத்தைத் தொட்டாலும் இன்னும் சொல்லாமல் விட்டதெல்லாம், திறக்காத புத்தகமாய் நினைவுகளின் ஞாபக அடுக்குகளில் பத்திரமாய் இருக்கிறது. அதிலும் சினிமாவுக்கு வந்தது பற்றி எப்போது எழுதப்போகிறீர்கள் என்று கேட்டு பலரும் மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார்கள். இன்னும் சினிமாவில் பயணிக்கவேண்டிய தூரமும், படைக்கவேண்டிய படைப்புகளும் நிறைய இருப்பதால், ஓரளவாவது அவற்றை எட்டியபின் ஒரு நல் தருணத்தில், அந்த நினைவுகளை கண்டிப்பாய் மீட்டெடுத்து பகிர்கிறேன். அதேபோல ஐந்தே வாரம் தொடர் வெளிவந்திருந்தபோதே இந்த கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாய் வெளியிட பல முன்னணி பதிப்பகங்கள் தொடர்பு கொண்டன. அந்த முயற்சிகளும் போய்க்கொண்டிருப்பதால், விரைவில் இந்த பதிவுகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு புத்தக வடிவில் உங்களை வந்து சேர இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

‘எழுத்து என்பது தியானம் போல. அது நம்மையே நமக்கு புதியதாய் காட்டும்’ என்பதே இந்த ‘பிளாஷ்பேக்’ தொடர் மூலம் நான் உணர்ந்தது. அப்படி என்னை நானே புதியதாய் உணர, கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்க்க உதவி, கடந்த 6 மாதங்களாய் என்னுடன் பயணித்த ‘தி இந்து’ வாசகர் ஒவ்வொருவருக்கும் இறுதியாய் இரு கரம் ஒன்றி, சொல்லுகின்றேன் நன்றி!

இயக்குநர் பாண்டிராஜ்- தொடர்புக்கு: pandirajfb@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்