முதல் முறையாக உலகப் படப் போட்டி!

By ஆர்.சி.ஜெயந்தன்

சென்னை சர்வதேசப் படவிழாவில், உலகப் படங் களுக்கான போட்டிப் பிரிவு தொடங்கப்பட வேண்டும்; அவ்வாறு தொடங்கப்படும்போதுதான், 20 ஆண்டுகளைக் கடந்துள்ள இப்படவிழா, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் கவனம் பெற முடியும் என்பதைக் கடந்த 10 ஆண்டுகளாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்டு எழுதி வந்தது. தமிழ்நாடு அரசின் உதவியுடன் சென்னை சர்வதேசப் படவிழாவை நடத்தி வரும் இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம், அதை முதல் முறையாக முன்னெடுத்துள்ளது! வரும் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி வரை 8 நாள் நடைபெறவுள்ள 21ஆவது சென்னை சர்வதேசப் படவிழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவு, தரமான தமிழ்ப் படங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. இப்பிரிவில் போட்டியிடும் 12 படங்களிலிருந்து சிறந்த 3 படங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவுக்கு இயக்குநர் மோகன் ராஜா தலைமை வகிக்கிறார். மூன்று பேர் அங்கம் வகிக்கும் அக்குழுவில், தமிழில் முதல் முறையாக ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ என்கிற உத்தியைப் பயன்படுத்தி உருவான ‘பிகினிங்’ படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த ஜெகன் விஜயா, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் கிருபாகரன் புருஷோத்தமன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

3 நடுவர்கள் 12 படங்கள்: அதேபோல், சென்னை சர்வதேசப் படவிழா என கம்பீரமாக அழைக்கப்பட்டாலும் அதற்கு உண்மையாகவே இந்த ஆண்டுமுதல் கம்பீரத்தைக் கொடுக்க இருக்கும் உலகப் படப் போட்டிப் பிரிவுக்கான நடுவர் குழுவுக்கு இயக்குநரும் எழுத்தாளருமான யூகிசேது தலைமை தாங்குகிறார். மூன்று பேர் இடம்பெற்றுள்ள நடுவர் குழுவில், இயக்குநர் வசந்த் சாயின் ‘ரிதம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன்பின்னர், தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த ‘ஆரண்ய காண்டம்’, ‘விக்ரம் வேதா’, ‘சீதா ராமம்’ என பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய இந்திய சினிமாவின் ‘ஐகானிக்’ ஒளிப்பதிவாளராக விளங்கி வரும் பி.எஸ்.வினோத், தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் வி.பக்கிரிசாமி ஆகியோர் மற்ற இருவர்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் உலகப்படப் போட்டிப் பிரிவுக்கு விண்ணப்பித்திருந்த படங்களிலிருந்து 12 படங்கள் தேர்வுக் குழுவால் இறுதி செய்யப்பட்டுள்ளன. ஜெர்மானிய நடிகரும் தயாரிப்பாளருமான ஆலீஸ் குருயா முதல் முறையாக இயக்கியிருக்கும் ‘ஆக்ட் நேச்சுரல்’ (Act Natural) என்கிற ஜெர்மானியத் திரைப்படம், தெலுங்கு சினிமாவில் துணைக் கதாபாத்திரங்களில் தோன்றி நடித்த வேணு யெல்டாண்டி முதல் முறையாக இயக்கியிருந்த ‘பலகம்’ (Balagam) என்கிற தெலுங்குப் படம், தருண் சர்டானா இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘க்குவாபீடா’ (Khwabeeda) இந்திப் படம், லண்டனில் பிறந்து வளர்ந்த நதாலியா ஷியாம் முதல் முறையாக இயக்கி, பல விருதுகளை வென்றுள்ள ‘ஃபுட் பிரிண்ட்ஸ் ஆன் வாட்டர்’ (Footprints on Water) என்கிற ஆங்கிலத் திரைப்படம், ரோமானிய சினிமாவின் தற்கால இயக்குநர் டொடூர் ஜார்ஜு இயக்கத்தில் வெளிவந்து பல விருதுகளை வென்றுள்ள ‘ஃப்ரீடம்’ (Freedom) என்கிற ரோமானியத் திரைப்படம், சர்வதேச அளவில் விருதுகளை வென்ற இரண்டு உலகப் படங்களை இயக்கியிருக்கும் தற்கால ஐஸ்லாந்து நாட்டின் இயக்குநரான அவுஸா ஹியர்லிஃப்தோரின் மூன்றாவது படமான ‘எ லெட்டர் ஃபிரம் ஹெல்கா’ (Letter to Helga) என்கிற ஐஸ்லாந்து மொழிப்படம், மலையாள வெகுஜன சினிமா, மாற்று சினிமா ஆகிய இரண்டு தளங்களிலும் இயங்கி வந்துள்ள பாபு திருவல்லா எழுதி, இயக்கியிருக்கும் ‘மனஸ்’ (Manas: The Mind) என்கிற மலையாளப் படம், இஸ்ரேலிய சினிமாவின் மூத்த இயக்குநர் ஈடன் கிரீன் இயக்கியிருக்கும் ‘மை டாட்டர் மை லவ்’ (My Daughter My Love) என்கிற பிரெஞ்சு - எபிரேய மொழிப் படம், கூஸ் விட்டனோவ்ஸ்கி எழுதி, இயக்கியிருக்கும் ‘த பிஸ்னஸ் ஆஃப் பிளெஷர்’ (The Business of Pleasure) என்கிற மாசிடோனிய மொழிப் படம், அமெரிக்க மாற்று சினிமா இயக்குநர்களில் ஒருவரான உஸ் ஷ்வாஸ்வால்டர் இயக்கியிருக்கும் ‘தி சேஃப்’ (The Safe) என்கிற ஆங்கிலத் திரைப்படம், தற்கால திபெத்திய சினிமா இயக்குநர் டோட்கெர் கால்சா முதல் முறையாக இயக்கியிருக்கும் ‘திபெத்தியன் ஹார்ட்ஸ்’ (Tibetan Hearts) என்கிற படம், செர்ஜியோ - ரிக்கார்டோ என்கிற இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்கியிருக்கும் ‘வைல்டிங் கண்ட்ரி’ (Wilding Country) என்கிற பிரேஸில் நாட்டுத் திரைப்படம் ஆகின அந்த 12 படங்கள்.

ICAF திரைப்படச் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தமிழ்ப்பட பொட்டிப் பிரிவு - உலகப்பட
போட்டிப் பிரிவு நடுவர்களுடன்

புதிதாக நுழைந்த நாடுகள்: இந்த 12 படங்களும் படவிழாவில் ஒருமுறை மட்டுமே திரையிடப்படுகின்றன. எனவே உலக சினிமா ஆர்வலர்கள் இவற்றைத் தவறவிடாமல் பார்த்துவிடுங்கள். மேலும் இம்முறை வியட்நாம், ஜோர்டான், சவுதி அரேபியா, கத்தார், தஜி கிஸ்தான், பனாமா, மங்கோலியா, கசகஸ்தான், உருகுவே, மாசிடோனியா, ஐக்கிய அரபு அமீரகம், ரீயூனியன் ஆகிய நாடுகளிலிருந்து திரைப்படங்கள் திரையிடப்பட விருக்கின்றன. சென்னை அண்ணா சாலையில் உள்ள பி.வி.ஆர் திரைப்பட வளாகத்தில் (சத்யம் சினிமாஸ்) உள்ள 4 திரையரங்குகள், வாலாஜா சாலை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா திரையரங்கம் உள்ளிட்ட 5 திரையரங்குகளில் 21ஆவது சென்னை சர்வதேசத் திரைப்படவிழா திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அடுத்த வெள்ளியன்று வெளியாகும் இந்து டாக்கீஸ் பக்கத்தில் தவறவிடக் கூடாத படங்களின் பட்டியலையும் அவற்றுக்கான அறிமுகத்தையும் வாசிக்கத் தவறாதீர்கள்.

- jesudoss.c@hindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

சிறப்புப் பக்கம்

8 days ago

மேலும்