பாசமும் ஹாஸ்யமும்தாம் திருநெல்வேலி மண்ணின் உண்மையான அடையாளங்கள். ஆனால், தமிழ் சினிமா அருவாளைக் காட்டி மிரட்டியது. ‘அனேகன்’ திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நாயகனால் தாக்கப்பட்டார் என்று கூறி ஒரு திரையரங்கையும் சில பேருந்துகளின் கண்ணாடிகளையும் உடைத்தது அந்த மண்ணின் பாசத்துக்குச் சான்று என்றால், ‘கஜேந்திரா’ திரைப்படத்தில் கேப்டன் கண்கள் சிவக்க ‘பன்ச்’ வசனம் பேசியபோது, வெடித்துச் சிரித்தது அந்த மக்களின் நகைச்சுவை உணர்வுக்குச் சான்று. அந்த மக்களின் பாசத்தை ஓரளவுக்குப் பதிவுசெய்த நம் திரைப்படங்கள் அவர்களின் நகைச்சுவை உணர்வைச் சரியான முறையில் பதிவுசெய்யவில்லை. நெல்லையிலிருந்து தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அருண்பாண்டியன் கிச்சுகிச்சு மூட்டினால்கூடச் சிரிக்க முடியாத முகபாவத்துடன் கடைசிவரை நடித்தபோது திரையுலகை அதற்காகக் குறை சொல்ல முடியுமா? ஆனால், இந்த வருடத்தின் கோல்டன் குளோப் விருது நாம் கவனிக்கத் தவறிய அந்த மக்களின் நகைச்சுவை உணர்வை உலகம் முழுவதும் கவனிக்கவைத்துள்ளது.
இந்த ஆண்டு அமெரிக்காவின் சிறந்த தொலைக்காட்சி நடிகருக்கான கோல்டன் குளோப் விருது பெற்ற ஆஷிஷ் அன்சாரி நெல்லை மாவட்டத்திலிருக்கும் வாசுதேவநல்லூரைப் பூர்விகமாகக் கொண்டவர். ‘மாஸ்டர் ஆஃப் நன்’ என்ற நகைச்சுவை இணையத் தொடரில் அவர் நடித்த ‘தேவ் ஷா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் உலகையே சிரிக்க வைத்ததற்காக இந்த விருதை அவர் பெற்றிருக்கிறார். அந்தத் தொடரில் அவர் வெறும் நடிகர் மட்டுமல்ல; அதைத் தன் நண்பர் ஆலன் யங் உடன் சேர்ந்து உருவாக்கியதும் அவர்தான்.
சொந்த வாழ்க்கையின் நகைச்சுவைப் பிரதி
ஆஷிஷ் அன்சாரியின் தந்தை பெயர் சௌகத் அன்சாரி. அவர் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று, 1970-களில் அமெரிக்காவில் மருத்துவராகக் குடியேறினார். ஆஷிஷ் அன்சாரி 1983 பிப்ரவரி 23 அன்று கொலம்பியாவில் பிறந்தார். இயல்பிலேயே மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். நம்மூர் சிவகார்த்திகேயனைப் போன்று தொடக்கத்தில் ஒரு ஸ்டாண்ட்-அப் காமெடியனாகத் தொலைக்காட்சிகளில் வலம்வந்து மக்களின் கவனத்தைக் கவர பல வழிகளில் முயன்றார். பின்னர், சில திரைப்படங்களில் சின்னச் சின்ன வேடங்களில் குட்டிக்கரணம் போட்டுப் பார்த்தார், ஆனால், அவரால் முதலில் பெரிதாகக் கவனத்தைப் பெற இயலவில்லை.
இருப்பினும், சளைக்காமல் நகைச்சுவைக்கென்று பெரிதும் மெனக்கெடாமல் தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களிலிருந்தே அதனை எடுத்து வழங்கிய அவரது தனித்துவமான பாணி மக்களைப் புன்னகையுடன் சற்றுத் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்தச் சிறிய வெற்றிதான் இவரது இன்றைய விருதுக்கான ஆரம்பம். தன் வாழ்வை, அதில் தான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஏன் ஒரு தொடராக எடுக்கக் கூடாது என்று நினைத்தார். அந்தக் கேள்விக்கான விடைதான் இந்த ‘மாஸ்டர் ஆஃப் நன்’ தொடர்.
நல்ல வாய்ப்புகளுக்காக அஷிஷ் முயன்ற காலகட்டத்தில் அவர் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஒரு நடிகர். ஒரு மனிதனாக, ஒரு நடிகனாக அவரது இலக்கு எது என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்பில் தட்டுத் தடுமாறி, திக்கற்றுப் பயணித்துக்கொண்டிருந்தார். அவரது நிஜ வாழ்வின் தேடல்களை இந்தத் தொடரின் கதைக்கருவாக மாற்றினார். அதில் அவர் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளைக் கோவையாகத் தொகுத்து இந்தத் தொடரை ஆலன் யங்குடன் இணைந்துக் கச்சிதமாக உருவாக்கினார். அந்தப் பிரச்சினைகளை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதை அவர் நேர்மையுடன் காட்சிப்படுத்திய விதம் அமெரிக்காவையே நகைச்சுவையில் மூழ்கவைத்தது.
வெற்றியின் பின்னணி
இன்றும் ஆஷிஷ் வீட்டில் தமிழ்தான் பேச்சு மொழி என்பதால் அவரது தொடரில் பல இடங்களில் தமிழ் வசனங்கள் வெகு இயல்பாக எட்டிப் பார்க்கின்றன. அவருடைய தந்தை எம்ஜிஆர் ரசிகர் என்பதால் சில காட்சிகளில் எம்ஜிஆர் படப் பாடல்களும் பின்னணியில் ஒலிக்கின்றன. இத்தகைய விஷயங்கள் அந்தத் தொடருக்கு ஒரு நம்பகத் தன்மையை ஏற்படுத்துவதால் அது மக்களுடன் எளிதில் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டது. இந்தத் தொடரை வெறும் நகைச்சுவைத் தொடரென்று சுருக்கிவிட முடியாது. அந்நிய நாட்டில் அவர்களின் அடையாளத்தைத் தன் அடையாளமாக மாற்ற முயலும் ஒரு தலைமுறையின் சிக்கல் மிகுந்த போராட்டத்தை நகைச்சுவையினூடே பதிவுசெய்யும் தொடர் இது.
இந்தத் தொடருக்கு ‘மாஸ்டர் ஆஃப் நன்’ என்ற தலைப்பைப் பிடிப்பதற்காகச் சுமார் இரண்டு மாதங்கள் ஆஷிஷ் தன் மூளையைக் கசக்கியுள்ளார். ஆனால், முதலில் ஆலன் யங் இந்தத் தலைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் ஆஷிஷ் அன்சாரியின் தொல்லை தாங்காமல் அதனை ஏற்றுக்கொண்டார். அதன் பின் நடந்தது அவர்கள் கனவிலும் நினைக்காத வெற்றி. “இந்த வருடம் எந்தப் பத்திரிகையும் நான் விருதைப் பெறுவேன் என்று நம்பவில்லை. எனவே, நானும் இந்த விருதை வெல்வேனென்று கனவிலும் நினைக்கவில்லை” என்று பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியிலேயே கூறியிருக்கும் அன்சாரி, “ போன வருடம் மாதிரி இந்த வருடமும் இந்த விருதைத் தவற விட்டிருந்தால் எனக்கு அது மிக மோசமான தருணமாகத்தான் இருந்திருக்கும். எனக்கு என்பதைவிட எங்கள் குழுவுக்கென்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால், என்னுடன் நடிப்பவர்கள் தங்களின் சிறப்பான நடிப்பின்மூலம் நான் சிறப்பாக நடிப்பதாக உங்களை நம்பவைக்கிறார்கள்” என்று அவர் அளித்த இந்தப் பேட்டியில் தொனிக்கும் நகைச்சுவைத் தன்மைதான் அவரது தொடர் முழுவதும் வியாபித்து நம்மைச் சிரிக்கவைக்கிறது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago