இயக்குநரின் குரல்: புதுமுகங்களைக் காப்பாற்றும் த்ரில்லர்!

By ரசிகா

பத்திரிகையாளர்கள் திரைப்பட இயக்குநர்கள் ஆவது வாடிக்கை. பத்திரிகைப் புகைப் படக்காரராக பணிபுரிந்த சதீஷ் ஜி குமார் காவல்துறை பின்னணியில் குற்றப் புலனாய்வுத் த்ரில்லர் திரைப்படம் ஒன்றை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். அதில் நாயகனாக நடித்திருக்கும் வி.கார்த்திகேயன் ஒரு இளம் வழக்கறிஞர். ‘சூரகன்’ என தலைப்பு சூட்டப்பட்டுள்ள அப்படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து..

சதீஷ் ஜி குமார்

குற்றப் புலனாய்வு படங்கள் புதிதல்ல; இந்தப் படத்தில் புதிதாக என்ன இருக்கிறது? - பழி வாங்கும் நோக்கத்துடன் இடைநீக்கம் செய்யப்பட்ட ஓர் இளம் காவல் அதிகாரிதான் ஹீரோ. அவரை எதற்காக இடைநீக்கம் செய்தார்கள் என்கிற காரணம் ரசிகர்களைக் கவரும். அவர் தனது போலீஸ் மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்கும் சுறுசுறுப்பான பேர்வழி. ஒரு குற்றத்தில் தடயங்களை ’கிராக்’ செய்வதில் சூரன். சஸ்பெண்ட் ஆனது பற்றியெல்லாம் அவர் வருத்தப்பட வில்லை. ஒருநாள் தனது துறை தன்னைப் புரிந்துகொள்ளும் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது, படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணை பார்க்கிறார்.

அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அந்தப் பெண் கிடந்த இடத்திலிருந்து தனது விசாரணையைத் தொடங்கி சட் சட் என்று ‘க்ளூ’களைப் பிடித்து குற்றவாளிகளை நெருங்குகிறார். அந்தப் பெண் ஏன் தாக்கப்பட்டார், அவரை தாக்கியவர்களின் பின்னணி என்ன என நூல் பிடித்துச் செல்லும்போது, அவரைப் பாராட்ட வேண்டிய காவல் துறை, அவருக்கு எதிராக வருகிறது. சொந்தத் துறையினரின் எதிர்ப்பை மீறி அந்த வழக்கை அவர் எப்படி முடிவுக்குக் கொண்டுவந்தார் என்பதுதான் படம்.

இதுபோன்ற கதைகளில் புதுமுகங்களை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? - புதுமுகங்களைக் காப்பாற்றி விடுபவை எப்போதுமே விறுவிறுப்பான த்ரில்லர்கள்தான். பொதுவாகக் குற்றப் புலனாய்வு த்ரில்லர் படங்களில் கதை தொடங்கிய உடனேயே இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு ஒரு திருப்பத்தை வைப்பார்கள். அவை வெறும் திசை திருப்பல்களாக இருந்தால் ரசிகர்கள் கடும் கோபத்துக்கு ஆளாகிவிடுவார்கள். ஒவ்வொரு திருப்பமும் முக்கிய சம்பவத்துக்குக் காரணமானவர்களை நோக்கி ஹீரோவை அழைத்துக் கொண்டு போகும்போதுதான் அந்தக் கதை ஆடியன்ஸுக்கு ‘என்கேஜிங்’ ஆக இருக்கும். இதில் திருப்பங்களும் ஆக் ஷனும் மாஸ் ஹீரோ படங்களுக்கு உரிய விறுவிறுப்புடன் இருக்கும். சேஸிங், சண்டைக் காட்சிகள் எல்லாமே அதிரடியாக இருக்கும். திரைக்கதைக்குமுக்கியத்துவம் கொடுத்திருப்பது போலவே படம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்திருக்கிறோம்.

படக்குழு பற்றிக் கூறுங்கள்.. ‘கோலிசோடா 2’ படத்தில் நடித்த சுபிக் ஷா கதாநாயகியாக நடித்திருக் கிறார். பாண்டியராஜன், நிழல்கள் ரவி, வின்சென்ட் அசோகன், மன்சூர் அலி கான், சுரேஷ் மேனன், டான்ஸ் மாஸ்டர் தர், ரேஷ்மா பசுபுலேட்டி, வினோதினி உட்படப் பல பிரபல நடிகர்கள் துணைக் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறார்கள். திரைக்கதையை எழுதியதுடன் நானே ஒளிப்பதிவு செய்திருக்கிறேன். அச்சு ராஜாமணி இசையமைத்திருக்கிறார். 3டி ஐ சினி கிரியேஷன் படத்தைத் தயாரித் திருக்கிறது. டிசம்பர் 1ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE