திரைப் பார்வை | கிடா - மின்மினி உதிர்ப்பதும் வெளிச்சம்தான்!

By டோட்டோ

சில சமயங்களில் பெரிய நட்சத்திர விடுதியின் உணவில் கிடைக்காத அதீத ருசி, ஒரு சின்ன சாலையோரக் கடையயின் உணவில் கிடைத்து விடுகிறது. பெரிய மின்விளக்குகளில் கிடைக்காத நிதானமாகப் படரும் வெளிச்சம், மின்மினிகளின் ஒளியில் சாத்தியமாகிறது. கோடிகளைக் கொட்டித் தயாரிக்கப்படும் செயற்கையான ஜிகினா திரைப்படங்களுக்கு மத்தியில் நேர்த்தியான, நேர்மையான சிறு முயற்சிதான் ‘கிடா’. மதுரைக்கு அருகே ஒரு சின்ன கிராமத்தில் ஓலை வேய்ந்த சிறு வீட்டில் வாழும் வயதான முதிர்ந்த தம்பதி. வாழும் நாள்கள் மீது அவர்களுக்குப் பற்றுதலை உருவாக்கி வைத்திருக்கும் அவர்களுடைய பேரன் கதிர்.

தீபாவளித் திருநாளுக்கான அவனது புத்தாடைக் கனவு. பெற்றோரை இழந்த அவனது உலகமாக இருக்கும் அவனை அண்டிப் பிழைக்கும் ஆட்டுக் கிடா, அதே கிராமத்தில், தான் வேலை செய்யும் கசாப்புக் கடையில் கோபித்துக் கொண்டு, தனிக்கடை தொடங்குவதற்காகப் பணத்துக்கு அலையும் வெள்ளைச்சாமி, ஆட்டோ ஓட்டும் வெள்ளைச்சாமியின் மகனது ரகசியக் காதல், எதையாவது திருடி மாட்டிக் கொள்ளும் சின்ன திருட்டு கும்பல் - இக்கதைமாந்தர்களுக்கு இடையே, உணர்வு எனும் கயிற்றில் அரங்கேறும் இருத்தலியல் நாடகம்தான் கதை.

பொதுவாகச் சிறு முதலீட்டில் எடுக்கப்படும் தரமான படங்கள், ஒற்றை இழையைக் கொண்டிருக்கும் ஒருவரிக் கதையின் அடிப்படையில் உருவாகும். ஆனால், எதிர்பாராத சுவாரசியமாக நான்கு வெவ்வேறு இழைகளை ஒரே புள்ளியில் இணைக்கும் விறுவிறுப்பான திரைக்கதையை எழுதி தனது முதல் முயற்சியைச் செய்திருக்கிறார் ரா.வெங்கட். தேர்ந்த நடிகர்களான பூ ராமு, காளி வெங்கட் ஆகிய இருவருடன், புதுமுகங்கள் எனச் சொல்லமுடியாத அளவுக்கு நடித்துள்ள அறிமுக நடிகர்களுடன் இயல்பாகப் பயணிக்கிறது திரைக்கதை. கதாபாத்திரங்களின் வெவ்வேறு கையறு நிலைகள் கதையின் ஓட்டத்தைக் கூட்டினாலும் வழிநெடுக கிராமிய வாழ்வில் முகிழ்ந்தபடியிருக்கும் தரமான நகைச்சுவையைத் தூவியிருப்பது திரை அனுபவத்தை இலகுவாக்குகிறது.

ஒரு காட்சியில் தனக்குப் பணம் வரப்போகும் நம்பிக்கையில் வேறொருவர் தொலைபேசியில் பேசுவதைப் பார்த்துக்கொண்டே பேசுபவரின் சொற்களுக்கு ஏற்ப தனது முகபாவங்கள் வெகு இயல்பாக மாறுவதும் பின்பு நம்பிக்கை இழப்பதும் என ஓர் அசலான கிராமிய மனிதரைக் கண்முன் நிறுத்தும் நடிப்பைப் படம் முழுவதும் வெளிப்படுத்திக் காட்டி இருக்கிறார் பூ ராமு. கதாபாத்திர நடிப்புக்காகவே பிறந்து வந்தவர்போல், தன்னை ஒவ்வொரு வாய்ப்பிலும் முன்னிறுத்தும் காளி வெங்கட், இதில் ஒரு கசாப்புக் கடையில் நேர்த்தியாக ஆட்டுக்கறி வெட்டித் தரும் வேலையாளாகவும் கையில் கத்தி பிடித்தாலும் மனதளவில் மாசுபடாத மனிதர்களைக் கொண்ட கிராமம் ஒன்றின் வெள்ளந்தி மனிதராகவும் கடைசி சட்டகம் வரை ஸ்கோர் செய்துவிடுகிறார்.

இவர்கள் போக, சிறுவன் கதிரின் பாட்டியாக நடித்த பெண்மணி, தாம் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறோம் என்கிற கவனம் இல்லாமல் அவ்வளவு இயல்பைக் காட்டியிருக்கிறார். ஆடு திருட முயற்சி செய்யும் திருடர்களை நகைச்சுவையாகக் காட்டியிருப்பது படத்தின் போக்கை இலகுவாக்கி சுவாரசியமாக்கிவிடுகிறது. ஒரு சில இடங்களில் சற்று கூடுதலாகத் தெரிந்தாலும் தீசனின் இசை கதையின் அறுபடாத ஓட்டத்தின் ஊடாக ஒரு வண்ண நிழல் போல் தொடர்கிறது. கிராமத்தின் நிலக்காட்சிகள், வாழ்விடங்கள் ஆகியவற்றை அதன் இயல்பு கெடாமல் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது ஆனந்த் ஜெரால்டின் கேமரா.

ஒரு காட்சியில் செல்லையாவாக வரும் பூ ராமு, அதிகம் பேசாமல் "நம்ம எல்லாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் செஞ்சிக்கிறது தானே உதவி" என அழுத்தமான வார்த்தைகளைச் சொல்லி நெகிழ்ந்துபோகிறார். இந்த படம் அப்படிப்பட்ட நம்பிக்கையை, இன்னமும் ஈரம் காயாத மனிதர்கள் நிலமெங்கும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையை வறண்ட மனதுகளில் துளிர்க்க வைக்கிறது. கூலி வேலை செய்யும் ஒருவர் காசில்லாத முதியவருக்கும் சேர்த்து டீ சொல்லும் ஈரம் கிராமிய வாழ்வின் யதார்த்தமாக இருப்பதை கதையின் போக்கில் விதைப்பவனின் கையிலிருந்து வரப்புகளில் சிதறும் நெல் மணிகளைப்போல் நம் மனதில் வந்து விழுகிறது.

மனிதர்களின் மீதான நம்பிக்கையை மட்டுமல்ல, தரமான சிறு படங்களின் மீதான நம்பிக்கையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை ’கிடா’ நினைவூட்டுகிறது. கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படத் திரையிடலின்போது பன்மொழிப் பார்வையாளர்கள் எழுந்து நின்று கைதட்டியதும் பூ ராமுவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததற்கும் நியாயம் செய்திருக்கிறது இப்படம் . சின்ன சின்ன குறைகளை மீறி ஒரு சின்ன அகல் விளக்குபோல் தன்னால் இயன்ற ஒளியைக் கண்களுக்கு நிறைவாகத் தந்துவிடுகிறது ‘கிடா’

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE