நான் நேசித்த, வியந்த ஓர் இசையமைப்பாளரிடம் முதன்மை உதவியாளராகச் சேருவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. அப்போது நான் ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறேன். அந்த நிறுவனம் நுங்கம்பாக்கத்தில் இருந்தது. அது 1997-ம் வருடம். பக்ரீத் பண்டிகைக்கு ஊருக்குச் செல்லலாம் என்றால் அலுவலகம் செய்துகொடுக்க வேண்டிய ‘அவுட் சோர்சிங்’ வேலைகள் அதிகமாக இருந்தன. இதனால் விடுமுறை கேட்டும் எனக்குக் கிடைக்வில்லை. அதனால் பக்ரீத் பண்டிகை அன்று எனது அலுவலகம் அருகில் இருக்கும் பள்ளிவாசலுக்குச் சிறப்புத் தொழுகைக்காகச் சென்றேன்.
பண்டிகை நாள் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. நேரம் அமையும்போதெல்லாம் நான் சென்று வருகிற பள்ளிவாசல்தான். நான் வழக்கமாக அமரும் இடம் நிறைந்திருந்ததால் வேறு எங்கே இடமிருக்கிறது என்று பார்த்து அங்கே சென்று அமர்ந்தேன். கவனம் முழுவதும் தொழுகையில் இருந்தது. பக்ரீத் தொழுகை முடிந்ததும் நமது இடப்புறம், வலப்புறம் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்வது வழக்கம். நான் இடப்புறம் இருப்பவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வலப்புறம் திரும்பினேன். ஏ.ஆர்.ரஹ்மான் அமர்ந்திருந்தார்.
அவரும் என் பக்கம் திரும்பி “ பக்ரீத் வாழ்த்துக்கள்... நான் ரஹ்மான்” என்று தன் பெயரைக் கூறி அறிமுகப்படுத்திக்கொண்டார். நானும் என் பெயரைக் கூறி அவருக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு ‘உங்களைச் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சிடைகிறேன்’ என்றேன். “நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று என்னை விசாரித்தார். ‘மல்டிமீடியா இன்ஜினீயர்’என்றேன். உடனே அவர், “ எனது அலுவலக போன் நம்பரைக் குறித்துக்கொள்ளுங்கள். என்னை வந்து பாருங்கள்” என்றார். அப்போது மொபைல் போன் வந்திருக்கவில்லை.
ரஹ்மானின் வாழ்த்து
இதற்கிடையில் எனக்குத் திருமணம் ஏற்பாடாகியிருந்தது. திருமண அழைப்புடன் அவரைச் சென்று சந்திப்போம் என்று போனபோது ரஹ்மான் மும்பை சென்றிருந்தார். எனது திருமண அழைப்பிதழைக் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். திருமணமே வாழ்க்கையின் முக்கிய திருப்பம். அன்று மேலும் ஒரு திருப்பமாக ஏ.ஆர்.ரஹ்மானிடமிருந்து எனக்குத் திருமண வாழ்த்து வந்திருந்தது. அவர் கைப்பட எழுதி அனுப்பியிருந்தார். இவ்வளவு பெரிய வெற்றியாளர் பக்ரீத் வாழ்த்துச் சொன்ன நம்மை நினைவில் வைத்து, திருமண வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறாரே என்று வியந்துபோய், சென்னை வந்ததும் அவரைச் சந்தித்து நன்றி கூற, அவரது அலுவலகத்துக்கு போன் செய்து, ‘எப்போது வந்தால் சாரைச் சந்திக்கலாம்’என்று கேட்டேன்.
அலுவலகத்தில் இருந்தவர், “ நீங்கள் சென்னை வந்துட்டீங்களா? சார் உங்களைப் பலமுறை கேட்டார். உங்களைத்தான் அவர் தேடிக்கொண்டிருக்கிறார். உடனே அலுவலகம் வாருங்கள் ” என்றார். நான் காலை 11 மணிக்கு ரஹ்மானின் அலுவலகத்துக்குச் சென்று காத்திருந்தேன். ஆனால், ரஹ்மானின் அலுவலகத்தில் இசைப் பணிகள் தொடங்குவது மாலை 6 மணிக்குத்தான் என்பதை அப்போது தெரிந்துகொண்டேன். மாலை 6 மணிக்கு ரஹ்மான் ஃபிரெஷ்சாக வந்தார். மாலை தொடங்கி மறுநாள் காலை 10 மணிவரை ரஹ்மான் பணியாற்றுவார் என்பதும் அவர் ஓர் இரவுப் பறவை என்பதையும் போகப்போகத் தெரிந்துகொண்டேன்.
எம்.டி.யின் பாராட்டு
அன்று என்னைப் பார்த்ததும் நலம் விசாரித்துவிட்டு, எனது வேலை குறித்து விசாரித்தார். நான் விவரங்களைக் கூறிமுடித்ததும் உடனே என்னை அவரது ஸ்டுடியோவுக்கு அழைத்துச் சென்று பிரிக்கப்படாமல் இருக்கும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களைக் காட்டினார். ‘மேக்’ ஆபரேடிங் சிஸ்டம் என்பது எனக்குப் பரிச்சியமாக இருந்ததால், அந்த ஆப்பிள் கம்ப்யூட்டர்களைப் பார்த்துப் பரவசமாகினேன். அடுத்துவந்த ஒருவார காலம், ரெக்கார்டிங், மிக்ஸிங் என்று எல்லாப் பணிகளையும் அழைத்துச் சென்று காட்டினார். நான் திருமணத்துக்காக போட்டிருந்த விடுமுறை முடியும் கட்டத்துக்கு வந்துவிட்டது. இதை அவரிடம் கூறியபோது “ உங்கள் அலுவலகத்துக்குப்போய் முறையாகச் சொல்லிவிட்டு நாளை முதல் இங்கே வந்துவிடுங்கள்.” என்றார்.
எனக்கோ தலைகொள்ளாத மகிழ்ச்சி. என்றாலும் தயக்கத்துடன் எனது மேலதிகாரியைச் சந்தித்து பணியிலிருந்து விடுவிக்கும்படி கேட்டேன். உடனே அவர், “நம்மைவிடப் பெரிய மல்டி மீடியா நிறுவனம் சென்னையில் இருக்கிறதா?” என்று கேட்டார். “ இல்லை சார், ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் வேலை” என்றேன். அதைக் கேட்டு, என்னைவிட அதிகமாகச் சந்தோசப்பட்டார். பின்னர், நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பணியாற்றுவதைக் கேள்விப்பட்ட எனது எம்.டியும் அவருடைய துணைவியாரும் என்னை போனில் அழைத்துப் பாராட்டினார்கள். அவர் பின்னாளில் ஏர்செல் என்ற புகழ்பெற்ற நிறுவனத்தைத் தொடங்கிய சி.எஸ்.
இருவேறு தரம்
ரஹ்மானிடம் உதவியாளராக நான் சேர்ந்தபோது ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. ரஹ்மானின் ஸ்டுடியோவில் இசைக்கென்று அவர் இறக்குமதி செய்து நிறுவியிருந்த கம்ப்யூட்டர்களின் செயல்திறன் அளவைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனேன். ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயாரான எனக்கு கம்யூட்டரில் இருக்கும் ஹார்ட் டிஸ்க் அதன் மெமரி ரேட் எல்லாமே தெரிந்தவைதான். ஆனால், இசைப் பதிவின் பயன்பாட்டுக்கு என்று வருகிறபோது இதன் ஆர்.பி.எம் ரேட் வேறாக இருந்தது.
எல்லாமே ‘புரோ’ என்று சொல்லக்கூடிய(Pro Quality) மிக உயர்ந்த தரத்தில் இருந்தன. அன்று சாதாரண கம்ப்யூட்டர்களில் இருந்த 50 ஜிபி மெமரியின் விலை 20 ஆயிரம் ரூபாய் என்றால் இசைக்காகப் பயன்படுத்தப்படும் மெமரியின் விலை 2 லட்சம் ரூபாய் என்பதும் இரண்டுமே தரத்தில் அடிப்படையில் வெவ்வேறு வகையானவை என்பதையும் ரஹ்மான் ஸ்டுடியோவில்தான் நான் தெரிந்துகொண்டேன்.
மல்டி மீடியாவும் கம்ப்யூட்டரும் தெரிந்த எனக்கு இது பெரிய ஆச்சரியமாக இருந்தது. இது வேறு களம் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். என்னதான் இசை என்றாலும் இவ்வளவு குறைந்த மெமரிக்கு ஏன் இத்தனை அதிகமான விலை என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. சந்தையில் இருக்கும் ஹார்ட் டிஸ்கையே பயன்படுத்தலாமே, ஏன் இவ்வளவு விலைகொடுக்க வேண்டும் என்று கேட்டுவிட்டு, 20 ஆயிரம் ரூபாய் டிஸ்கை வாங்கி வந்து ரஹ்மான் ஸ்டுடியோவில் பதிவு செய்து பார்த்தேன். ஆனால், இதில் ஒரு ட்ராக் கூட உருப்படியாகப் பதிவு செய்யமுடியவில்லை. ஆனால், அங்கிருந்த புரோ மெமரியில் 32 ட்ராக் பண்ண முடிந்தது. இசைப் பயன்பாட்டுக்கான ‘புரோ’ சாதனங்களின் தரமே வேறு என்பதை அப்போது அங்கேதான் தெரிந்துகொண்டேன்.
இல்லாமல்போன இடைவெளி
கடந்த 25 ஆண்டுகளுக்குள் ஏற்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி, இசையுலகில் பயன்படுத்தும் மிக உயர்ந்த ‘புரோ’ தரம், சாமானிய ரசிகனின் கைக்கும் இன்று வந்துவிட்டது. அன்று இருந்த இந்த இடைவெளி இன்று இல்லாமல்போய்விட்டது. அன்று ஹார்ட்வேரில் இருந்த ‘புரோ’ செயல்திறனின் தரத்தை இன்று எளிமைப்படுத்தி அப்படியே சாப்ட்வேருக்கு இடம் மாற்றிவிட்டது டிஜிட்டல் தொழில்நுட்பம். இன்று வெறும் 10 ஆயிரம் ரூபாய் ஹார்ட் டிஸ்கிலேயே 100 சதவீத ‘புரோ’தரத்தைக் கொண்டுவந்துவிடலாம். விலை மலிவாகவும் எளிமையாகவும் ஆகிவிட்ட கணினி இசைத் தொழில்நுட்பத்தின் இன்றைய அபார வளர்ச்சிதான் எண்ணற்ற இசையமைப்பாளர்கள் புதிது புதிதாகப் புற்றீசல் போல் வந்துகொண்டே இருப்பதற்கு மிக முக்கிய காரணம்.
ஆனால், எல்லோராலும் நிலைத்து நிற்க முடியாத நிலை இருக்கிறது. ‘தரமான சவுண்டிங்’ உருவாக்க வேண்டும் என்றால் கணினிகளுக்கு லட்சக்கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிச் செய்துவிட்டால் மட்டுமே சவுண்டிங் கிடைத்துவிடாது. அந்தக் கணினியையும் அதன் மென்பொருட்களையும் பயன்படுத்தத் தெரிய வேண்டும் என்பதோடு இசையின் மீதான காதலும் கற்பனையும் தொழில்நுட்பத்துடன் இணைய வேண்டும் என்பதுதான் மிக முக்கியமான அம்சம். ரஹ்மானிடன் நான் கவனித்ததும் கற்றுக்கொண்டதும் இந்த பால பாடத்தைத்தான்… அதை விரிவாக அடுத்த வாரம் பார்க்கலாம்.
தொடர்புக்கு tajnoormd@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago