செ
ன்னையின் நான்காவது வாரத்தைத் தாண்டியிருக்கும் மலையாளப் படம் ‘மாயாநதி’. அதில் விசாரணை அதிகாரியாக முக்கியக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஒளிப்பதிவாளர், தமிழ் நடிகர் இளவரசுவின் நடிப்பு பாராட்டைப் பெற்று வருகிறது. அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...
‘மாயாநதி’ வாய்ப்பு எப்படி வந்தது?
ஒருநாள் பென்னி என்பவர் போனில் அழைத்து, “ஆஷிக் அபுவின் உதவியாளர் பேசுகிறேன். படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. செய்ய முடியுமா?” எனக் கேட்டார். ஆஷிக் அபுவின் படங்கள் மீதிருந்த நம்பிக்கையால் உடனடியாக `சம்மதம்’ எனச் சொல்லிவிட்டேன்.
உங்கள் கதாபாத்திரம் குறித்து ஒன்றும் கேட்கவில்லையா?
குணச்சித்திர நடிகர்களுக்குப் பொதுவாக முழுக் கதையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு முன்னால் நடந்த சம்பவங்கள், பின்னால் நடக்கவிருக்கும் சம்பவங்கள் ஓரளவு தெரிந்தால் போதும். அப்படி நடந்த, நடக்கவிருக்கும் சம்பவங்கள் கதைப்படி நம் கதாபாத்திரத்துக்குத் தெரிந்திருக்க வேண்டுமா, இல்லையா இதுதான் முக்கியம். இந்தப் படத்திலும் எனக்குச் சம்பவங்களாகத்தான் சொன்னார். நானும் அதைத்தான் கேட்டேன். அதுதான் நல்லது.
காதல் படமாக வெளிப்படும் இந்தப் படத்தை உங்கள் கதாபாத்திரம்தான் சமூக, அரசியல் படமாக்குகிறது..?
ஆனால் இதை நானும் உங்களைப் போல் படம் பார்க்கும்போதுதான் உணர்ந்தேன். விசாரணை அதிகாரியான என் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி, பிடிபடும் குற்றவாளியான டோவினோ தோமஸிடம் பேசும் காட்சி ஒன்று இருக்கிறது. இந்த வசனம் தேவையற்றது என நினைத்தேன். ஆனால் அது படத்துக்கு வேறு கலரைக் கொடுத்துவிட்டது. ஏனென்றால் அதற்கு முந்தைய காட்சி வரை தொடரும் காதலில் நானும் ஒரு பார்வையாளனாக ஒன்றிப் போய்விட்டேன். சின்னச் சின்ன வசனங்களில் வழியே ஆஷிக் அபு பெரிய மாற்றத்தையே படத்துக்குக் கொடுத்துவிடுகிறார்.
வசனத்துக்கு முக்கியத்துவம் தரும் தமிழ்ப் படங்களிலிருந்து வேறுபட்ட ‘மாயாநதி’ அனுபவம் எப்படி இருந்தது?
புதுமாப்பிள்ளையான எங்கள் சக போலீஸ்காரரை கல்யாணமான அன்றே குற்றவாளியைத் தேடும் பணிக்கு அழைக்கக் காத்திருக்கும் காட்சியைத்தான் முதலில் எடுத்தோம். புதுமாப்பிள்ளை தன் மனைவிக்கு முத்தம் தருவதை நான், கார் சைட் மிரரர் வழியாகப் பார்த்து ஒரு உணர்ச்சியைத் தர வேண்டும். ஆனால் என்ன உணர்ச்சியைத் தர வேண்டும் எனச் சொல்லவில்லை. நான் அந்தப் புதுமாப்பிள்ளைக்கு உயர் அதிகாரி. முகத்தைச் சுழித்திருக்கலாம். கிண்டலாக ஏதாவது பேசியிருக்கலாம். ஆனால் பெரிய பாவனை இல்லாது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். “இதுதான் எங்களுக்கு வேண்டியது” என ஆஷிக் அபு தன் கைகளை உயர்த்திக் காண்பித்தார்.
தமிழில் கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்து நடிக்கிறீர்களா?
எனக்கும் அதில் சலிப்புதான். அதனால் சில படங்களில் நடிக்காமலே இருந்துவிட்டேன். முதலில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்தேன். ‘நெறஞ்ச மனசு’ படத்துக்குப் பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. பிறகு அப்பா கதாபாத்திரங்கள். அதிலும் இரண்டு வகை இருக்கின்றன. ‘களவாணி’ அப்பா, இன்னொன்று ‘முத்துக்கு முத்தாக’ அப்பா. பிறகு இதுமாதிரியெல்லாம் கேட்கிறீர்களே, நாலைஞ்சு வருஷத்துக்குள் நடிகனும் பழசாகிடுவான் இல்லையா?
குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்கிறீர்களா?
குணச்சித்திர நடிப்பு என்பது கடைமடை விவசாயம் போன்றது. கதாநாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர் எல்லோரும் பாசனம் செய்ததுபோகத்தான் நமக்கு வரும். நாங்கள் கீழத் தஞ்சை விவசாயிகள். சினிமாக்களில் இறந்துபோன குடும்ப உறுப்பினராக ஒரு ஃபோட்டோ வீட்டில் மாட்டியிருப்பதைக் காண்பிப்பார்கள். பார்த்திருக்கிறீர்களா? அப்படியாகவும் நாங்கள் கதைக்குள் இருக்க வேண்டியிருக்கும்.
குணச்சித்திர நடிகராக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் சிறு நகைச்சுவை உங்கள்மீது வியாபிக்கிறதே...
குணச்சித்திர நடிகராக நகைச்சுவை வெளிப்படுத்துவது மிகக் கஷ்டமான காரியம். ‘மாயாநதி’யிலும் சிறு நகைச்சுவையும் வேண்டுமென்றார்கள். முதலில் எனக்கு கொஞ்சம் பயம்தான். ஆனால் அது வெளிப்பட்டுள்ளது. அதைத் திட்டமிடுவதில்லை.
11JKR_ILAVARASU.1ஒளிப்பதிவு இயக்குநரான நீங்கள் எப்படி நடிப்புக்குள் வந்தீர்கள்?
பாரதிராஜா படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தேன். ‘வேதம்புதிது’ படத்தில்தான் அதுபோல ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னார். நானும் நடித்தேன். ஆனால் அது ஒருநாளுடன் நின்றுவிடவில்லை. வசனமெல்லாம் கொடுத்துப் பேசச் சொன்னார். பிறகுதான் தெரிந்தது, நாம் நடிப்பது ஒரு கதாபாத்திரத்தில் என்று. ராஜாவுக்கு மைத்துனராக நடித்தேன். இந்த ‘வேதம்புதிது’ கதாபாத்திரத்தை மீண்டும் ‘தவசி’யில் செய்தேன். ‘பொற்கால’த்திலும் அதே போன்ற கதாபாத்திரம்தான்.
ஒளிப்பதிவாளராக ஏன் தொடர்ந்து இயங்க முடியவில்லை?
ஒளிப்பதிவாளராக 11 படங்கள் வேலை பார்த்திருக்கிறேன். அவை பெரும்பாலும் கிராமப் பின்னணி அல்லது குடும்பப் படங்களாகவே இருந்தன. வித்தியாசமாகப் பணியாற்ற விரும்பினேன். ‘தவசி’ படத்தில் நடிகனான பிறகு எனக்கு ஒளிப்பதிவாளர் வாய்ப்பு ஏதும் வரவில்லை என்பதுதான் உண்மை. என்னுடன் பணியாற்றிய இயக்குநர்களும் வெற்றிபெறவில்லை. இது என்னுடைய வாய்ப்பின்மைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago