உங்கள் முன்னால் இருண்ட பாதை படர்ந்திருக்கிறது. அடுத்த அடிக்கான சாத்தியம் மட்டுமே உங்களுக்கான நம்பிக்கை. இந்தப் பயணத்தை எப்படி முடிப்பீர்கள்? இதுதான் டென்மாவின் வாழ்வில் நடக்கிறது.
ஜப்பானிலிருந்து ஜெர்மனியின் பிரபல ஐஸ்லர் மருத்துவமனைக்குக் கனவுகளோடு நுழைகிறான் இளம் மருத்துவரான கென்சோ டென்மா. அம்மருத்துவமனை தலைவரின் மகள் எவாவும் - டென்மாவும் காதலில் இருக்கிறார்கள். டென்மா அடிப்படையில் பச்சாத்தாபம் கொண்டவன். செய்யும் தொழிலை முடிந்தவரை நேர்மையுடன் பழகியவன். இதனால் மருத்துவமனை அரசியலில் சிக்கிக்கொண்டு ஒவ்வொரு நாளையும் மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
டென்மா, ஐஸ்லர் மருத்துவமனையின் சிறந்த மூளை அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால், அங்கே அனுமதிக்கப் படும் விஐபிகளுக்கான சிகிச்சையை அவனே மேற்கொள்ள வேண்டும் என மருத்துவமனைக் கட்டாயப்படுத்துகிறது. டென்மாவோ முதலில் வருபவர்களுக்கே சிகிச்சையில் முன்னுரிமை என்கிற தனது மருத்துவத் தொழில் தர்மத்தை விட்டு விலகாது நிற்கிறான்.
இதனால் மருத்துவமனை தலைமைக்கும் டென்மாவுக்கும் இடையே மோதல் துளிர்விடத் தொடங்குகிறது. இந்தச் சூழலில்தான் ஜோகன் லிபர்ட் என்கிற சிறுவன் தலையில் குண்டடிப்பட்டு சிகிச்சைக்காக அங்கே சேர்க்கப்படுகிறான். அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்றிட அவசர சிகிச்சைப் பிரிவுக்கு டென்மா விரைகிறான். சக மருத்துவர்களோ டென்மாவைத் தடுத்து நிறுத்துகிறார்கள்.
» தீஸ்தா நதி வெள்ள பாதிப்பு: சிக்கிமில் காணாமல் போன 102 பேரை தேடும் பணி தீவிரம்
» அடுத்த 4 ஆண்டுகளில் வாகன தயாரிப்பில் இந்தியா முதலிடம்: நிதின் கட்கரி தகவல்
யாருக்கு முன்னுரிமை? - நகரின் மேயர் தீவிர உடல்நல பாதிப்புகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கான அறுவை சிகிச்சையை டென்மா உடனே செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். அதனை மறுத்துவிடும் டென்மா, முதலில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கே அறுவை சிகிச்சை செய்து அவனைக் காப்பாற்றுகிறான்.
அதே நேரம் மேயருக்குப் பிற மருத்துவர்கள் செய்த சிகிச்சை பலனளிக்காமல் இறக்கிறார். கொதித்துப் போகும் மருத்துவமனை நிர்வாகம் டென்மாவுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமைகளையும் உயர் பதவியையும் ரத்து செய்து பழிவாங்குகிறது. டென்மாவின் காதலும் உடைந்துபோகிறது.
உயிர் பிழைத்த சிறுவன் முன் பெரும்வலியுடன் அந்த மாலை டென்மா அமர்ந்திருக்கிறான். அச்சிறுவனின் கைவிரல்கள் மெல்ல அசைய, அந்த அறையிலிருந்து டென்மா வெளியேறுகிறான். மறுநாள் காலை டென்மாவின் வீட்டின் கதவு பலமாகத் தட்டப்படுகிறது.
கதவைத் திறந்த டென்மாவுக்கு அதிர்ச்சி. “மருத்துவமனை தலைவர் உட்பட இன்னும் சில சக மருத்துவர்களும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்; நீங்கள் சிகிச்சையளித்த சிறுவன் மருத்துவமனையிலிருந்து மாயமாகி இருக்கிறான்” என்று கூறி டென்மாவை போலீஸார் கைதுசெய்து அழைத்துச் செல்கிறார்கள். பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு டென்மா விடுவிக்கப்படுகிறான்.
காலம் காட்டு நதியெனச் சுழித்தோடுகிறது. ஐஸ்லர் மருத்துவமனையின் உயர் பதவியில் டென்மா மீண்டும் நியமிக்கப்படுகிறான். மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு வரும் முதியவர்கள், ஏழை, எளிய மக்கள் என அனைவருக்கும் டென்மா இப்போது ஆதர்ச நாயகன். இந்நிலையில் கொலை - கொள்ளை வழக்கில் கைதான கைதி ஒருவன் ஐஸ்லர் மருத்துவமனையில் டென்மாவின் மேற்பார்வையில் அனுமதிக்கப்படுகிறான். அந்தக் கைதி ‘மான்ஸ்டர்’ என்கிற வார்த்தையை அதீத அச்சத்துடன் உச்சரிப்பதைக் கவனித்த டென்மா, “எதுவாக இருப்பினும் போலீஸாரிடம் கூறிவிடுங்கள்” என்று தேற்றுகிறான்.
கைதியும் அந்த இரவைக் கடந்து மறுநாள் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துவிடலாம் என்று முடிவெடுக்கிறார். அப்போது மருத்துவமனை வராண்டாவில் ஷு சத்தம் கேட்கிறது. தொடர்ந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒலிக்கிறது. அங்கே காவலுக்கு இருந்த போலீஸார் கொல்லப்படுகிறார்கள். சிகிச்சைப் பெற்று வந்த கைதி, “மான்ஸ்டர்..” என அலறியடித்துக் கொண்டு மருத்துவமனையிலிருந்து எழுந்து தப்பியோடிப் பாழடைந்த கட்டிடம் ஒன்றுக்குள் ஓடி நுழைகிறார். பொண்ணிற முடியுடைய அந்த இளைஞன் அந்தக் கைதியைக் கொலைவெறியுடன் பின் தொடர்கிறான். டென்மாவும் அங்கு விரைந்து செல்கிறான்.
எதிர்பாராத சந்திப்பு: கட்டிடத்தின் உச்சியில் ஒரே நேர்கோட்டில் மூவரும் இருக்கிறார்கள். ஒரு முனையில் நிலவின் ஒளியில் பாதி முகம் பிரகாசிக்க அந்த இளைஞன் நிற்கிறான். மறுமுனையில் டென்மா குழப்பத்துடன் நிற்கிறான். இருவருக்குமிடையில் அந்தக் கைதி மண்டியிட்டு, அந்த இளைஞனை நோக்கி “என்னை விட்டுவிடு..” எனக் கெஞ்சிக் கதறுகிறான். ஆனால் சிறு பதற்றமுமின்றி அந்த இளைஞன் அக்கைதியைக் கொல்கிறான். டென்மாவின் கண்முன்னால் அந்தக் கொலை நொடியில் நடந்து முடிகிறது.
பெரும் அமைதி. தன் முன்னால் நடந்த கொலையை விளங்கிக்கொள்ள முடியாமல் திகைத்து நிற்கும் டென்மாவை நோக்கி “டாக்டர் டென்மா.. என்னைத் தெரியவில்லையா..? முன்பு நான் செய்த சில கொலைகள் உங்களுக்கானவை!” என்று கூறிக் கொண்டே நெருங்கிவரும் அந்த இளைஞனது முழு முகமும் வெளிப்படுகிறது. டென்மாவுக்கு அதிர்ச்சி! அவன் முன்னால் நிற்பது 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஐஸ்லர் மருத்துவமனையில் தலையில் குண்டு காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட அதே ஜோகன் லிபர்ட். இப்போது வளர்ந்துவிட்டான்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு டென்மாவின் வாழ்க்கை தலைகீழாகிறது. யார் உயிரைக் காப்பாற்றப் பல இழப்புகளை டென்மா சந்தித்தானோ, அவனைக் கொல்வதற்காகத் தனது வாழ்க்கையை பணயம் வைக்க ஆயத்தமாகிறான். இறுதியில் என்ன நடந்தது, ஏன் ஜோகன் லிபர்ட் மனிதர்களைக் கொன்று குவிக்கும் மிருகமாக மாறினான் என்பதை உளவியல் த்ரில்லர் வகைத் திரைக்கதை கொண்டு நகர்த்தி இருப்பார் தொடரின் எழுத்தாளர் ஜப்பானின் நவோகி உரசவா.
“கூட்டம் எங்கு உள்ளதோ அங்கே வெறுப்பு இருக்கும். அதை நான் பயன்படுத்திக் கொண்டேன்”, “இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவரையும் சமமாக நடத்துவது மரணம் மட்டும்தான்” என ‘மான்ஸ்டர்’ தொடர் முழுவதும் நம்மைத் தட்டி எழும்பும் வசனங்கள் ஏராளம்.
ஜப்பானின் புகழ்பெற்ற நிப்பான் தொலைக்காட்சியில் அனிமேஷன் தொடராக 19 ஆண்டுகளுக்கு முன் வெளி யானது ‘மான்ஸ்டர்’. தற்போது எபிசோட் ஒவ்வொன்றும் 20 நிமிடங்களைத் தாண்டாத 74 அத்தியாயங்களுடன் வெப் சீரீஸ் வடிவத்துக்கு தொகுக்கப்பட்டு 2022இல் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி, இன்றுவரை வரவேற்பைப் பெற்று வருகிறது. அனிமேஷன் தொடர்களை உருவாக்குவதில் ஹாலிவுட்டுக்கே ‘தாத்தா’வாக விளங்கும் ஜப்பானியர்களின் தரமான சம்பவம் இது.
டென்மா துப்பாக்கியால் தன்னைச் சுடக் குறி வைக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம் வளர்ந்து நிற்கும் ஜோகன், “சரியாக நெற்றிப் பொட்டில் சூடு..” என்று ஆள்காட்டி விரலைக் காண்பிப்பான். அப்போது ஜோகன் வெளிப்படுத்தும் உடல்மொழி லைவ் ஆக் ஷன் செய்து நடிக்கும் ரத்தமும் சதையுமான மனித நடிகர்களை விஞ்சக் கூடியது.
அந்த அளவுக்குக் கதாபாத்திரங்களின் உணர்வுகளை அனிமேஷனில் தத்ரூபமாக வடித்திருக்கிறார்கள். ஜோஹன் லிபர்ட் இக்கதையில் வில்லன் அல்ல. நவோகி உரசவா அதைதான் நமக்கு கடத்துகிறார்.
‘மான்ஸ்டர்’ உங்களுக்குள் இருக்கும் தத்துவத்தை எழும்பும். இல்லையேல் உங்களுக்கான தத்துவத்தை உருவாக்கும்.
- indumathy.g@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago