திரையில் உருப்பெறாத வாழ்க்கை - ராமானுஜன்

By அரவிந்தன்

வாழ்க்கை வரலாறுகளைப் படமாக்குவதில் இரண்டு சவால்கள் இருக்கின்றன. தகவல்களைச் சரியாகச் சொல்வது, அவற்றைப் புனைவு வடிவத்தில் சொல்வது. இவற்றைவிடப் பெரிய சவால் ஒன்று உண்டு. அந்த ஆளுமையின் வாழ்வின் சாரத்தைப் படைப்பூக்கத்துடன் பிழிந்து தருவதே அது. ரிச்சர்ட் அட்டன்பரோ என்னும் ஆங்கிலேயர் காந்தி என்னும் இந்திய ஆளுமை குறித்து எடுத்த ஆங்கிலப் படத்தில் இவை அனைத்தும் இசைவோடு பொருந்தியிருந்தன. தமிழிலும் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் இருக்கின்றன. பாரதியார், வ.உ. சிதம்பரம் பிள்ளை, கட்டபொம்மன், ராஜராஜசோழன், பெரியார் ஈ.வெ.ரா. முதலான சிலரது வாழ்க்கை குறித்த படங்கள் தமிழில் வந்துள்ளன. தகவல்கள், புனைவாக்கம் ஆகிய இரு அம்சங்களும் ஒருசேர அமைந்த படங்கள் இவற்றில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கப்பலோட்டிய தமிழன் படத்தில் மட்டும் இவை ஓரளவு சரியாக அமைந்திருந்தன.

ஞானராஜசேகரன் இயக்கத்தில் வந்திருக்கும் ராமானுஜன் படத்தை இதே அளவுகோலின் அடிப்படையில் அணுகினால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ராமானுஜன் என்னும் மாபெரும் மேதையின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படம் இரண்டே முக்கால் மணிநேரம் ஓடிய பிறகும் அவர் யார், அவரது சாதனைகள் என்ன என்பது தெளிவாகவில்லை. படம் முடிந்த பிறகு திரையில் தோன்றும் வரிகள்தாம் அவரது கண்டுபிடிப்புகளின் மகத்தான வீச்சைச் சொல்கின்றன.

சிறு வயதிலேயே ராமானுஜனின் மேதைமையைக் காட்டும் சில காட்சிகள் வருகின்றன. கோயிலில் கொடுக்கப்படும் சுண்டலைக் கணக்கிடுவதை வைத்து ராமானுஜனின் கணிதத் திறன் காட்டப்படுகிறது. உத்தேசமாகக் கையில் அள்ளிக் கொடுக்கப்படும் சுண்டலை வைத்து அந்நிகழ்வின் நிகழ்தகவைத்தான் (Probability) அறிய முடியுமே தவிர யாருக்கு எவ்வளவு என்பதை அறிவதற்கான துல்லியமான சமன்பாட்டை அதிலிருந்து பெற முடியாது. தவிர, கணக்குப் போடும் திறமை என்பது வேறு, கணித அறிவு என்பது வேறு என்னும் வித்தியாசத்தை இயக்குநர் கணக்கில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

மாறாக, பூஜ்ஜியம் குறித்து ஆசிரியரிடம் கேள்வி கேட்கும் இடத்தில் கணித அறிவு பளிச்சிடுகிறது. பின்னாளில் உபநிடதக் கதையை வைத்து அதே பூஜ்யத்தை விளக்கும் காட்சி கற்றுக்குட்டித்தனமான நாடகம்போல உள்ளது. படத்தில் காட்டப்படும் கதையைவிடவும் ‘பூர்ணமதஹ பூர்ணமிதம்’ எனத் தொடங்கும் உபநிடத ஸ்லோகம் பூஜ்யத்தின் முடிவிலித் தன்மைக்கு நெருக்கமாக இருக்கும்.

இந்த இரு காட்சிகளைத் தவிர வேறு எந்தக் காட்சியும் ராமானுஜனின் மேதைமையை வெளிப்படுத்த முயலவில்லை. ராமானுஜன் எப்போதும் வலியைச் சுமந்துகொண்டிருப்பதாகக் காட்டப்படுகிறது. அந்த வலி வலிமையாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. அவரைப் புரிந்துகொள்ளாமல் சிலர் புறக்கணிக்கிறார்கள் என்றால் புரிந்துகொள்ளும் சிலர் அவருக்குப் பெரும் உதவிகளும் செய்கிறார்கள். கல்வித் துறையில் அவர் பிரச்சினை தீருகிறது. அவரது பணக் கஷ்டமும் தீருகிறது. பிறகு என்னதான் அவருக்குப் பிரச்சினை? இதற்கான பதிலை இந்தப் படத்தில் அறிய முடியவில்லை.

குடும்ப வாழ்வில் அவருக்கு ஏற்படும் சிக்கல்களும் அலாதியானவை அல்ல. சைவ உணவு கிடைக்காமையும் மனைவியுடனான தொடர்பு முற்றாக அறுந்துபோன தனிமையும் லண்டனில் அவருக்கு ஏற்படும் பிரச்சினைகளாகக் காட்டப்படுகின்றன. ஆனால் தற்கொலை செய்துகொள்ள முயலும் அளவுக்கு இவையும் வலுவாகச் சித்தரிக்கப்படவில்லை. ஹார்டிக்கும் அவருக்கும் இடையேயான உறவில் ஈரமே இல்லை. லண்டன் காட்சிகள் மந்தமான நாடகமாகக் கடந்து செல்கின்றன. ராமானுஜனைப் பரிதாபத்துக்குரிய பிறவியாகச் சித்தரிப்பதில் இயக்குநர் வெற்றியடைகிறார். ஆனால் அவரது தன் நெருக்கடிகளை மீறிப் போராடும் குணத்தையும் அவர் சித்தரிக்கவில்லை.

பக்தி என்பது ராமானுஜனின் மரபிலும் ஆளுமையிலும் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. படத்திலும் நாமகிரித் தாயாரின் மீது ராமானுஜனுக்கு இருக்கும் அளவற்ற பக்தி சொல்லப்படுகிறது. ஆனால் அது வசனங்களாகவே சொல்லப்படுகிறது. பக்தி அல்லது ஆன்மிகத்தின் மூலமாகத் தன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இந்திய மனத்தைச் சித்தரிப்பதன் மூலம் ஒரு இந்திய மேதையின் வாழ்வின் வித்தியாசமான பரிமாணத்தைச் சொல்லியிருக்க முடியும். இதிலும் இயக்குநர் தவறிவிட்டார்.

குறைகளுக்கிடையே சில கீற்றுகள் பளிச்சிடுகின்றன. ராமானுஜனின் அம்மா கோமளத்தம்மாள் பாத்திரம் நன்றாக வடிக்கப்பட்டுள்ளது. இந்திய அன்னையின் உளவியல் அவர் மூலம் நன்கு சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ராமானுஜனின் மனைவியின் பாத்திர வார்ப்பும் பாராட்டத்தக்கது. கணவனும் மனைவியும் பிரிவுக்குப் பிறகு சந்திக்கும் இடம் அழகாக உள்ளது. இந்தக் காட்சியின் வெற்றிக்கு மனைவியாக வரும் பாமாவின் அழகுக்கும் நடிப்புக்கும் முக்கியப் பங்கு உள்ளது. அவஸ்தையே வாழ்க்கையான ராமானுஜன் பாத்திரத்தில் அபிநய் நன்றாகவே பொருந்துகிறார். கடல் கடந்து சென்றதால் வந்த தோஷத்துக்குப் பரிகாரம் செய்யவில்லை என்ற காரணத்தால் ராமானுஜன் மரணத்திலும் தனியனாக நிற்கும் காட்சி அதன் தட்டையான சித்தரிப்பையும் மீறி மனதைத் தொடுகிறது.

படத்தின் இன்னொரு பலம் ரமேஷ் விநாயகத்தின் பின்னணி இசை. அடுத்ததாக சன்னி ஜோசபின் ஒளிப்பதிவு.

ஒரு மேதையின் வாழ்வைச் சித்தரிக்கும் இந்தப் படம் பல இடங்களில் ஆவணத்தன்மை கொண்டிருப்பது இயல்பானதாகத் தோன்றலாம். ஆனால் காந்தி முதலான பல வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் இந்தத் தன்மை இல்லை. தவிர எத்தனையோ ஆவணப்படங்கள் படைப்பூக்கம் மிகுந்த அனுபவமாக மாறியிருக்கின்றன. உதாரணம் ஆனந் பட்வர்தனின் படங்கள்.

ரிச்சர்ட் அட்டன்பரோவின் காந்தி என்னும் வாழ்க்கை வரலாற்றுப் படத்தோடு ஒப்பிடும் சிரமத்தைத் தமிழ் இயக்குநர்கள் யாரும் நமக்கு வைக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

22 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்