“ஒரு நல்ல விஷயத்தைப் பெற்ற பிறகு அதை இழப்பது சிறந்ததா? அல்லது அதை ஒருபோதும் பெறாமல் இருப்பது சிறந்ததா?” இது புகழ்பெற்ற எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலில் வரும் வரி. இந்த ஒற்றை வரியை மையப்படுத்திய அட்டகாசமான மென்காதல் திரைப்படம் தான் ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’. ஜெனிபர் ஸ்மித்தின் நாவலை அடிப்படையாகக் கொண்டு கேத்தி லவ்ஜாய் எழுதிய திரைக்கதையை வெகு நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் பிரிட்டிஷ் பெண் இயக்குநர் வெனெஸா காஸ்வெல்.
நியூயார்க்கிலிருந்து லண்டன் செல்லும் விமானத்தை வெறும் நான்கு நிமிடத் தாமதம் காரணமாகத் தற்செயலாகத் தவற விடுகிறாள் இளம் யுவதி ஹாட்லி. அதற்கடுத்து அவள் போகும் விமானப் பயணத்தில், ஜாக் என்னும் அந்நிய இளைஞனைத் தற்செயலாகச் சந்திக்கிறாள். லண்டனில் தரையிறங்கிய பின் விதியின் விருப்பத்தால் பிரிகின்றனர். சாத்தியமற்ற இவர்களின் இணைப்பை, காதலும் தற்செயல்களின் தொகுப்புகளும் சாத்தியமாக்கியதா என்பதே கதை.
அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்ட வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இருவேறு கதாபாத்திரங்கள், மின்காந்தப் புலத்தின் எதிர்முனைகள்போல், காதலின் அலையில் பொருந்துவதாக மோதி விலகும் உணர்வின் விளையாட்டைத் தேர்ச்சி மிக்க திரைக்கதையாக எழுதி இருப்பது முதல் வெற்றி. ஒரு காதல் கதையை வெறுமனே காதலர்களோடு முடித்து விடாமல் அவர்கள் பயணிக்கும் காரணங்களையும் அவர்கள் இயல்பாக மறைக்கும் குடும்பத்தின் பின்புலத்தையும் வெகு அழகாகப் பொருந்திப் போகும்படி எழுதியிருப்பதும் காட்சிப்படுத்தியதும் திரைப்படத்துக்குள் நாம் தொலைந்துபோக வழிவகுக்கிறது.
அதுவரையிலும் வாழ்க்கையை வெறும் தகவல்களாகவும் இலக்கங்களாகவும் புள்ளியியலாகவும் பார்த்தே பழகிய ஆலிவரை பண்படுத்துவதும் அதேபோல் தொலைக்க நேரிட்டாலும் ஆகச்சிறந்த ஒன்றை அடையும் சந்தோஷமே முக்கியம் என்பதை ஹாட்லிக்கு உணர்த்துவதும் காதலின் இயற்கையான இயக்க ஆற்றலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
ஒரு காட்சியில் புற்றுநோயால் மரணத்தின் விளிம்பிலிருக்கும் ஆலிவரின் தாய், தான் உயிருடன் இருக்கும்போதே பார்க்க விரும்பி நடத்தும் உறவினர்கள், நண்பர்கள் பங்குபெறும் அஞ்சலிக் கூட்டம் அதீத நெகிழ்வைத் தருகிறது. இயக்குநர் மணிரத்தினத்தின் ‘ஓகே கண்மணி’யில் வருவதுபோல், துயரங்கள் நிறைந்த வயதான தம்பதியின் வாழ்விலும் விடாப்பிடியான காதலைச் சொல்வதும் அழகு.
திரையில் வரும் காதல் ஜோடி இணைந்து விட வேண்டும் என்று, பார்வையாளர்களை ஏங்க வைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முதன்மைக் கதாபாத்திரங்களுக்கான நடிகர்களை தேர்வு செய்வது ஒரு தந்திரம். அதை ஆலிவராக வரும் பென் ஹார்டியும் ஹாட்லியாக வரும் ஹாலே லு ரிச்சர்ட்சன்னும் தாங்கள் சிறந்த தேர்வு என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.
இக்கதையில் விதி என்பதை அசரீரியாகக் காட்டாமல், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு கதாபாத்திரங்களாக, முதன்மைக் கதை மாந்தர்களை வழிநடத்துவோராகக் காட்டியிருப்பது முற்றிலும் புதுமை. கதையில் படத்திற்கு மேலும் வலுசேர்ப்பது, தொடக்கம் முதல் இறுதி வரை வரும் பால் சாண்டரிசனின் அட்டகாசமான பாடல்களும் பின்னணி இசையும். ஒரு மென்காதல் படத்தை இவ்வளவு விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் அதேநேரம் காதலின் உன்னதமான மென் உணர்வுகளாலும் குழைத்து திரையில் காட்ட முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இத்திரைப்படம்.
சராசரியாக ஒரு லட்சம் விமானப் பயணங்கள், அதில் 60 லட்சம் பயணிகளுக்கு மத்தியில், எங்கோ இரு நபர்களுக்கு இடையே நிகழும் அசாத்தியமான ரசாயன மாற்றத்தை வெகு சுவாரஸ்யமாகப் புதுமையான திரைமொழியில் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.
2018இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான ‘96’ உருவாக்கிய ஆச்சரியம், அது கையாண்ட கதையில் அல்ல. இத்தனை ஆயிரம் காதல் திரைப்படங்களுக்குப் பிறகும் ஒரு புத்தம் புதிய காதல் அனுபவத்தைச் சித்தரித்த விதத்தின்வழிச் சாத்தியமாக்கியதுதான். அதேபோல், மென்காதல் வகைமையில் எல்லாப் படங்களும் சொல்லப்பட்டுவிட்டன என்கிற முடிவில் இருக்கும்போது, ஒரு புது முயற்சி வந்து நம்மைக் கட்டிப்போடும்போது ஒட்டடை படிந்துகிடக்கும் நம் காதலைத் தூசி தட்ட வைத்துவிடுகிறது இந்த ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’.
- tottokv@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago