கோலிவுட் ஜங்ஷன்: ரோபாட்டாக ஹன்சிகா!

By செய்திப்பிரிவு

கடந்த 2010 இல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘எந்திரன்’ படம்தான், செயற்கை நுண்ணறிவு மூலம் சிந்தித்துச் செயல்படும் ரோபாட் ஒன்றைக் கதாபாத்திரமாகக் கொண்ட முதல் தமிழ்ப் படம். தற்போது ஹன்சிகா அதேபோன்ற ஒரு ரோபாட்டாக நடித்திருக்கும் தமிழ் இணையத் தொடர் ‘மை3’. தனது அசல் படைப்புகள் வரிசையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தயாரித்துள்ள இத்தொடர் இன்று வெளியாகிறது.

இதில் ஹன்சிகா கதாநாயகியாகவும் முகேன் நாயகனாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சாந்தனு, ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ‘ரொமான்டிக் காமெடி’யாக உருவாகியிருக்கும் இத்தொடரை, காதல் நகைச்சுவை படங்களை இயக்கிப் புகழ்பெற்ற ராஜேஷ்.எம் இயக்கியிருக்கிறார்.

முகேன், ஒரு பணக்காரத் தொழிலதிபர். இளம் ரோபாட்டிக் விஞ்ஞானியாக இருக்கும் சாந்தனு, தனது காதலியான ஹன்சிகாவின் தோற்றத்தில் ‘மை3’ என்கிற செயற்கை நுண்ணறிவு ரோபோவை உருவாக்குகிறார். அதை வாங்க முகேன் ஒப்பந்தம் போடுகிறார்.

அவருக்கு ரோபோவை ‘டெலிவரி’ செய்வதற்கு முன்னர் ஏற்படும் தொழில்நுட்பச் சிக்கலில் ‘மை3’ தாறுமாறாக நடந்துகொள்கிறது. இதை எதிர்பார்க்காத சாந்தனு, தற்காலிக ஏற்பாடாக, தனது காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்பி ரோபாட்டைப்போல் நடிக்கச் சொல்கிறார். அதன்பிறகு நடக்கும் அமளிகள்தான் இத்தொடரின் கதை.

மீண்டும் இணைந்த ராஜாக்கள்! - இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, தனது அப்பாவின் வழியைத் தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் முதல் படம் ‘மார்கழி திங்கள்’. இயக்குநர் சுசீந்திரன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பாரதிராஜாவும் இளையராஜாவும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு இளையராஜா இசையமைத் துள்ளார். கதாநாயகனாக ஷியாம் செல்வன், கதாநாயகிகளாக ரக் ஷனா, நக் ஷா சரண் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சுசீந்திரனும் முக்கியக் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் பன்முகக் கலைஞர் சிவகுமார், அவரது மகன் நடிகர் கார்த்தி, சீமான், பாரதிராஜா, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, லிங்குசாமி, திரு, தயாரிப்பாளர்கள் தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, தேனப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மனோஜ் பாரதிராஜாவையும் படக்குழுவையும் வாழ்த்தினார்கள். அப்பாவைப் போலவே தனது முதல் படத்தை, தெற்கத்திச் சீமையில் நடக்கும் மண் மணக்கும் கிராமியக் காதல் கதையாக இயக்கியிருப்பதாக, நிகழ்ச்சியில் பேசிய பலரும் குறிப்பிட்டுப் பாராட்டினர்.

ஒரு சித்தப்பாவின் ஓட்டம்! - சினிமாவில் ஈட்டிய பொருளை சினிமாவிலேயே முதலீடு செய்யும் நடிகர்களில் ஒருவர் சித்தார்த். அவரது தயாரிப்பு, நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் ‘சித்தா’. ‘டக்கர்’ படத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசனுடன் ‘இந்தியன் 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சித்தார்த், ‘சித்தா’ படத்தில் 10 வயது அண்ணன் மகளின் பாசமான சித்தப்பாவாக நடித்துள்ளார். ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தின் நாயகியாக ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ படப் புகழ் நிமிஷா சஜயன், தூய்மைப் பணியாளர் கதாபாத்திரம் ஏற்றுள்ளார்.

படம் குறித்து சித்தார்த் நம்மிடம் கூறும்போது, “‘கிட்னாப் த்ரில்லர்’ வகையில் உருவாகியிருக்கும் இப்படம், ஒரு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் எனக்குப் பெருமித உணர்வைக் கொடுத்துள்ளது. தென்னிந்திய சினிமா ரசிகர்களை இக்கதை, தங்களின் வாழ்க்கையில் நடப்பதுபோல் கட்டிப்போடும். இந்தப் படம் ‘மவுத் டாக்’ வழியாக மிகப்பெரிய வெற்றியை அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்