இயக்குநரின் குரல்: மனம் எனும் ‘கருப்புப் பெட்டி’

By ஆர்.சி.ஜெயந்தன்

எஸ்.பி.ஜனநாதனின் நீண்ட கால நண்பர் எஸ்.தாஸ் எழுதி, இயக்கியிருக்கும் படம் ‘கருப்புப் பெட்டி’. 42 நொடிகள் கொண்ட இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்? - எஸ்.பி.ஜனநாதன் என்னுடைய ஆத்ம நண்பர். அவருடனான நட்பே சினிமாவையும் என்னையும் இணைத்தது. ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ தொடங்கி ‘லாபம்’ வரை அவரது அனைத்துப் படங்களிலும் உடன் பயணித்திருக்கிறேன். பிறகு அவரது உதவியாளர் கல்யாண் இயக்கிய ‘பூலோகம்’, ‘அகிலன்’ படங்களில் பணிபுரிந்தேன். அந்தப் படங்களின் வழியாக ஜெயம் ரவியின் நட்பு கிடைத்தது.

அவருடைய சகோதரர் மோகன் ராஜாவின் ‘தனி ஒருவன்’, ‘வேலைக்காரன்’ படங்களில் பணி புரிந்தேன். இப்படி 30 ஆண்டுகள் நட்பின் வழியாக வரும் அழைப்புகளை ஏற்று, ஒரு படத்தின் முன் தயாரிப்பு, எழுத்து, இயக்கம், நிர்வாகத் தயாரிப்பு, பின் தயாரிப்பு என அனைத்துக் கலைப் பிரிவுகளிலும் பணிபுரிந்த அனுபவம்தான் எனது பலம். என்றாலும் எழுத்தும் இயக்கமுமே என களம்.

எஸ்.தாஸ்

‘கருப்புப் பெட்டி’ என்கிற தலைப்பு கதாபாத்திரங்களின் மனதைக் குறிப்பிடுகிறதா? - மிகச் சரி! கவியரசு கண்ணதாசன், ‘உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை; சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிக் கிடப்பது நீதி’ என்று எழுதினார். ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் தூங்கிக் கிடக்கும் மீதிதான் இந்தப் படம். மனித மனம் அத்தனை எளிதாக ‘என்கோட்’ செய்ய முடியாத கருப்புப் பெட்டி என்பதற்காகவே இந்தத் தலைப்பு.

என்ன கதை? - கதாநாயகன் ஒரு மாதச் சம்பளக்காரர். தானுண்டு தனது வேலையுண்டு என இருக்கும் பொறுப்பான குடும்பத் தலைவர். ஆனால், அவருக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கிறது. குறிப்பாக, அவர் தூக்கத்தில் காணும் கனவுகளை எழுதி வைக்கும் ஒரு விநோதப் பழக்கம். நாயகனின் மனைவி வழக்கறிஞருக்குப் படித்துவிட்டு, குடும்பத் தலைவியாக இருப்பவர். அவருக்கு கணவனின் நடத்தைமேல் சந்தேகம் வருகிறது.

இந்தச் சமயத்தில் கணவனின் டைரி அவர் கையில் சிக்க, கணவர் ஒரு பெண் பித்தர் என நம்புகிறார். அதற்கு ஏற்ப தற்செயலாகப் பல சம்பவங்கள் நடக்கின்றன. அவை உண்மையா - இல்லையா என்கிற குழப்பம் இருந்தாலும் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கிறார். இறுதியில் இவர்கள் இருவரும் பிரிந்தார்களா, சேர்ந்தார்களா என்பது கதை. பார்வையாளர்கள் எளிதாக தங்களை ‘கனெக்ட்’ செய்துகொள்ளும் கதை. நாயகன் படும் அவஸ்தைகள்தான் திரைக்கதை.

அவஸ்தையை அனுபவிக்கும் உங்கள் ஹீரோ பற்றி.. எனது ஹீரோவுக்கும் சினிமாவுக்கும் பெயரிலேயே தொடர்பு உண்டு. அவரது பெயர் கே.சி.பிரபாத். ஆமாம்! ‘பிரபாத்’ அந்தக் காலத்தில் பிராட்வேயில் ரொம்பவே பிரபலமானத் திரையரங்கம். இன்று அடுக்ககம் ஆகிவிட்டது. ‘பில்லா பாண்டி’ படத்தில் வில்லனாக அறிமுகமானவர்.

அதன்பிறகு முத்தையா இயக்கிய ‘தேவராட்டம்’, ‘புலிக்குத்திப் பாண்டி’ ஆகிய படங்களில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்காரகன்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மலையாளத்திலிருந்து தேவிகா வேணுவை தமிழில் கதாநாயகியாக அறிமுகம் செய்கிறோம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE