ஆறு மாதங்களுக்கு முன் நடந்துமுடிந்த கான் திரைப்பட விழா தனது 70-வது ஆண்டை நிறைவு செய்திருக்கிறது. கானில் திரையிடத் தேர்வானாலே அந்தப் படம் உலகம் முழுவதும் வரவேற்கப்படும் நிலையில், அங்கே பத்துப் பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விருதுகளில் ஏதாவது ஒன்றை வென்றாலும் அது உயரிய மதிப்பீடாகவும் கவுரமாகவும் கருதப்பட்டுவருகிறது.
அந்தப் பத்து விருதுகளில் தலைசிறந்த விருதாகக் கருதப்படுவது ‘பாம் தோர்’ என அழைக்கப்படும் தங்கப்பனை விருது. அதை இந்த ஆண்டு கானில் தட்டிவந்திருக்கும் ‘தி ஸ்கொயர்’ (The Square) என்ற ஸ்வீடிஷ் மொழிப் படத்தின் திரையிடலுடன், சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் கலைவாணர் அரங்கில் டிசம்பர் 14-ம் தேதி மாலை 6.15 மணிக்கு கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது 15-வது சென்னை சர்வதேசப் பட விழா.
08chrcj_Claire's Camera8 நாள் உற்சவம்
கோவா, திருவனந்தபுரம், மும்பை, கொல்கத்தா, டெல்லி எனப் புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் பல இருந்தாலும் சென்னை சர்வதேசப் பட விழாவுக்காக ஒவ்வொரு ஆண்டும் காத்திருக்கும் கண்கள் ஏராளம். டிசம்பர் 14, முதல் 21 தேதிவரை 8 நாட்கள், உலக அளவில் விருதுகளையும் பரிசுகளையும் வென்ற 50 நாடுகளின் 150 படங்களை இடைவிடாமல் ரசிக்க அழைக்கிறது இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.
சென்னை திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகும் உலகப் படங்களுக்குத் தணிக்கையிலிருந்து சிறப்பு விலக்கு அளிக்கிறது மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம். மாநில அரசோ திரைப்பட விழாவை நடத்துவதற்கான நிதியை வழங்கி சினிமா ரசனையை வளர்க்கத் தொடர்ந்து ஊக்கப்படுத்திவருகிறது. இந்த அமைப்புகளோடு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC), ‘தி இந்து’ தமிழ், ஆங்கில நாளிதழ்களுடன் இணைந்து ‘இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்’ இந்தப் படவிழாவை வெற்றிகரமாக நடத்திவருகிறது.
அருகருகே அரங்குகள், அறுசுவை உணவு
கடந்த ஆண்டு சென்னை அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வடபழனி ஆகிய வெவ்வேறு பகுதிகளில் இருந்த திரையரங்குகள் திரையிடலுக்காகத் தேர்வு செய்யப்பட்டதால் சினிமா ஆர்வலர்களுக்கு அலைச்சலாக அமைந்துவிட்டது. இதைக் கருத்தில்கொண்ட இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன், இம்முறை அண்ணா சாலையில் வெகு அருகருகே அமைந்துள்ள தேவி, தேவி பாலா, கேசினோ, அண்ணா, சத்யம், தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் சென்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய ஏழு திரையரங்குகளைத் தேர்வுசெய்து உறுதிப்படுத்தியிருக்கிறது.
அருகருகே இருக்கும் இந்தத் திரையரங்குகளுக்குக் குறைந்த அவகாசத்தில் நடந்தே சென்று ஆர்லர்கள் தாம் தேர்வு செய்துகொண்ட படங்களைத் தவறவிடாமல் பார்க்கலாம். இதனால் இந்த ஆண்டு தேவையற்ற அலைச்சலுக்கு அவசியமில்லை என்பதோடு, சைவ, அசைவ உணவகங்களுக்குப் (மெஸ்) பெயர்பெற்ற திருவல்லிக்கேணியும் அருகில் இருப்பதும் சினிமா ஆர்வலர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
ஆறு பிரிவுகள் 150 படங்கள்
இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் செயலாளரும், 15-வது சென்னை சர்வதேசப் படவிழாவின் இயக்குநருமான தங்கராஜிடம் கேட்டபோது “ ‘உலக சினிமா’ (World Cinema), ‘திரை தேசம்’ (Country Focus), ‘காலம் மறக்காத படங்கள்’ (Retrospective), ‘தற்காலத் திறமைகள்- ஜெர்மானியப் படங்கள்’ (Contemporary German Films), ‘இந்தியன் பனோரமா’(Indian Panorama), தமிழ்ப் படப் போட்டி’(Tamil Film Competition) ஆகிய ஆறு பிரிவுகளில் சுமார் 150 திரைப்படங்களைத் திரையிட இருக்கிறோம்.
ஜெர்மன் நாட்டு சினிமாவில் தற்போது கவனிக்கத்தக்க திறமையாளர்களாக இருக்கும் ஆறு இயக்குநர்களின் படங்களை கதே இன்ஸ்டியூட் தேர்வு (Goethe Institute) தேர்வுசெய்து கொடுத்திருக்கிறது. திரைதேசம் பிரிவில் இம்முறை எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக தென்கொரிய நாட்டின் ஆறு சிறந்த படங்கள் திரையிடப்படுகின்றன. அவற்றில் உலகப்புகழ் இயக்குநர் கிம் கி டுக்கின் ‘தி நெட்’ (THE NET) படமும் ஒன்று. மற்றொரு முக்கிய கொரிய இயக்குநரான ஹாங் சாங்-சூவின் (Hong Sang-soo) இரண்டு படங்கள் திரையிடப்படுகின்றன. ‘த டே ஆஃப்டர்’ (The Day After), ‘க்ளேர்ஸ் கேமரா’ (‘Claire's Camera) ஆகிய இரண்டு படங்களுமே நடந்துமுடிந்த கான் படவிழாவில் போட்டிப் பிரிவிலும். சிறப்புத் திரையிடலிலும் இடம்பிடித்த படங்கள் இவை.
‘காலம் மறக்காத படங்கள்’ பிரிவில் ஜெர்மானிய இயக்குநர் கிறிஸ்டியன் ச்சோ சொவ்வின் (Christian Schwo Chow) மாஸ்டர் பீஸ் என்று கருதப்படும் நான்கு படங்கள் திரையிடப்படவுள்ளன. அவற்றில் புகழ்பெற்ற ஜெர்மானிய பெண்ணிய ஓவியர் பவுலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘பவுலா’ ரசிகர்களைக் கண்டிப்பாக கவரும்” என்றார்.
08chrcj_THANGARAJ தங்கராஜ்இதுதவிர ‘ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஷோகேஸ்’ என்ற துணைப் பிரிவின் கீழ் ஆஸ்திரேலியாவின் சென்னை தூதரகம் தேர்ந்தெடுத்து அளித்துள்ள நான்கு படங்கள், டெல்லியில் உள்ள பிரெஞ்சுத் தூதரகம் தேர்வுசெய்து அளித்துள்ள மூன்று படங்கள் திரையிடப்பட இருக்கின்றன.
கேஸினோவில் முன்பதிவு
இந்தப் படங்கள் நீங்கலாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு அவர் நடித்த இரண்டு படங்கள், அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்கள் இயக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட டிப்ளமோ படங்களும் சில தனியார் திரைப்படக் பள்ளி மாணவர்கள் இயக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட குறும்படங்களும் திரையிடப்பட இருக்கின்றன. எட்டு நாள் திரைப்பட விழாவில் பங்கேற்க கேசினோ திரையரங்கில் ரூபாய் 800 செலுத்தி நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். மாணவர்கள், உதவி இயக்குநர்கள், மூத்த குடிமக்களுக்குப் பதிவுக் கட்டணம் ரூபாய் 500 மட்டுமே.
பதிவு செய்தவுடன் அங்கேயே படவிழா அடையாள அட்டை, படங்களைக் குறித்த விளக்கப் புத்தகம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். www.chennaifilmfest.com/icaf.in என்ற இணையதளம் வழியாகவும் பதிவு செய்துகொள்ளலாம். எந்தத் திரையரங்கில் எந்தப் படத்தைத் தேர்வுசெய்து பார்க்கலாம் என்று முதல்நாளே தெரிந்துகொள்ளவும், படங்களின் கதைச் சுருக்கங்கள், படங்கள் பற்றிய சுவாரசியமான பின்னணித் தகவல்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளவும் இந்து தமிழ் நாளிதழின் இணையதளமான www.tamil.thehindu.com –க்கு வருகைதந்து திரைப்படவிழா சிறப்புப் பக்கங்களில் காணலாம்.
08chrcj_THE SQUARE Posterrightதமிழ்ப் படங்களுக்கான போட்டியில் கலந்துகொள்ளும் படங்கள் அட்டோபர் 31-க்கு முன்பாக தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியின் கீழ் கலந்துகொள்கின்றன. இந்தப் பிரிவின் கீழ் சிறந்த படம், சிறந்த இயக்குநர், ஸ்பெஷல் மென்ஷன், யூத் ஐக்கான் உட்பட ஆறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. மொத்த பரிசுத் தொகை ஏழு லட்சம் ரூபாய். போட்டிக்கு 22 படங்கள் வந்துள்ளன. இவற்றில் தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும் 12 படங்கள் இறுதிப் போட்டியில் மோதும்.
1. அறம்
2. இப்படை வெல்லும்
3. இவன் தந்திரன்
4. கடுகு
5. கனவு வாரியம்
6. லைட் மேன்
7. மனுஷங்கடா
8. மாநகரம்
9. மாவீரன் கிட்டு
10. மகளிர் மட்டும்
11. ஒரு கிடாயின் கருணை மனு
12. ஒரு குப்பைக் கதை
13. புரியாத புதிர்
14. பீச்சாங்கை
15. ரங்கூன்
16. எட்டு தோட்டாக்கள்
17. தங்கரதம்
18. தரமணி
19. துப்பறிவாளன்
20. உயிர்க்கொடி
21. குரங்கு பொம்மை
22. விக்ரம் வேதா
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago