செ
ன்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் 15-வது சென்னை சர்வதேசப் பட விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன் ‘தி இந்து’, தமிழ், ஆங்கில நாளிதழ்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்தப் படவிழாவில் ஐம்பது நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 148 உலக சினிமாக்கள் திரையிடப்பட்டன.
புத்துணர்வு அளித்த படத் தேர்வு
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2016, 2017 ஆண்டுகளில் தயாரான புதிய உலகப் படங்களின் தேர்வு புத்துணர்வு அளித்ததாகப் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். 8 நாட்களில் சளைக்காமல் 25 படங்கள் வரை பார்த்த பார்வையாளர்களிடம் பேசியபோது, தாங்கள் பார்த்த எண்ணிக்கையில் ஐந்து முதல் ஏழு படங்கள் மட்டுமே பொறுமையைச் சோதித்ததாகக் குறிப்பிடுகிறார்கள். மேலும் “ ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இந்தியத் தயாரிப்பான ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’, கான் பட விழாவில் விருதுபெற்ற, ‘லவ் லெஸ்’, திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் பார்வையாளர்களைக் கவர்ந்த ‘யங் கார்ல் மார்க்ஸ்’ ஆகிய படங்களை பெரிதும் எதிர்பார்த்ததாகவும் அவை தேர்வுப் பட்டியலில் இல்லாவிட்டாலும் இன்னும் ஆழமும் கலையம்சமும் கூடிய படங்கள் இம்முறை அதிகம்” என்கிறார்கள்.
ஐநூறு மீட்டர் சுற்றளவில்
திரையிடலுக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த ஐந்து திரையரங்குகளில் இருந்த ஆறு திரைகளில் நான்கு திரைகள் அண்ணா சாலையில் ஐநூறு மீட்டர் சுற்றளவில் அமைந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்த நான்கு திரையரங்குகளில் மட்டும் இரண்டாயிரம் பார்வையாளர்கள் குவிந்தனர். முறைப்படி பதிவு செய்துகொண்ட இவர்களில் 20 வயதுமுதல் 35 வயதுக்கு உட்பட இளம் பார்வையாளர்கள் இம்முறை அதிகமாக இருந்தனர்.
இவர்களில் 250 திரைப்பட உதவி இயக்குநர்களும் தமிழகம் முழுவதிலிருமிந்து வந்திருந்த காட்சித் தகவலியல் பயிலும் 200 மாணவர்களும் அடங்குவர். உதவி இயக்குநர்களுக்கும் ஊடகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் பதிவுக் கட்டணமான 300 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டது விழாக் குழு.
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் இணையதளம் தவறவிடக் கூடாத திரைப்படங்களைப் பற்றிய தினசரி பதிவுகளைப் பதிவேற்றியது. அதைப் படித்த பார்வையாளர்கள் படங்களைத் தேர்வு செய்வதில் அதிகம் ஆர்வம் காட்டினார்கள். திரைவிழா நடந்துவந்த ஐந்து திரையரங்குகளிலும் சென்னையின் டி.ஜி. வைஷ்ணவா கல்லூரியின் காட்சித் தகவலியல் மாணவர்கள், தன்னார்வலர்களாகச் சிறப்பாகப் பணியாற்றினார்கள்.
நிறைவுவிழா
திரை விழாவின் 8-ம் நாளான டிசம்பர் 21 அன்று நிறைவுவிழா நடந்தது. நடிகர் விஜய் சேதுபதி, பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இன்டோ - சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனின் தலைவர் கண்ணனின் வரவேற்புரையுடன் தொடங்கிய விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஸ்வைன் (Swain) கலந்துகொண்டார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன் முதல் சென்னை சர்வதேசப் பட விழாவை 2003-ல் தொடங்கக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர். அவர் பேசும்போது “2003-ம் ஆண்டு ஐ.சி.எஃப்-க்கு வெள்ளிவிழா ஆண்டு. அப்போது வெள்ளிவிழாவை அர்த்தமுள்ளதாகவும் சிறப்பாகவும் கொண்டாட ஏன் நாம் சென்னைக்கு என்று ஒரு சர்வதேசப் பட விழாவை நடத்தக் கூடாது என்று கேட்டேன்.
மிகுந்த சிரமங்களுக்கு இடையில் எனது அலுவலகத்தின் சிறிய அறையில் அன்று திரைப்பட விழா அலுவலகம் இயங்கியது. மிகச் சிறிய அளவில் 2003–ல் 17 நாடுகளிலிருந்து 63 படங்கள் ராயப்பேட்டையில் இருந்த பைலட், தென்னிய வர்த்தக சபை ஆகிய இரு திரையங்குகள் என்று தொடங்கியதுதான் இன்று ஆலமரமாக வளர்ந்து சென்னையின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வாக மாறியிருக்கிறது. இந்த விழாவுக்குப் பார்வையாளர்களாக வருபவர்கள் உயர்தரமான ரசனை கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்று பாராட்டினார்.
விருது வென்ற படங்கள்
தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவு இந்த ஆண்டு ஆச்சரியமான ஒன்றாகவே அமைந்தது. இந்த ஆண்டு 22 படங்கள் போட்டிக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அதிலிருந்து 12 படங்கள் போட்டிப் பிரிவுக்குத் தேர்வுசெய்யப்பட்டன. எம்.ஜி.ஆர். அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் டிப்ளமோ படங்களுக்குத் தனிப்போட்டி நடத்தப்பட்டது. போட்டிப் பிரிவுக்கான ஜூரிகளாக பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கன், மனோபாலா, வெற்றிமாறன், சுகாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலர் பொறுப்பு வகித்தனர். போட்டிப் பிரிவில் ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி சர்டிபிகேட் விருது - ‘குரங்கு பொம்மை’ படத்தில் சிறந்த அசலான நடிப்பை வழங்கியதற்காக பாரதிராஜாவுக்கு வழங்கப்பட்டது.
பாரதிராஜாவின் விருதை பாக்யராஜ் பெற்றுக்கொண்டார். சிறந்த அறிமுக இயக்குநருக்கான – ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது ‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கணகராஜுக்கும் இரண்டாவது சிறந்த படத்துக்கான விருது ‘விக்ரம் வேதா’ படத் தயாரிப்பாளர் சசிகாந்த், அதன் இயக்குநர்கள் புஷ்கர்-காயத்ரி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த படத்துக்கான விருது ‘ஒரு கிடாயின் கருணை மனு’ தட்டிச் சென்றது.
தரமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்யும் அர்த்தமுள்ள சினிமாக்களில் நடிக்கும் அதே நேரம் வணிக சினிமாக்களிலும் நடித்து இரண்டுவித சினிமாக்களையும் தனது அணுகுமுறையால் தொடர்ந்து இணைக்க முயலும் விஜய் சேதுபதிக்கு அமிதாப் பச்சன் ‘யூத் ஐகான்’ விருது வழங்கப்பட்டது.
உலகப் படங்களுக்கான போட்டிப் பிரிவை உருவாக்குவது, இந்திய, உலக அளவிலான முக்கிய திரை ஆளுமைகளை அழைத்து வருவது, புறக்கணிக்கப்படும் பல முற்போக்குப் படங்களுக்கு இடமளிப்பது என சென்னை சர்வதேசப் பட விழா அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago