கணவனின் துரோகத்தைப் பொறுக்க முடியாமல் தூக் கில் தொங்கும் நிறைமாத கர்ப்பிணி ஒருவர், இறக்கும்போதே ஒரு பெண் குழந்தையைப் பிரசவிக்கிறார். அந்தக் குழந்தையைத் தாய்போல் வளர்க்கிறான் அவளது அண் ணன் கொடிவீரன் (சசிகுமார்). சாமியாடியான அவன் ஊர் மக்களால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுகிறான்.
அந்த ஊரில் முறைகேடான வகையில் தொழில் செய்து சம்பாதிக்கும் அதிகாரம் என்பவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த முயல்கிறார் நேர்மையான ஆர்டிஓ அதிகாரியான விதார்த். அதிகாரத்தின் மைத்துனரான பசுபதி, தன் தங்கைக்காகவும் (பூர்ணா), தங்கை கணவருக்காகவும் பல கொலைகள் செய்துவிட்டு ஆயுள் தண்டனை பெற்றவர். ‘நன்னடத்தை’ விதியின் கீழ் வெளியே வரும் அவர், விதார்த்துக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்.
சசிகுமாரின் தங்கையை விதார்த் மணக்கிறார். கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தனது மாப்பிள்ளையின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறார் சசிகுமார். அவரையும் கொல்ல திட்டமிடுகிறார் பசுபதி.
இதற்கிடையில், விதார்த்தின் தங்கையான மஹிமா நம்பியார், சசிகுமாரை காதலிக்கிறார். நாயகனின் தங்கைப் பாசமும், வில்லனின் தங்கைப் பாசமும் ஆயுதங்களால் சரமாரியாக மோதிக்கொள்கிறது. எது ஜெயிக்கிறது என்பதை பாசமும், வன்முறை யும் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் முத்தையா.
முத்தையாவும், சசிகுமாரும் இணைந்தால் எப்படி இருக்க வேண்டுமோ, அந்த எதிர்பார்ப்பைக் கச்சிதமாக நிறைவு செய்கிறது படம். நாயகன் யாராலும் வெல்லப்பட முடியாத அசாத்திய வீரனாகவும், குடும் பப் பெண்களைப் பாதுகாக்கும் அரணாகவும், ஊருக்கு நல்லது செய்பவராகவும் இருப்பதோடு, ஒருபடி மேலே போய் ஊர் மக்களால் கடவுளுக்கு இணையானவனாகவும் மதிக்கப்படுகிறான். வழக்கமாக, நாயகனை இயக் கும் சக்தியாக அவனது குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இருப்பார்கள்.
‘குட்டிப்புலி’யில் அம்மா, ‘கொம்பன்’ படத்தில் மனைவி, ‘மருது’வில் பாட்டி என்றால் இதில் தங்கை.
மதுரை வட்டார கிராமக் கோயில் திருவிழாக்கள், சுப, துக்க நிகழ்வுகள் ஆகியவற்றின் சித்தரிப்பு நேர்த்தியாக, விரிவாக, வலுவாக இடம்பெற்றுள் ளன.
ஒரு குறிப்பிட்ட வட்டாரம், சமூகத்தின் வாழ்க்கை முறையை பிசகின்றி பதிவு செய்வதை முத்தையா வழக்கம்போல சிறப்பாகச் செய்கிறார். ஆனால், முந்தைய படங்களுக்கும் இதற் கும் எந்த வித்தியாசமும் இல்லை.
சென்டிமென்ட், ஆக்சன் இரண்டிலும் கலக்குகிறார் சசிகுமார். சில காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். ஆனால், அவரது அறிமுகக் காட்சிகள், வசனங்கள் ஆகியவை மிகவும் செயற்கையாக இருக்கின்றன. மைத்துனருக்காக அவர் பேசுகிற சென்டிமென்ட் வசனங்களை, பைனான்சியர் அன்புச்செழியனைப் பார்த்துப் பேசுவதாக எண்ணி ரசிக்கிறார்கள் ரசிகர்கள். (சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட சசிகுமார் மைத்துனர் அசோக்குமாருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுதான் படம் தொடங்குகிறது.)
சாமியாடியான சசிகுமார், காவி, நீலம், பச்சை வண்ண வேட்டி, அதற்குப் பொருத்தமாக சட்டை, நெற்றி நிறைய விபூதி, தலைநிறைய முடி, முகம் முழுக்க தாடியுடன் வலம் வருவதெல்லாம் ஓ.கே. ஆனால், பொறியியல் கல்லூரி மாணவி (மஹிமா) அவரைக் காதலிப்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தங்கையாக வருகிற சனுஷா தான் படத்தின் உண்மையான கதாநாயகி. அழகாக இருக்கிறார். நடிக்கவும் செய்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் அண்ணனுக்காக அவர் பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் வெறுப்பேற்றுகின்றன. மஹிமா நம்பியாரின் உடைகள், ஒப்பனை கதைக்களத்துடன் பொருந்தவில்லை. அவருக்கு நடிப்பதற்கும் பெரிய வாய்ப்பில்லை. பூர்ணா ஒரு நெகடிவ் பாத்திரத்தை ஏற்று, அதற்காக மொட்டை போட்டுக்கொண்ட துணிச்சலுக்காக பாராட்டலாம். நடிப்புத் திறனை வெளிப்படுத்தக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
வலுவற்ற வேடத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார் விதார்த். பிரதான வில்லன் பசுபதி, கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். தங்கையின் நிலையைப் பார்த்து வருந்தும் காட்சிகளில் உணர்ச்சிகளை மிகையின்றி வெளிப்படுத்தி, தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நிரூபிக்கிறார்.
‘மதயானைக்கூட்டம்’ இயக்கு நர் விக்ரம் சுகுமாறனுக்கு இடையிலேயே திருந்திவிடுகிற வில் லன் கதாபாத்திரம். நட்புக்காக தலைகாட்டிப் போகவேண்டிய கதாபாத்திரத்தை படம் முழுக்க நீட்டித்து, வலியத் திணிக்கப்பட்ட கதாபாத்திரமாக மாற்றிவிட்டார்கள். பாலசரவணனின் நகைச்சுவை எடுபடுகிறது. சசிகுமாருக்கு தாய்மாமனாக வருகிற புதுமுகமும் சிரிக்க வைக்கிறார்.
படத்தின் பலம் ஒளிப்பதிவு. குறிப்பாக ஏழைகாத்த காளியம்மன் கோயில் திருவிழா, மீன்பிடித் திருவிழா போன்ற மதுரை வட்டார நிகழ்வுகளை கச்சிதமாகப் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ஆர்.கதிர். இறுதி சண்டைக் காட்சியின் தாக்கம் சிறப்பான ஒளிப்பதிவால் அதிகரிக்கிறது.
பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் என்.ஆர்.ரகுநந்தன், பாடலில் அதே தரத்தைத் தரவில்லை. ரசிகர்கள் எத்தனை முறைதான் எழுந்து போவது?
நிறைமாத கர்ப்பணி தூக்கில் தொங்குவது, அந்த நிலையிலேயே குழந்தை பிரசவிப்பது தான் முதல் காட்சி. ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதை தவிர இதற்கு வேறு நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘அவனை வெட்டு’, ‘அவள் தாலியை அறு’ என்பதுபோன்ற வசனங்களை பெண்களை வைத்தே பேச வைத்திருப்பதும், அதுசம்பந்தமான சடங்குகளை அப்படியே காட்டுவதும் குரூரம். ஆட்டை வெட்டுவது, பெண்ணுக்கு மொட்டையடிப்பது போன்றவற்றை விலாவாரிவாக காண்பிக்கும் காட்சிகளும், அதுதொடர்பான வசனங்களும் நெளியவைக்கின் றன.
தேர்ந்தெடுத்த கதை, களம் போல படத்திலும் புதிதாக ஒன்றும் இல்லாவிட்டாலும், முடிந்தவரை விறுவிறுப்பாக படத்தை நகர்த்தியுள்ளனர்.
நைந்துபோன பழைய கொடி.. விறுவிறுப்பான வீரன்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago