ஓடிடி உலகம் | அவன் பெயர் பத்மினி!

By டோட்டோ

ஒரு தனி நபருக்குச் சூட்டப்படும் வீட்டுப்பெயர், செல்லப்பெயர் ஆகியவற்றைக் கடந்து, பகடியாக வைக்கப்படும் ஒரு பட்டப்பெயர், காலமெல்லாம் நிலைத்துவிடுவதுண்டு. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி யுள்ள ‘பத்மினி’ என்கிற இந்தப் படத்தில் பட்டப் பெயருக்கு ஒரு பெரிய பங்கிருக்கிறது.

மூத்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவரின் திருமணத்தில் சிக்கல் ஒன்று ஏற்படுகிறது. அதன் வழியே அவர் பெறும் பட்டப் பெயர், அதன் தொடர்ச்சியாக வரும் தொல்லைகளை முழுக்க முழுக்க நகைச்சுவையில் அமிழ்த்தித் தந்திருக்கிறார்கள் இப்படத்துக் கான திரைக்கதையை இணைந்து எழுதியிருக்கும் கதாசிரியர் தீபு பிரதீப் - இயக்குநர் சென்ன கவுடா ஆகிய இருவரும்.

தீபு பிரதீப், ‘தி ப்ரீஸ்ட்’, ‘குஞ்ஞி ராமாயணம்’ ஆகிய படங்களின் திரைக்கதை ஆசிரியர். படத்தை இயக்கியிருக்கும் சென்ன கவுடா, தேசிய விருது பெற்ற ‘திங்களாழ்ச்ச நிச்சயம்’ படத்தை இயக்கியவர். முதல் முறையாக ‘பத்மினி’ படத்தின் மூலம் இணைந் துள்ள இவர்கள் இருவருமே உத்தரவாதமான நகைச்சுவைக்குப் புகழ்பெற்றவர்கள். அதனால் ‘பத்மினி’யில் இரட்டிப்பு நகைச்சுவை ரகளையாக வழிந்தோடத் தொய்வில்லாமல் படம் நகர்கிறது. தமிழில் வெளியான ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் இடம்பெற்றது போல், பிரீமியர் பத்மினி கார் ஒன்றையும் இதில் கதாபாத்திரமாகச் சித்திரித்திருக்கிறார்கள்.

குஞ்சாக்கோ கோபன் ‘பத்மினி’யாக நடிக்கும் என்று படப் போஸ்டரில் போட்டுப் பகடியைத் தொடங்கிவிடுகிறார்கள். திரைப்படத்தின் டைட்டில் போடும்போது, ஒரு சிறிய ஊரில் நடக்கும் திருமணத்தை ஒரு காட்சிகூடக் காட்டாமல் வசனங்கள் வழியாகவே சித்திரித்திருப்பது புதுமை.
36 வயது பள்ளி ஆசிரியரான கவிஞர் ரமேஷ், கல்லூரி ஆசிரியை பத்மினி, வழக்கறிஞர் தேவி, பஞ்சு மெத்தை வியாபாரி ஜெயன் ஆகியோர் திருமணத்துக்கு வரன் தேடும் திருமண முயற்சிகள் இணையும் புள்ளிகளே திரைக்கதை. அதைத் தொடர்ச்சியாகவும் சுவாரசியமாகவும் இறுதிவரை கையாண்டிருக்கிறார்கள். அதேபோல் வெவ்வேறு நிறங்களும் சாயல்களும் கொண்ட இக்கதாபாத்திரங்களால் கதைப் போக் கில் சுவாரசியம் கூடிக்கொண்டே செல்கிறது. கதையின் முதல் 10 நிமிடங்களில் காட்டப்படும் எல்லா விஷயங்களும் கதையின் இறுதியில் வந்து ஒன்று சேர்வது திரைக்கதையின் அழகு.

‘நாயாட்டு’, ‘ன்னா தான் கேஸு கொடு’ என தனது ஒவ்வொரு படத்துக்கும் கதைக் களம், கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பில் முதிர்ச்சியையும் வித்தியாசத்தையும் காட்டி வரும் குஞ்சாக்கோ கோபன், இக்கதைக்குப் பொருத்தமானத் தேர்வாக நம்பவைக்கிறார். வசனங்களிலும் முகபாவங்களிலும் ரசிக்க வைக்கும் அபர்ணா பாலமுரளி, சிறிய கதாபாத்திரமென்றாலும் மின்னலாகக் கலக்கும் வின்ஸி அலோஷியஸ், இறுக்கமாக வந்து போகும் மடோன்னா செபாஸ்டியன் என அனைவரது பங்களிப்பிலும் நேர்த்தி மிளிர்கிறது. குறிப்பாக, மெத்தைக் கடை முதலாளி ஜெயனாக வரும் சஜின் செருக்கயிலின் விளம்பர ஐடியாக்கள், அவரின் உதவியாளருடனான உரையாடல்கள், அவர் சந்திக்கும் ஏமாற்றங்கள் என அவரது நகைச்சுவை நடிப்புப் பாணி படத்துக்குப் பெரும் பங்களிப்பைத் தந்துள்ளது.

தொழில்நுட்ப அம்சங்கள் கதைக் களத்துக்கு அணி செய்துள்ள இப்படம், ‘தமாஷா’, ‘தண்ணீர் மத்தன் தினங்கள்’, ‘ஜோ & ஜோ’, ‘நெய்மார்’ ஆகியவற்றின் வரிசையில் முத்திரை பதித்திருக்கிறது. ஒரு விசிட்டிங் கார்டின் பின்புறம் எழுதிவிடக்கூடிய அளவேயான கதைகளைக் கொண்டு, மலையாளப் படவுலகில் தொடர்ந்து வெளிவரும் மென் நகைச்சுவை திரைப்படங்கள் ஒரு சமகால ஆச்சர்யம்! பத்மினி, குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஏதுவான படம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE