திரை விமர்சனம்: சத்யா

By இந்து டாக்கீஸ் குழு

ஆஸ்திரேலியாவில் பணிபுரிகிறார் சத்யா (சிபிராஜ்). நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது முன்னாள் காதலியான ரம்யா நம்பீசனிடம் இருந்து உதவி கேட்டு போன் வருகிறது. இதற்காக சென்னை திரும்புகிறார் சிபிராஜ். ‘தன் குழந்தை காணாமல்போய் 2 மாதங்கள் ஆகிவிட்டன, அதை உன்னால்தான் கண்டுபிடித்துத் தரமுடியும்’ என்று கதறுகிறார் ரம்யா. சிபி ஊருக்கு வந்து விசாரித்ததில் காவல் துறை, ப்ளே ஸ்கூல் தொடங்கி, ரம்யாவின் கணவர் வரை அப்படி ஒரு குழந்தையே இல்லை எனவும், ரம்யா கற்பனையில் பேசுவதாகவும் சொல்கிறார்கள். ஒருகட்டத்தில் ரம்யாவும் தற்கொலை செய்துகொள்கிறார். அந்தப் புதிர்களுக்குள் ஒளிந்துள்ள சிக்கலான முடிச்சுகளை சிபிராஜ் எப்படி அவிழ்க்கிறார் என்பதுதான் ‘சத்யா’ படத்தின் கதை.

தெலுங்கில் வந்து வெற்றிபெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக் இது. அந்தப் படத்தைப் பிசிறு தட்டாமல் அழகாகப் படமாக்கியுள்ளனர். படம் தொடங்கியது முதலே விறுவிறுப்பும் த்ரில்லிங்கும் படம் பார்ப்பவர்களை ஆக்கிரமிக்கின்றன. அதை கடைசிவரை அப்படியே கொண்டு சென்றிருக்கும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு பூங்கொத்து!

காணாமல்போனதாக சொல்லப்படும் குழந்தை உண்மையில் இருந்ததா, இல்லையா? என்பதுதான் படத்தின் பிரதான புதிர். அப்படி ஒரு குழந்தை இருந்ததைக் கண்டுபிடித்தால்தான் அதை யார், எதற்காக கடத்தியிருப்பார்கள் என்ற விடையை கண்டுபிடிக்க முடியும். குழப்பம் ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற படங்களில், திரைக்கதையில் கொஞ்சம் சொதப்பினாலும் குழப்பங்கள் தொற்றிநிற்கும். ஆனால், அதற்கு இடம் தராமல் திரைக்கதையும், காட்சிப்படுத்துதலும் கச்சிதம்.

‘வளையோசை கலகல’ என பழைய ‘சத்யா’ படப் பாடல் வானொலியில் கேட்பதுபோல எதேச்சையாகக் காட்டுவதில் தொடங்கி குட்டிக் குட்டி காட்சிகளில்கூட இயக்குநர் கவனம் காட்டியிருக்கிறார். படத்தில் அடுத்தடுத்து வரும் சில திருப்பங்களும் திரைக்கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் புகுத்தப்பட்டதாகவே தெரிகிறது. ஆனால், குழந்தை யாரிடம் இருந்தது, எதற்காக இருந்தது, அது எப்படி பிறந்தது என பல இடங்களில் எந்த லாஜிக்குமே இல்லை. ஆனாலும், வேகமான திரைக்கதை காட்சிகள் இவற்றை நேர் செய்கின்றன.

சிபிராஜுக்கு இந்தப் படம் நிச்சயம் பெயர் பெற்றுத் தரும். தோற்றத்திலும் ரொம்ப மாறியிருக்கிறார். கதைக்கேற்ப நடை, உடை, பாவனையிலும் நிறைவான நடிப்பை வழங்குகிறார். நாயகியாக வரும் ரம்யா நம்பீசன் காதல் காட்சிகளில் கலகலப்பான பேர்வழியாகவும், குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் ஆற்றாமையால் திரியும் அபலைப் பெண்ணாகவும் பாத்திரம் உணர்ந்து நடிக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக சற்று நேரமே வந்தாலும், முக்கியக் கதாபாத்திரத்தில் வருகிறார் வரலட்சுமி சரத்குமார். நல்ல போலீஸாக வரும் ஆனந்தராஜ் அவ்வப்போது சிரிக்கவும் வைக்கிறார். விசாரணைக்குச் செல்லும் இடமெல்லாம் செல்ஃபி எடுத்துக் கொள்வது நச்! நகைச்சுவை, குணச்சித்திர பாத்திரத்தில் வரும் சதீஷ் கவனம் பெறுகிறார். யோகி பாபுவின் வழக்கமான நையாண்டி சிரிக்க வைக்கிறது.

கார்த்திக் கிருஷ்ணாவின் பஞ்ச், குசும்பு வசனங்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. ‘‘மனசு சொல்றத கேட்கவா? மூளை சொல்றத கேட்கவா?’’ என சிபிராஜ் கேட்க, ‘‘மனசு சொல்றத கேளு சார். மனசு என்னிக்கும் துரோகம் செய்யாது’’ என சதீஷ் சொல்வது, ‘‘தப்புன்னு தெரிஞ்சா என்னை நானே மன்னிக்க மாட்டேன்’’ என ஆனந்தராஜ் கூறுவது, சிபிராஜை பிரியும்போது, ‘‘உன்னை வேணும்னு சொல்லுற தைரியம் இல்ல, வேண்டாம்னு சொல்லுற சக்தியும் இல்ல’’ என்று ரம்யா கூறுவது ஆகிய இடங்களில் வசனங்கள் வசீகரிக்கின்றன.

த்ரில்லிங் படத்துக்கு ஏற்ப பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் சைமன் கே.சிங். ‘யவ்வனா’, ‘சாங்கு’ பாடல்கள் கேட்கும்படி உள்ளன. அரண்மனை பழனியின் ஒளிப்பதிவு பளிச்சென இருக்கிறது. கவுதம் ரவிச்சந்திரனின் படத்தொகுப்பு படத்துக்கு பலம் சேர்க்கிறது.

இயக்குநரிடம் ஒரே ஒரு கேள்வி.. ‘தமிழ் கலாச்சாரத்தையே உடைத்துதான் த்ரில்லிங் கொடுக்க வேண்டுமா?” மற்றபடி, வேகத்தடை இல்லாத விறுவிறுப்பான, துள்ளியோடுகிற திரைக்கதையால், பல இடங்களில் ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு வரும் ‘சத்யா’ - சீறிப்பாயும் த்ரில்லர் குதிரை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்