இ
ரண்டாயிரத்துக்குப் பிறகு உருவான மலையாள சினிமாவின் புதிய அலை இயக்குநர்களுள் ஒருவர் ஆஷிக் அபு. சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்‘மாயாநதி’.
22 ஃபிமேல் கோட்டயம், சால்ட் அண்ட் பெப்பர், இடுக்கி கோல்டு, டா தடியா என வித்தியாசமான படங்களை எடுத்த ஆஷிக், இதில் காதலை மையமாக வைத்துள்ளார். ஆனால் இது ‘பிரேமம்’ போன்ற பைங்கிளிக் காதல் அல்ல. கல்லூரிக் காதல் முறிவுக்குப் பிறகு பிழைப்புக்கான தேடலிலிருக்கும் இருவரிடையே மீண்டும் துளிர்க்கும் காதலின் கதை. இந்தக் காதலின் வழியாகச் சமகால அரசியலையும் ஒரு சாரமாக எடுத்துள்ளது படம்.
கங்கை போன்ற ஒரு ஜீவநதி, நம்பிக்கைகளால், சமகால அரசியலால் பாதிக்கப்படுவதைப் போல் வாழ்க்கை என்னும் ஜீவநதியும் புறக் காரணங்களால் பாதிக்கப்படுகிறது. அந்தச் சங்கடங்களைச் சொல்லும் படம் இது எனலாம். மாத்தா-அபர்ணா ஆகிய இரு பாத்திரங்களைச் சுற்றித்தான் கதை பின்னப்பட்டுள்ளது. ‘ஒரு மெக்சிகன் அபாரத’ மூலம் நட்சத்திர அந்தஸ்துபெற்ற டொவினோ தோமஸ், ஐஸ்வர்யா லெக்ஸ்மி ஆகிய இருவரும் மாத்தா, அபர்ணாவாக நடித்துள்ளனர்.
கொடைக்கானலில் மதுரையைச் சேர்ந்த ஒரு கும்பலுக்கும் காவல்துறைக்கும் நடக்கும் மோதலுடன் படம் தொடங்குகிறது. ஒரு கேங்ஸ்டர் படத்துக்கான இந்தத் தொடக்கக் காட்சி ஆஷிக்கின் திரைமொழியிலிருந்து வேறுபட்டது. அந்த மதுரை கும்பலில் ஒருவர் மாத்தா. மதுரையில் தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர், அந்தக் கல்லூரியில் மலையாளி மாணவர்களுக்குச் சீட்டு வாங்கித் தரும் தரகராகவும் இருந்தவர்.
கொடைக்கானல் சம்பவத்தின் விசாரணையாகப் படம் விரிவுகொள்கிறது. இந்த இடத்தில் ஒரு சாதாரண த்ரில்லர் படத்துக்கான தோற்றம் வந்துவிடுகிறது. இதைத் தவிர்ப்பதுபோல விசாரணையை விட்டுவிட்டு போலீஸ் அதிகாரிகளுக்கு இடையிலான உளவியலை வசனங்கள் மூலம் சித்திரிக்கிறது படம். இந்தக் கதையை ஷியாம் புஸ்கரனும் திலீஷ் நாயரும் சேர்ந்து எழுதியிருக்கிறார்கள்.
மதுரையிலிருந்து கொச்சிக்கு நகரும் கதை, மாத்தா - அபர்ணா காதலின் நினைவுக்காக மீண்டும் மதுரை வருகிறது. இந்தக் காட்சிகள் வழியாக மதுரையின் தனித்துவமான நிறம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டு நகரமொன்றை அழகாகச் சித்திரித்த மலையாளப் படம் இது எனலாம்.
சத்யன் அந்திக்காடு, சிபிமலயில், அரவிந்தன், லோஹிததாஸ் போன்ற மலையாளத்தின் சிறந்த இயக்குநர்களே தமிழ்க் கதாபாத்திரங்களை இயல்பாகச் சித்திரிப்பதில் தோல்வியே அடைந்திருக்கிறார்கள். ஆஷிக் இதில் வெற்றிபெற்றிருக்கிறார். விசாரணை அதிகாரியாகத் தமிழ் நடிகர் இளவரசு இயல்பாக நடித்துள்ளார்.
வன்முறையும் காதலும் இரவுக் காட்சிகள் வழியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொச்சியில் நடக்கும் பகல் காட்சிகளில் மாத்தா பூனையைப் போல் ஒளிந்துகொள்கிறார். அபர்ணா பிழைப்பு தேடுகிறார். இரவில் இருவரும் காதல் மனநிலைக்குத் திரும்புகிறார்கள். சமயங்களில் அகன்று நடக்கிறார்கள். மெட்ரோ ஓடத் தொடங்கியிருக்கும் கொச்சி நகர இரவு வழியாக அதன் சமகால வாழ்க்கையையும் சொல்லியிருக்கிறார் ஆஷிக்.
மாத்தா-அபர்ணாவின் கடந்த காலத்தைத் திறந்து காண்பித்த பிறகான சில காட்சிகளில் சினிமா அயர்ச்சியடைந்து விடுகிறது. விறுவிறுப்பைத் தவிர்ப்பதற்கென்ற திட்டமிடலாக இருக்கலாம். அதுபோல் தமிழக-கேரள எல்லையின் காட்டுக்குள் முடிந்துவிடும் படத்தை மீண்டும் கொச்சிவரை இழுத்துச் சென்றிருப்பது இயல்பாக இல்லை.
அவ்வளவு நெருக்கத்திலிருந்தும் அகன்றிருக்கும் காதலியாக அபர்ணா இருக்கிறார். தந்தை இறப்புக்குப் பிறகு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பிலிருக்கும் அவர், சினிமா நடிகை ஆக முயன்றுவருகிறார். ஒரு குடும்பத் தற்கொலையிலிருந்து தப்பி, அபர்ணாவே வாழ்க்கை எனச் சுற்றி சுற்றி வருகிறார் மாத்தா. இருவரையும் பின்தொடர்ந்து வருகிறது இளவரசு குழு. இளவரசு மனைவியால் ஏமாற்றப்பட்டவர். அவரது குழுவில் ஒருவர் புது மாப்பிள்ளை. நூல்கண்டின் விடுவிக்கமுடியாத சிக்கலைப் போன்ற இந்த முரண்பாடுகள் மூலம் வாழ்க்கை நதியின் விசித்திரங்களைச் சொல்கிறது இந்தப் படம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago