உலக, உள்ளூர் சினிமா ஆர்வலர்களை ஒவ்வோர் ஆண்டும் ஈர்த்துவிடும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாக்களில் ஒன்று கோவா திரைப்பட விழா.
48-வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த ஏழு நாள் திரைப்பட விழா, நவம்பர் 28-ம் தேதி நிறைவுற்றது. இறுதிநாள் விழாவில் இந்திய-அர்ஜெண்டினா திரைப்படமான ‘ திங்கிங் ஆஃப் ஹிம்’ (Thinking of Him) திரையிடப்பட்டது. 82 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட படங்கள் இந்த விழாவில் பல பிரிவுகளின் கீழ் திரையிடப்பட்டன.
parvathy நடிகை பார்வதிrightவிருதுகள் பலவிதம்
சிறந்த படத்துக்கான விருதை ‘120 பத்திமோ பர் மினுவி’ (120 battements par minute) என்னும் பிரெஞ்சுப் படம் தட்டிச் சென்றது. சிறந்த இயக்குநருக்கான விருதை ‘ஜியா நியன் ஹூ’(Angels Wear White) என்னும் சீனப் படத்துக்காக அதன் இயக்குநர் விவியன் ஹூ வென்றார். மகேஷ் நாராயணின் இயக்கத்தில் வெளிவந்த ‘டேக் ஆஃப்’ மலையாளப் படம், சிறந்த படத்துக்கான சிறப்புப் பரிசைப் பெற்றது. சிறந்த நடிகைக்கான விருதையும் இந்தப் படத்தில் நடித்த ‘பூ’, ‘மரியான்’, ‘பெங்களூர் டேஸ்’ படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் நன்கறிந்த நட்சத்திரமான பார்வதி தட்டிச் சென்றார்.
‘120 பத்திமோ பர் மினுவி’ பட நாயகன் நாகேல் பெரெ பிஸ்கயார் (Nahuel Perez Biscayart) சிறந்த நடிகருக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுனெஸ்கோ காந்தி விருது பிரிவில் ‘கிஸ்த்ஜி – எ ஹாரிசான்’ (Kshitij - A Horizon) என்னும் மராத்திப் படம், சிறந்த படத்துக்கான விருதை வென்றது. கல்வி கற்கப் போராடும் 12 வயது சிறுமியைப் பற்றிய கதை இது. சிறந்த அறிமுக இயக்குநருக்காக விருது ‘டார்க் ஸ்கல்’ (Dark Skull) என்னும்பொலிவியப் படத்துக்காக அதன் இயக்குநர் கிரோ ரஸ்ஸோவுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது பழம்பெரும் கனடிய இயக்குநர் அட்டோம் எகோயனுக்கு (Atom Egoyan) வழங்கப்பட்டது.
ஒரே தமிழ்ப் படம்
யுனெஸ்கோ காந்தி விருது போட்டிப் பிரிவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களில் இடம்பிடித்த ஒரே தமிழ்ப் படம் ‘மனுஷங்கடா’. மாற்றுசினிமாவுக்காக இயங்கிவரும் அம்ஷன் குமார் இயக்கியிருக்கும் படமிது. கோலப்பன் என்னும் தலித் இளைஞன், இறந்த தன் தந்தையின் உடலை, எளிதான பாதையில் எடுத்துச்செல்லும் நோக்குடன், ஆதிக்க சாதி மக்கள் வசிக்கும் தெருவழியாகக் கொண்டு செல்ல நடத்தும் போராட்டம்தான் படத்தின் மையம். இந்தப் படம் இந்தியன் பனோரமா பிரிவிலும் திரையிடப்பட்டது.
படங்களும் கலைஞர்களும்
சிறந்த படத்துக்கான விருதை வென்ற ‘120 பத்திமோ பர் மினுவி’ படம் கான் திரைவிழா கிராண்ட் ப்ரிக்ஸ் உள்ளிட்ட நான்கு விருதுகளை ஏற்கெனவே வென்றுள்ளது. சிறந்த இயக்கத்துக்கான விருதைப் பெற்ற சீனப் படமான ‘ஜியா நியன் ஹூ’ பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை மையமாகக் கொண்டது.
விழாவின் தொடக்கப் படமான ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ (Beyond the Clouds) மஜித் மஜித்தின் முதல் இந்தியப் படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், துருக்கி திரைவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளது. மலையாள நடிகை மாளவிகா மோகனன் இதில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். விழாவின் நிறைவு விழாவில் திரையிடப்பட்ட ‘திங்கிங் ஆஃப் ஹிம்’, இந்திய இலக்கிய மேதை ரவீந்திரநாத் தாகூருக்கும் அர்ஜெண்டின எழுத்தாளர் விக்டோரியா அக்கோம்போவுக்கும் (Victoria Ocampo) இடையிலான காதலை மையமாகக் கொண்டது.
புறக்கணிக்கப்பட்ட துர்கா
‘ஒழிவுதிவசத்தே களி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற மலையாள இயக்குநர் சனல்குமார் சசிதரன். இவர் இயக்கிய ‘செக்ஸி துர்கா’ படம், கோவா திரைப்பட விழாவில் சர்ச்சையை ஏற்படுத்திய படமாக இது இருந்தது. இந்துக் கடவுளை இழிவுபடுத்தும் வகையில் இதன் தலைப்பு இருப்பதாகவும் வசனங்களில் கெட்ட வார்த்தைகள் இருப்பதாகவும் முதலில் இப்படம் திரையிடத் தடை விதிக்கப்பட்டது. அதனால் கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டன. தலைப்பும் எஸ் துர்கா என மாற்றப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சினிமா, பத்திரிகை, எழுத்தாளுமைகள் ‘செக்ஸி துர்கா’வுக்கு ஆதரவான அறிக்கையில் கையெழுத்திட்டனர். இந்திய சர்வதேசப் பட விழாக்களில் திரையிட அனுமதி கேட்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் சனல்குமார் வழக்குத் தொடர்ந்தார். கேரள உயர் நீதிமன்றம் படத்தைத் திரையிட உத்தரவிட்டது. ஆனால், கடைசி நேரத்தில் திரைவிழா நடுவர்களின் தலையீடு காரணமாக இந்தப் படம் திரையிடப்படவில்லை. இதற்கு நீதி கேட்டு திரைவிழாவில் ‘செக்ஸி துர்கா’ படக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் படம் உலகப் புகழ்பெற்ற ரோட்டர்டாம் திரைவிழாவில் சிறந்த படத்துக்கான ‘டைகர்’ விருதை வென்றது.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago