தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களைக் கொடுத்த கோவில்பட்டியிலிருந்து வந்து, ‘கிடாரி’ படத்தைக் கரிசல் மண் மணக்கும் திரை நாவல் போல் தந்தவர் பிரசாந்த் முருகேசன். ‘கிடாரி’க்குப் பின், ‘குயின்’ இணையத் தொடரை கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து இயக்கி கவனிக்க வைத்தார்.
தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாருக்காக, அதர்வா, மணிகண்டன் இணைந்து நடித்துள்ள ‘மத்தகம்’ என்கிற இணையத் தொடரை எழுதி, இயக்கியிருக்கிறார். ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடர் வெளியாக விருக்கும் நிலையில் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி…
மத்தகம் என்கிற தலைப்பு ஏன்? - யானையின் முன் நெற்றிப் பகுதியைக் குறிக்கும் சொல். பாறையில் மோதினாலும் உடையாத அளவுக்கு வலிமை வாய்ந்தது. யானையின் மூளையைக் காக்கக்கூடிய தாகவும் இருக்கிறது. இத்தொடரில் காவல் துறை - கேங்ஸ்டர் என இரண்டு குழுக்கள் இருக்கின்றன.
இரு தரப்புமே ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கு வியூகங் களை அமைக் கிறார்கள். நேரடியாகக் கதையின் கருவைப் பிரதிபலிக்காமல் அதற்கு ஓர் உருவகமாக இருக்க வேண்டும். அதற்காக இப்படியொரு தலைப்பைத் தேர்ந்தெடுத்தோம்.
அதர்வா - மணிகண்டன் ஆகிய இருவரும்தான் அந்தக் குழுக்களுக்குத் தலைமை வகிக்கிறார்களா? - ஆமாம்! அசோக் ரத்னகுமார் என்கிற காவல் அதிகாரியாக அதர்வாவும் ‘படாளம்’ சேகர் என்கிற கேங்ஸ்டராக மணிகண்டனும் வருகிறார்கள். இந்த இருவரது தலைமையிலான இரண்டு குழுக்களும் ஒரு நீண்ட இரவில் சந்திக்கிறார்கள். 30 மணி நேரத்துக்குள் நடந்து முடியும் இக்கதையில், எதிரெதிர் துருவ வாழ்க்கையில் இருக்கும் இக்குழுக்கள் சந்தித்து மோதிக்கொள்ள வேண்டிய சூழல் ஏன் உருவானது, இரு தரப்பிலும் என்ன நடந்தது என்பதை அத்தியாயங்கள் விவரித்துச் செல்கின்றன. இவ்விருவரும் முதன்மைக் கதாபாத்திரங்கள் என்றாலும் இவர்கள் பின்னாலிருக்கும் துணைக் கதாபாத்திரங்களின் முக்கியத்துவமும் அவை தரும் அழுத்தமும்தான் தொடரை விரட்டிச் செல்லும்.
தென்னிந்திய மொழிகள், அதிகம் போனால் இந்தி என விரிந்த தமிழ் இணையத் தொடர்கள், தற்போது வங்காளி, மராத்தியிலும் ‘டப்’ செய்யப்படும்போது, அதை உருவாக்கும் இயக்குநருக்குக் கூடுதல் சுமை ஏதும் இருக்கிறதா? - எந்த மூல மொழியில் தொடர் உருவாகிறதோ அதற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு ஹாலிவுட்டிலிருந்தும் அழைப்பு வந்ததாகப் படித்தேன். ஆனால், அவர் தனது தாய்மொழியில், தெலுங்கில்தான் படம் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
பின்னர் உலக அளவில் எடுத்துச் செல்லக்கூடிய படமாகத் தன்னுடையதை உருவாக்குகிறார். அதுதான் சரி என்று நினைக்கிறேன். மூல மொழியில் ஒரு படைப்பு உருவாகும்போது வட்டார வாழ்க்கை இருந்தாலும் அதைத் தாண்டி, வெப் சீரீஸ்களை பல மொழிகளுக்கு எடுத்துச் செல்ல ஒரு ‘யுனிவர்செல் கனெக்ட்’ தேவைப்படுகிறது. அதைக் கதையும் உருவாக்கமும்தான் முடிவு செய்கின்றன. அந்த இடத்தில்தான் கிரியேட்டரின் சுமை கூடுவதாக நினைக்கிறேன்.
‘குயின்’ இணையத் தொடரில் பணிபுரிந்த அனுபவம்தான், உங்களை மீண்டும் இணையத் தொடரின் பக்கம் இழுத்து வந்திருக்கிறதா? - அதுவும் ஒரு காரணம். தவிர இணையத் தொடர் என்கிற வடிவத்தின் மீது எனக்கு ஆர்வம் இருந்தது. ‘குயின்’ தொடரை ரேஷ்மா கட்டாலா எழுதியிருந்தார். ஆனால், குயின் தொடருக்கு முன்பே ‘மத்தகம்’ தொடரை எழுதி முடித்து, இயக்கக் காத்திருந்தேன். ‘கிடாரி’ படம் வெளிவந்தபோது அதைப் பாராட்டிய கௌதம் மேனன் சார் எனக்கு நல்ல நண்பராகிவிட்டார்.
நான் இணையத் தொடர் இயக்க விரும்புவதை அறிந்து வைத்திருந்த அவர்தான், “ஓர் இணையத் தொடர் இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது வாருங்கள் சேர்ந்து இயக்குவோம்’ என்றார். நான் மதிப்புக்கும் ஒரு இயக்குநர், சீனியர் ஒருவருடன் இணைந்து பணியாற்றும் அனுபவம் எப்படியிருக்கிறது என்பதை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகவே அவரது அழைப்பை ஏற்றுப் பணிபுரிந்தேன். மிகச் சிறந்த அனுபவம். அத்தொடரின் வெற்றிக்குப் பிறகு சீரீஸ் இயக்க ஏகப்பட்ட வாய்ப்புகள். அதில் நான் தேர்ந்தெடுத்ததுதான் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்.
எழுத்தாளர் வேல.ராமமூர்த்தியை ‘மதயானைக் கூட்டம்’ திரும்பிப் பார்க்க வைத்தாலும், தற்கால தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத கலைஞராக அவரை மாற்றியது ‘கிடாரி’. அந்தப் படத்தின் இயக்குநர் என்கிற முறையில் அவரது தேவையை எப்படி உணர்கிறீர்கள்? - அவரது எழுத்துக்களைப் படித்து வளர்ந்த வாசகன் நான். ‘கிடாரி’க்காக அவரை முதன் முதலில் சந்தித்தபோது “உங்கள் கதைகளால் வளர்ந்தவன் நான். எனது கதைக்குள் நீங்கள் வருகிறீர்கள். இது எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றேன். நாங்கள் இருவருமே கரிசல் மண்ணிலிருந்து வருகிறோம். அது எங்களை இன்னும் இணைத்தது.
’கிடாரி’யின் கொம்பையா பாண்டியன் கதாபாத்திரத்தின் முழுத் தீவிரத்தையும் அவர் மிக எளிதாக உணர்ந்து கொண்டதற்கு கதாபாத்திரங்களை எழுத்தில் படைத்தவர் என்பது அடிப்படையான காரணமாக இருந்தாலும், தனது மண்ணின் கதாபாத்திரம் என்பதால் அதற்குள் எளிதாக உள்ளே நுழைந்து கொம்பையா பாண்டியனாகவே மாறிப்போனார்.
அவரைத் தற்போது ‘கிரே ஷேட்’ கதாபாத்திரங்களில் பொருத்தும் நமது வணிக சினிமா சூழலின் தேவை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதைத் தாண்டி அவரை மிகச் சிறந்த குணச்சித்திரக் கலைஞராகக் கொண்டாடும் கதைகள் அமையும் என நம்புகிறேன். வாய்ப்பு அமைந்தால், நாங்களேகூட மீண்டும் இணைந்து அந்தத் தொடக்கத்தைச் செய்துவிடலாம்.
அடுத்து.. சர்வ நிச்சயமாக பெரிய திரைக்கான படம்தான். அதற்கான வேலைகளும் தொடங்கிவிட்டன. விரைவில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அறிவிப்பு வரும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago