திரை விமர்சனம்: தீரன் அதிகாரம் ஒன்று

By இந்து டாக்கீஸ் குழு

தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள தனிமையான வீடுகளில் புகுந்து, கொலை, கொள்ளையில் ஈடுபடும் வட நாட்டுக் கும்பல் ஒன்று, தமிழகத்தில் கைவரிசை காட்டுகிறது. அதுபற்றி போலீஸார் விசாரித்துவரும் வேளையில் ஒரு எம்எல்ஏ கொல்லப்படுகிறார். ஒரு போலீஸின் வீட்டிலேயே அந்தக் கும்பல் கைவைக்க, அவர்களைத் தேடிப் புறப்படுகிறார் போலீஸ் அதிகாரியான தீரன் திருமாறன் (கார்த்தி). அதில் அவர் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ‘பவாரியா’ என்ற கொள்ளைக் கும்பல் சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல தமிழகத்தில் கைவரிசை காட்டியது. அவர்களைப் பிடிக்க 2005-ல் ‘ஆபரேஷன் பவாரியா’ என்ற தனிப்படை அமைக்கப்பட்டது. இறுதியில், அந்தக் கொள்ளைக் கும்பல் பிடிபட்டது. இதை மையமாக வைத்து அசத்தலான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். நிஜ கொள்ளைக் கும்பல் தலைவனின் பெயரை (ஓமா பவாரியா) கதைக்காக சற்றே (ஓமா ஹவேரியா) மாற்றியிருக்கிறார். ‘குற்றப் பரம்பரை’ என்ற கருத்தை வைத்து படம் எடுக்க போட்டா போட்டி நடந்துவரும் நிலையில், அதை கதையின் முடிச்சாக வைத்துக்கொண்டு சத்தமே இல்லாமல் கச்சிதமான கமர்ஷியல் படத்தைக் கொடுத்த இயக்குநரைப் பாராட்டலாம்.

கார்த்தி தலைமையில் நடக்கும் தேடுதல் வேட்டை, கைரேகையை வைத்து சங்கிலித் தொடர்போல கொள்ளைக் கூட்டத்தினரைப் பிடிப்பது, அவர்களது பரம்பரைக்குப் பின்னுள்ள வரலாறு ஆகியவற்றில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர். அந்தக் காட்சிகள் படத்துக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகின்றன. ‘பொலிட்டீஷியன்ஸவிட, போலீஸ்காரங்க ரொம்ப மோசம்’, ‘நாமெல்லாம் நல்லவங்ககிட்ட இருந்து கெட்டவங்களைத்தான சார் காப்பாத்துறோம்’, ‘காசு இல்லாதவன்கிட்ட லஞ்சம் வாங்காதீங்க, இருக்கிறவன்கிட்ட வாங்கிக்கங்க’ என்பதுபோன்ற வசனங்களுக்கு கைதட்டல்கள் கிடைக்கின்றன.

படம் முழுவதும் கச்சிதமான உடல், ஆழமான பார்வை, கம்பீரமான‌ போலீஸ் அதிகாரியாக கச்சிதமாக இருக்கிறார் கார்த்தி. ஆக்சன் காட்சிகளில் அனல் பறக்கவிடும் அவர், காதல் காட்சிகளில் அசடு வழிகிறார். மனைவியுடன் காதலில் லயிக்கும்போதும், சக போலீஸாருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என கலங்கும்போதும், பாலைவனத்தில் வில்லன் கும்பலுடன் மோதும்போதும் நேர்த்தியாக நடித்திருக்கிறார். குறும்பு பெண்ணாக‌ வரும் ரகுல் ப்ரீத் சிங் காதல் காட்சிகளில் ஈர்க்கிறார். ‘எத்தனை டிரான்ஸ்ஃபர்? ஒழுங்கா லஞ்சம் வாங்கிட்டு வேலை பார்க்க மாட்டியா?’ என கார்த்தியிடம் செல்லமாக முறைக்கும்போது ரசிக்க வைக்கிறார். சக போலீஸ் அதிகாரியாக பக்குவமாக நடித்திருக்கிறார் போஸ் வெங்கட். வில்லனாக வரும் அபிமன்யு சிங் பார்வையிலேயே மிரட்டுகிறார்.

விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த போலீஸ் கதைக்கு சத்யன் சூர்யனின் ஒளிப்பதிவு உயிரூட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையோர அடர்ந்த காடு, பரந்த பாலைவனம், ஆரவல்லி மலைகள் என பகுதியின் தன்மை மாறாமல் அசலாக படம்பிடித்திருக்கிறார். திரைக்கதையின் வேகத்துக்கு ஊக்கியாக அமைந்திருக்கிறது ஜிப்ரானின் பின்னணி இசை. பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. ஓநாய் தந்திர பாணி, பாலைவன மணலில் புதைந்திருப்பது என‌ ஆக்சன் காட்சிகளில் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயனின் உழைப்பு அசரவைக்கிறது.

அதே வேளையில், ஆங்கிலேயரால் குற்றப் பரம்பரை என குற்றம்சாட்டப்பட்ட‌ ஒரு பிரிவினரை ஒட்டுமொத்தமாக‌ கொலை கும்பலாக சித்தரிப்பது நெருடல். வாழ்வாதாரத்தை இழந்து புலம்பெயர் தொழிலாளிகளாக கம்பளி, போர்வை விற்கும் வெளிமாநில தொழிலாள‌ர்களை கொடூர கொலையாளிகளாக பொதுமைப்படுத்துவதை தவிர்த்திருக்கலாம். ஆங்காங்கே ஓரிரு குறைகள் இருந்தாலும், உண்மை சம்பவத்துக்கு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, நேர்த்தியான தொழில்நுட்பத்தோடு, உண்மைக்கு நெருக்கமாக திரையில் படர விட்டிருப்பதில் 'தீரன் அதிகாரம் ஒன்று' நல்லதொரு போலீஸ் அத்தியாயமாக மாறுகிறது.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்