திரை வெளிச்சம்: வில்லனிடமிருந்து விடுதலை வேண்டும்!

By திரை பாரதி

அசோக்குமார் தற்கொலையால் கொதிநிலையில் இருக்கிறது தமிழ்த் திரையுலகம். பொதுமக்களில் சிலரைத் தீக்கிரை ஆக்கிய கந்துவட்டி, திரையுலகையும் விட்டுவைக்கவில்லை. “வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக, 74 லட்சம் மதிப்புள்ள எனது வீட்டை விற்றேன். இன்று அதன் மதிப்பு 7 கோடி ரூபாய். கடுமையாக உழைத்தால் வீட்டைத் திரும்ப வாங்கிடலாம் என்று நினைத்தேன். ஆனால், 13 வருடங்கள் ஆகியும் என்னால் அதை மீட்க முடியவில்லை. நான் வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு அதுதான்” என்று துக்கவீடாக இருக்கும் கோடம்பாக்கத்திலிருந்து கந்து வட்டியால் எவ்வளவு நொந்துபோய் இருக்கிறேன் என்பதைப் பொதுவெளியில் வந்து குமுறியிருக்கிறார் இயக்குநர், நடிகர் பார்த்திபன்.

அவரோடு நின்றுவிடவில்லை, கௌதம் மேனன், சுசீந்திரன் தொடங்கிப் பல முக்கிய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் குற்றம் சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் கொதித்துப்போய்க் குரல் கொடுத்திருக்கிறார்கள். நாம் எதிர்பார்த்தது போலவே தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் மிகத் துணிவாகச் சாட்டையைச் சுழற்றியிருக்கிறார்.

ஆனால், “திரையுலகமே ஒட்டுமொத்தமாகத் திரண்டு எதிர்த்தாலும், சட்டம் தன் கடமையைச் செய்தாலும் அதுகாட்டும் சலுகைகள் வழியே குற்றம் இழைத்தவர்கள் எப்போதும்போல் உலா வந்துகொண்டிருப்பார்கள். இதுதான் கடந்தகால யாதர்த்தம். இனியும் அதுதான் நடக்கும் பாருங்கள். அதேபோல் யாரையெல்லாம் குற்றம்சாட்டுகிறார்களோ அவர்களிடம்தான் மீண்டும் கடனுக்காகப்போய் நிற்பார்கள். இனி கடன் வாங்காமல் கட்டுக்கோப்பாகப் படமெடுக்க வேண்டும் என்பதைப் பற்றிக் கூடி கூடிப் பேசிவிட்டு மீண்டும் வட்டிக்கடையில்தான் கால் வைப்பார்கள். இது இங்கிருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று” என்று குமுறுகிறார். தொடர்ந்து நான்கு படங்களை எடுத்து தனது சொத்துகளில் பெரும்பகுதியை வட்டிக்காக இழந்துநிற்கும் முன்னாள் தயாரிப்பாளர் ஒருவர்.

எல்லை தாண்டுவதை நிறுத்துங்கள்

இவர் சொல்வதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. தமிழ் சினிமாவின் முதல் பிரம்மாண்டத் திரைப்படத்தை எடுத்து சாதனை படைத்த ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ்.வாசன் “ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வசூல் வரலாறு படைத்த ‘சந்திரலேகா’ படத்தால் எந்த விதத்திலும் எனக்குப் பொருளாதாரரீதியாகப் பயன் கிடைக்கவில்லை” என்று கூறியிருப்பது கடந்தகாலத் திரைப்பட வரலாறு. இப்படிச் சாதனையாளர்கள் அனுபவித்துச் சொன்னதிலிருந்துகூடப் பணத்தைக்கொட்டி பணத்தை அள்ளிவிடலாம் என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. பட்ஜெட்டில் எல்லை தாண்டுவதுதான் இங்கே வட்டிக்காரர்களிடம்போய் நிற்பதற்கான முதல்படியாக இருக்கிறது.

வெற்றிகரமான இயக்குநர் என்றால் அவருக்கான வியாபார மதிப்பு, கதாநாயகனுக்கான வியாபார எல்லை ஆகியவற்றை உணர்ந்து அதற்கு ஏற்ப தேர்வு செய்யும் கதைக்குக் கட்டுக்கோப்பாக பட்ஜெட் போட வேண்டும் என்று நினைப்பதே கிடையாது. விளைவு; கட்டுப்பாட்டை இழந்து பட்ஜெட் அதிகரிக்கும்போது கையிலிருக்கும் பணம் தீர்ந்து கடன்வாங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார். நடிகரின் மார்க்கெட் மதிப்பு தெரிந்து பட்ஜெட் போட வேண்டுமானால் அவரது முந்தைய படங்களின் வசூல் வளர்ச்சி என்ன என்பதை ஆராய வேண்டும்.

ஆனால், ஒரு நடிகரின் படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை ஆராய நம்பகமான எந்த வழிமுறையும் தமிழ் சினிமாவில் இல்லை. இதனால்தான் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் திரையரங்க டிக்கெட் விற்பனையை ஒற்றைச் சாளர முறையில் ஒட்டுமொத்தமாகக் கணினிப் பதிவு வலைப்பின்னலுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கேட்கிறது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளத் திரையரங்கு உரிமையாளர்கள் மறுக்கிறார்கள். அதிலிருந்தே வசூலின் ஒரு பகுதி கறுப்புப் பணமாக உருமாறுவதோடு தயாரிப்பாளரின் கணக்கிலிருந்து தப்பித்துவிடுகிறது.

கதாநாயகர்களின் பின்பணம்

இதை ஒழித்துக்கட்டும் சிறந்த மாற்றுவழி என்று கூறப்படும் டிக்கெட் பதிவு கணினி மயமாகும்போது, ஒரு நடிகரின் படத்துக்கு உண்மையான வசூல் எவ்வளவு என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அப்படி ஆகும் பட்சத்தில் கண்மூடித்தனமாகக் கதாநாயகன் சம்பளம் கேட்க முடியாது. கேட்கும் சம்பளத்தைப் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தயாரிப்பாளரிடம் பெற முடியாது. தற்போது கதாநாயகனுக்குச் சம்பளத்தின் மூன்றில் ஒரு பகுதியை முன்பணமாகக் கொடுக்க வட்டிக்காரரிடமிருந்து காசோலை பெற்றுக்கொடுக்கும் நிலை நீடிக்கிறது என்கிறார்கள். ஆனால், சில நல்ல உள்ளம் படைத்த கதாநாயகர்கள் தங்கள் மொத்த ஊதியத்தையும் படம் முடிந்து வியாபாரம் ஆனதும் பின் பணமாகப் பெற்றுக்கொள்வதாக நெகிழ்ந்து கூறுகிறார்கள் சில தயாரிப்பாளர்கள்.

ஆனால், தயாரிப்பாளரின் நிலையை அறியாமல் முன்பணம் என்ற பெயரில் பட்ஜெட்டின் கணிசமான சதவீதத்தைப் பல கதாநாயகர்கள் பெற்றுக்கொண்ட பிறகே கால்ஷீட் கொடுக்கிறார்கள். கால்ஷீட் கிடைத்துவிட்டது என்ற தைரியத்தில் பகல் கொள்ளையான வட்டிவிகிததுக்குக் கடனை வாங்கித்தான் படத்தைத் தொடர்ந்து உருவாக்க வேண்டிய நிலைக்குப் பல தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள். பெரிய நாயகன் என்ற நம்பிக்கையை மட்டுமே படத்தின் ஆதாரமாக வைத்துக்கொண்டு பட்ஜெட் எல்லை மீறும்போதும், எதிர்பார்த்த வியாபாரமோ வசூலோ ஆகாதபோதும் போட்ட அசலையே தயாரிப்பாளர்கள் எடுக்க முடிவதில்லை.

அப்போது கையிலிருக்கும் படத்தின் தொலைக்காட்சி உரிமை, பிறமொழியாக்க உரிமை உட்படப் பல உரிமைகளை மட்டுமல்ல; வாங்கிய கடனுக்கு ஈடாகக் கொடுத்த வீடு உள்ளிட்ட சொத்துகளையும் இழந்துவிட்டு வீதிக்கு வர வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.

வெற்றி, தோல்வி இரண்டுமே கணக்கில்

“ பல பிரச்சினைகளைத் தாண்டி வெளியாகும் பெரும்பாலான நல்ல படங்கள் தோல்வி அடைவதில்லை. அவற்றின் பட்ஜெட்தான் அவற்றை வசூல்ரீதியாகத் தோல்விப் படங்களாய் ஆக்கிவிடுகின்றன” என்று பாலிவுட்டில் சாதனை படைத்த மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா கூறியிருப்பதையும் இந்த இடத்தில் ஒப்பிட்டுப் பார்க்கலாம். யாஷ் சோப்ராவின் அனுபவபூர்வமான கருத்தில், கதாநாயகர்களின் கட்டுப்படுத்தப்படாத ஊதியமே திரையுலகில் வட்டித் தொழில் பெருகி நிற்பதற்கான மறைமுகக் காரணங்களில் ஒன்று என்ற உண்மை ஒளிந்திருக்கிறது.

கதாநாயகர்களின் வெற்றிப் படங்களை மட்டும் கருத்திலும் கணக்கிலும் கொள்ளாமல் அவர்களது தோல்விப் படங்களின் வியாபாரத்தையும் கணக்கில் கொண்டு, அவை இரண்டுக்கும் இடையிலான ஒரு வியாபார அளவை நிர்ணயிக்க வேண்டும் என்பதே சரியாக இருக்கும். ஆனால், இதைக் கதாநாயகர்கள் ஏற்றுக்கொள்வதே இல்லை என்பதுதான் பல தயாரிப்பாளர்களின் குமுறலாகத் தொடர்கிறது.

“இந்த முறையில் நிர்ணயிக்கப்படும் ஒரு படத்தின் வியாபாரத்தில், படத்துக்கான வட்டி,விளம்பரம், விநியோகச் செலவுகள் ஆகியவற்றைக் கழித்ததுபோக எஞ்சியிருப்பதுதான் ஒரு படத்தின் உண்மையாக நிகர வருமானம். அதற்குள் ஒரு படத்தின் பட்ஜெட் அடங்கினால் கடன் வாங்க வேண்டிய அவசியமே ஒரு தயாரிப்பாளருக்கு ஏற்பட வாய்ப்பில்லை” என்பது கட்டுக்கோப்பான பட்ஜெட்டில் படமெடுத்து வெற்றிகண்ட தயாரிப்பாளர் சி.வி.குமாரின் அனுபவம்.

இயக்குநர்களின் கடமை

இன்று அசோக் குமாரின் தற்கொலைக்காகத் துடித்து நிற்பவர்கள் அதிகமும் இயக்குநர்களே. ஆனால், பல இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுக்கத் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்ற குரல் முன்பைவிடக் கோடம்பாக்கத்தில் அதிகமாக ஒலிக்கிறது. அத்துடன் கதாநாயகர்களைப் போல் அதிகம் சம்பளம் கேட்பவர்களாகவும் அவர்கள் மாறியிருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள். இதைத் தர முடியாததால் இன்று இயக்குநர்களே தயாரிப்பாளர்கள் ஆகி நிற்கிறார்கள். இறுதியில் அவர்களும் வட்டிக்குள் விழுந்துவிடுகிறார்கள். நிதியைக் கட்டுக்கோப்புடன் கையாள்வதுதான் வட்டி எனும் வில்லனிடமிருந்து விடுதலைபெற சிறந்த வழி. அதற்கு வெளிப்படையான வியாபாரம், வசூல் அவசியம் என்பதை இப்போதாவது திரையுலகினர் உணர்ந்து செயல்பட வேண்டும்.

வங்கிகள் தயங்குவது ஏன்?

திரைப்பட தயாரிப்புக்கு கடன் வழங்க வங்கிகள் தயங்குவதற்கு முக்கிய காரணம் சினிமா தொழில் முறைப்படுத்தப்படுத்தப்பட்ட வரம்புக்குள் இல்லாததுதான். 1995-ம் ஆண்டுவரையிலும் வங்கி கடன் பெற்று திரையுலகினர் படம் எடுத்து வந்துள்ளனர்.அதற்கு பின்னர்தான் திரைப்பட தயாரிப்புக்கான வங்கி கடன் குறைந்தது. திரைப்பட துறையில் நிலவும் நிலையற்ற தன்மை, வெளிப்படையான வியாபார வரவுசெலவு கணக்குகள் காட்டமுடியாது போன்ற காரணங்களால் வங்கிகள் கடன் வழங்க தயங்குகின்றன.

திரைப்படத்துக்கு ஆகும் மொத்த செலவு எவ்வளவு? நடிகர்களின் சம்பளம், பணியாளர்களின் சம்பளம், விளம்பர செலவுகள் எவ்வளவு ? என்ன எவ்வளவு லாபம் கிடைக்கும் என்கிற கணிப்பு உள்ளிட்ட விவரங்கள் கொண்ட திட்ட அறிக்கையை அளிக்க தயாராக இல்லை. திட்ட அறிக்கையுடன், பிணை சொத்துகள் காட்டினால் திரைப்பட தயாரிப்புக்கு வங்கிகள் கடன் வழங்கும். நம்பகத்தன்மை அடிப்படையில் திரைப்பட தொழிலுக்கு கடன் வழங்கி பல வங்கியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

எனவே முறைப்படுத்தப்பட்ட தொழிலாக இல்லை என்பதால்தான் வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன என்பதுதான் இப்போதைய நிலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்