குறும்படம்: ஒரு அம்மாவும் சில குழந்தைகளும்

By ரவிசுப்பிரமணியன்

கலை வெறும் கேளிக்கைக்கு மட்டும் உரியது அன்று. பின் கலையின் தலையாய பணி என்னவாக இருக்க வேண்டும், அது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, தன் ‘கசடற’ என்கிற குறும்படத்தின் மூலம் பதில் அளித்திருக்கிறார் விஜய் ஆம்ஸ்ட்ராங்.

‘தோழியாகவும் உடன் நிற்கும் அம்மாவுக்குச் சமர்ப்பணம்’ என்று தொடங்கும் படம், மகளின் மீதான கரிசனம் வழியே இன்று நம் பிள்ளைகளின் சிந்தனையை மலடாக்கும் கல்வி முறை மீது எழுப்பும் கேள்விகளாக உருமாறுகிறது.

பள்ளிக்குச் செல்வதாகச் சொல்லிவிட்டு, பள்ளிக்கு வெளியே இயற்கை எனும் வகுப்பறையில் தன் மகளுக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு தாயையும் அவர்களால் கல்வியின் ‘புனிதம்’ கெட்டுவிட்டதாக வெற்றுக் கூச்சலிடும் ஒரு பள்ளியையும் ‘கற்றல்’ எனும் புள்ளியில் இணைக்கிறது இக்குறும்படத்தின் கதை.

தூக்கத்தில் எழ மறுக்கும் அந்த சின்னஞ்சிறு குழந்தை, பள்ளிக்குச் செல்லும் வழியில் இயற்கையின் அழகுகளில் லயிக்க, அதற்கு இசையும் அக்குழந்தையின் அம்மாவைப்போல் எல்லா அம்மாக்களும் இருந்துவிட்டால் எவ்வளவு நலமாக இருக்கும்.

“இன்னும் சாப்பிடக்கூட ஒழுங்கா கத்துக்காத குழந்தைகள்கிட்ட எதுக்கு இவ்வளவு கண்டிப்பு? அவங்களுக்கு யூனிஃபார்மை மாட்டி, வலுக்கட்டாயமா நாலு சுவத்துக்குள்ள உட்கார வைச்சு, உங்க ஸ்கூல்லயே இருக்கிற சிஸ்டம்படி, அதுக்குள்ள இருக்க ஷெட்யூல்படி, அவங்களுக்கு எல்லாத்தையும் திணிக்கிறது தானே உங்க மெத்தட் ஆஃப் டீச்சிங்? எல்லாக் குழந்தைகளும் உங்க சட்டதிட்டத்துக்கு உட்படணும்..

விஜய் ஆம்ஸ்ட்ராங்

ஒருவேளை அந்தக் குழந்தைகளுக்கு அது பிடிக்கலைன்னா இந்த சிலபஸ்சையும் பாடத்தையும் அந்தப் பிள்ளைகளோட மூளைக்குள்ள எப்படியாவது திணிச்சாகணும் இல்ல?” என்று அந்த இளம் தாய் கேட்கும் கேள்வி, ‘பிட்டுக்கு மண் சுமந்தவன் மேல் பட்ட அடி’ உலகின் சகல ஜீவராசிகளின் மேலும் விழுந்தது போல் நம்மேலும் விழுகிறது. அவள் கேள்விகளில் இருப்பது வெறும் தர்க்கம் மட்டும்தானா?

அவள் மேலும் கேட்கிறாள். “ஒரு ஞாயிற்றுக்கிழமை கொடுக்கிற சந்தோஷத்தைக்கூட இந்தப் பள்ளிக்கூடம் கொடுக்க முடியலையே… ஏன் சார்?” இதற்கெல்லாம் நம்மிடம் பதில் உண்டா? ஒரு நல்ல கலைப்படைப்பின் வேலை, மந்தை மன அமைப்புகொண்ட மனிதர்களிடம் அவர்கள் உருவாக்கி வைத்துள்ள உதவாத ‘சிஸ்டம்’ மீது சாரமான கேள்விகளை உருவாக்குவது தானே!

‘ஒரு புத்தகத்தைப் படித்து, தேர்வில் தேர்ச்சி பெற்று, முடிப்பதல்ல கல்வி. நீங்கள் பிறந்தது முதல் இறக்கும் வரை, முழு வாழ்க்கையும், ஒரு கற்றல் செயல்முறையே’ என்கிறார் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அதைத்தான் இந்தப் படம் இயற்கையின் நடுவே நம்மை அமரவைத்து நமக்குச் சொல்லிக்கொடுக்கிறது.

உள்ளடக்கத்தில் மட்டுமல்ல, ஒளிப்பதிவில், இயக்கத்தில், கலைஞர்களை வேலை வாங்கியதில் என உள்ளடக்கத்தின் நோக்கத்தைத் துலங்கச் செய்வதில் தனது கலையாளுமையை திறம்பட வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர். இசை, வசனம், காட்சி அமைப்பு - எல்லாமே உறுத்தலில்லாமல் ஒத்திசைவாய் கைகோர்த்து நம் பார்வைக்கு வந்திருப்பதற்கு எடிட்டர் பழனிவேலும் ஒரு காரணம்.

படத்தின் இறுதியில் குழந்தையின் தாய் வளர்மதி தன் கணவர் நகுலனிடம் இப்படி கேட்கிறார்: “ஏன்பா… நீ கோச்சுக்கலைன்னா நான் ஒன்ணு சொல்லட்டுமா? நாமளே ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கலாமா?” இந்தக் கேள்வியுடன் பெரும் விவாதத்தைத் தொடங்கி வைக்கும் இக்குறும்படத்தை பார்த்து கடந்து செல்லாமல் பரப்ப வேண்டிய படைப்பு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE