திரை நூலகம்: நடிகர் திலகத்துக்கு ஓர் அரிய ஆவணம்!

By டோட்டோ

"எதை எழுதுவது? எதை விடுவது? கடலிலே எந்தப் பகுதி அழகான பகுதி? ஒன்பதுவித ‘பாவ’ங்களை தொண்ணூறு வகையாக நடித்துக் காட்டிய சிவாஜி ஒரு பெருங்கடல் ! "

- இவ்வரிகள் கவியரசர் கண்ணதாசன் தமிழின் பெருமையாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பாராட்டி எழுதிய கவிதையின் ஒரு பகுதி. மழை பற்றி எழுதுதல் எளிது. ஆனால் மலையுச்சியில் ஒரு சிறு சதுரத்தில் ஊற்றாகத் தொடங்கி, தரையிறங்கி, தானே கரைகள் சமைத்து, அகலமாய் பிரவகித்து , கடலுக்குப் பெருமை சேர்க்கும் காவிரியாற்றின் கால வரலாற்றை பற்றி எழுதுவது அத்தனை எளிதல்ல. அதே போல , ஒரு சகாப்தமாக, சரித்திரமாக, இறந்தும் மின்னிக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரமாக ஒரு பெரும் கலைஞனின் வாழ்வின் நீள அகலங்களைப் பற்றி பதிவு செய்வதும் சுலபமானதல்ல. அவ்விதமான ஒரு பெரும் முயற்சியை சிவாஜி கணேசன் என்னும் இந்நூல் நிகழ்த்தியுள்ளது. இதன் பொருளடக்கத்தில் - இளமைக்காலம், நாடக உலகம், திரையுலக வாழ்வு, இயக்கிய ஆளுமைகள், திரைப்படவியல் பட்டியல், பகுப்பாய்வு, அரசியல் காலம், சமூகம் என மூன்று தொகுதிகள் ஐந்து இயல்கள் 55 தலைப்புகள் 1552 பக்கங்கள் கொண்ட வரலாற்று ஆவணமாக வந்திருக்கிறது.

ஆசிரியர் அறிமுகம்

முனைவர் கா.வெ.சே.மருதுமோகன் - இவர் 1955 இல் சிவகங்கை யில் பிறந்தவர். தான் மதுரையில் பார்த்த முதல் திரைப்படமான "வீரபாண்டிய கட்டபொம்மன்" பார்த்ததிலிருந்து சிவாஜியின் தீவிர ரசிகர் ஆனவர். பின்னர் வெவ்வேறு காலகட்டங்களில் நடிகர் திலகத்துடன் பழகும் வாய்ப்பு பெற்றார். 2002ல் "எனது சுயசரிதை" என்னும் சிவாஜி பற்றிய நூல் வெளியிட முக்கிய பங்காற்றினார். 2018 ல் உலக செம்மொழி மாநாட்டில் பராசக்தி மனோகரா இரண்டு படங்களை பற்றிய கட்டுரைகள் சமர்ப்பித்தார். 2010ல் முறையாக ஆய்வு செய்யத் தொடங்கி தானே நேரில் திருச்சி சங்கிலியாண்டபுரம் தொடங்கி சிவாஜி கணேசன் வாழ்ந்த இடங்களை சுற்றி அவரைப் பற்றிய கள ஆய்வு செய்தார். பல ஆண்டுகளின் உழைப்பில் இறுதியில் ஜூலை 2017ல் "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறும் கலைப் பணிகளும் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் ஆய்வேடு சமர்ப்பித்து, முனைவர் பட்டம் பெற்றார். இதே ஆய்வின் அடிப்படையாகக் கொண்டு மேலும் விரிவாக, இந்தப் புத்தகத்தை ,அவர் படைத்திருக்கிறார்.

சிறப்புக் கூறுகள்

# சிவாஜி கணேசனின் இளமைப் பருவமும் அவருடைய குடும்ப பின்னணியையும் வெகுநேர்த்தியாகவும் விரிவாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

# பலமான அஸ்திவாரமாக விளங்கிய அவரது நாடக சபாக்காலம் வெகு இயல்பாக கட்டமைக்கப்பட்டு ஒரு கதை போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்று அவருடன் பயணித்த காக்க ராதாகிருஷ்ணன், யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை, கே.வி.சீனுவாசன், வீராச்சாமி அவர்களுக்கு பின்னாட்களில் மரியாதை செய்தததும் குறிப்பிடப்பட்டுள்ளது.

# பெரு வெற்றி பெற்ற வெள்ளி விழா மற்றும் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பின்னணியையும் அவரோடு பணியாற்றிய இயக்குனர்களையும் வரிசைப்படுத்தி ஒவ்வொரு படமாக சுவாரசியமாக விளக்கப்பட்டிருக்கிறது.

# இலக்கண முதுநூலான தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியலில் எட்டு வகையான சுவைகள் அதில் நான்கு நிலைக்கலன்கள் என மொத்தம் 32 வகையான சுவைகளில் சிவாஜி கணேசன் நடிப்பாற்றல் புதுமையாக விளக்கி கூறப்பட்டுள்ளது

# கூடுதலாக , மேலை நாட்டு நடிப்புக் கலை, மற்றும் மேலை நாட்டு அறிஞர் கான்ஸ்தன்தீன் ஸ்தானிஸ்லாவ்ஸ்கி வரையறுத்திற்கும் ஒரு நடிகரின் 16 குணங்களுக்கும் கூறுகளுக்கு நடிகர் திலகத்தின் முறையான எடுத்துக்காட்டுகளை பொருத்தமான படங்களுடன் ஒப்பிட்டு விளக்கியிருப்பது, புதுமையான முயற்சி.

# வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் இரு படங்களுக்கும் ஒரு கதாபாத்திர உருவாக்கத்தை கடந்த வர வேண்டிய மூன்று நிலைகளை [ கதாபாத்திரத்தின் அறிமுகம், அனுபவம், மற்றும் உடல் சார்ந்த வெளிப்பாடு ] வெகு விரிவாக ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக 1954 ல் ஒரு வரலாற்று குழு அமைத்து மபொசியின் மூலக்கதை, ஆராய்ச்சி , கம்பளத்தார் கூத்து, சக்தி கிருஷ்ணசாமி எழுதிய நாடகம் என்று அனைத்தும் முறையாக பகுப்பாய்வு செய்யப்பட்டு பின் எழுதப்பட்டு நாடகமாக அரங்கேற்றப்பட்டது. கட்டபொம்மன் பாத்திரம் மட்டும் 116 தடவை காடகமாக அரங்கேறி மெருகேறி பின்னர் திரைப்படமாக வந்து அவர் புகழ் உலகறியச் செய்தது .

# இரண்டு கால்களில் 200 மிதமான நடைகளை காட்டிய அபாரமான உடல் மொழி ஒப்பனை, உடையலங்காரம் , வசன உச்சரிப்பு, வட்டார வழக்கு , எதிர்மறை கதாநாயகர்களாக நடித்த படங்கள் நகைச்சுவை வேடங்கள் என எல்லா கோணங்களிலும் அவரது படங்களும் நடிப்பும் அலசப்பட்டிருக்கின்றன.

# அதிகம் பேசப்படாத அவரின் அரசியல் பக்கமும், சார்பு நிலைகளும் அதனால் கண்ட ஏமாற்றங்களும், சொந்த கட்சி, தேர்தல் பின்னர் அரசியல் விலகல் என அரசியல் வாழ்வையும் முழுமையாக சொல்லி இருக்கிறது.

# மேலும், அவரின் குடும்பம், பிறமொழியில் நடித்த படங்கள், வேட்டைத்திறன், அமெரிக்கப் பயணம், மார்லன் பிராண்டோவின் சந்திப்பு, ஐரோப்பிய பயணம், நண்பர்கள், என பல்வேறு அனுபவங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.

# ஒரு சுவையான உதாரணமாக 1964ம் ஆண்டில் மட்டும் கர்ணன், பச்சை விளக்கு,ஆண்டவன் கட்டளை, காய் கொடுத்த தெய்வம், புதிய பறவை, முரடன் முத்து தவிர 9 வேடங்களில் நடித்த நவராத்திரி என ஒரே வருத்தல் 15 விதமான பாத்திரங்களில் அவரால் அற்புதமாக நடிக்க முடித்தது. மேலும் சிவாஜி மூன்று வேடங்களிலும், எம்.ஆர். ராதா இரண்டு வேடங்களிலும் நடித்த பலே பாண்டியா 11 நாட்களில் எடுக்கப்பட்டது போன்ற ஏராளமான சுவையான திரைச்சித்திகள் உள்ளடக்கியிருக்கிறது

# பெருவெற்றி கொண்ட மனோகரா திரைப்படத்தில் வரும் கொலுமண்டபக் காட்சியின் மொத்த வசனங்களையும் முதலில் தமிழிலும் பின்னர் தெலங்கிலும் வெளுத்து வாங்கி எல்.வி. பிரசாத் மற்றும் படக்குழுவினரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

செம்மைப்பாடுகள் ஒவ்வொரு படத்தை பற்றிய விவரிப்புகளில் கதையமைப்பின் முழுக்கதையையும் சொல்லாமல் சுருங்கச் சொல்லியிருக்கலாம். ஒரு சில தகவல்கள் இரண்டு முறையும் விரிவாக வருவதை தவிர்த்திருக்கலாம். உ : மனோகரா வசனங்கள் பற்றிய செய்தி கேள்வி பிரசாத் கட்டுரையிலும், கட்டபொம்மன் கட்டுரையிலும் வருவது, கட்டபொம்மன் திரைப்படம் உருவான விதம்.

80களில் வெளிவந்த "முதல் மரியாதை" திரைப்படத்தில் "ராசாவே உன்னை நம்பி" என்கிற பாடலில் கவிஞர் வைரமுத்து ஒரு விஷயம் வைத்தார். "உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும்" என்று அவர் அந்த காலகட்டத்தில் ஏற்று நடித்த பொருத்தமற்ற வேஷங்களை பற்றிதான் அது.

அந்த வகையில் வயதும் பொருந்தாத கதாபாத்திரங்கள் [ அவருக்கேற்ற கதைகள் அமையாமல் போனதாக எடுத்துக்கொண்டாலும் ] நடித்து ஏற்பட்ட சரிவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். உ : லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ராஜரிஷி, எமனுக்கு எமன். எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, பாலையா, எம்.ஆர்.ராதா போல குணச்சித்திரகே கதாபாத்திரங்களில் அவர் நடிக்காமல் போனது பற்றி எழுதியிருக்கலாம்.

நிறைவு: வெறும் முகம் மட்டுமல்லாமல் நகம் கூட நடிக்கும் சிவாஜி கணேசனின் சரிதமாக மட்டும் இந்நூலைக் குறுக்கிக் கொள்ளாமல் 50 வருட தமிழ் சினிமா மற்றும் நாடக காலத்தையும் பதிவு செய்யப்பட்ட முக்கிய அதே சமயம் சுவாரசியமான ஆவணமாகக் கொள்ளலாம். திரைப்படத் துறை திரைப்படக் கல்லூரிகள் கூட சேர்ந்து செய்திடாத பணியை தனியொருவராக முனைவர் கா.வெ.சே.மருத்துமோகனின் பணி பெரும் பாராட்டுக்குரியது. மேலும் இது போன்ற பல ஆய்வுகளுக்கும் ஒரு முன்னோடியாக கூறலாம்.

கவிஞர் வாலி ஒரு கவிதையில் இப்படி குறிப்பிட்டிருந்தார் " பள்ளியில் அதிகம் பயிலாது போனான்; பின்னாளில் அந்த பெருமகன் கால் முளைத்த ஒரு கல்லூரி ஆனான்" பள்ளியில் அதிகம் பயிலாதா அந்த பல்கலைக்கழகம் மேலும் பல முனைவர்களையும் தயாரிக்கலாம்.

விமர்சகர் தொடர்புக்கு: tottokv@gmail.com

சிவாஜி கணேசன் வாழ்க்கை வரலாறு l 3 தொகுதிகள் l வளரி ஸ்டூடியோஸ் l அசோக் நகர் சென்னை. l விலை: ரூ.2400. l நூலைப் பெற 7338822001

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE