அந்த நாள் ஞாபகம்: மூன்று முறை படையெடுத்த பட்டினத்தார்

தமிழ்த் திரையுலகில் ஒரே ஆங்கிலப் படத்தை டிவிடியில் பார்த்துப் பலர் ஒரே கதையைப் படமெடுத்துச் சொதப்புவது இந்தக் காலம். ஆனால் அந்தக் காலத்தில் எக்காலத்திலும் புகழ்பெற்று விளங்கும் வரலாற்றுக் கதைகளைத் துணிச்சலாகத் திரும்பத் திரும்பத் தயாரித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று மூன்று முறை படமாக்கப்பட்ட பட்டினத்தாரின் வாழ்க்கை வரலாறு.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடல்வணிகத்தில் செல்வாக்குப் பெற்று விளங்கிய நகரத்தார்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ்ந்த கடற்கரை நகரம் காவிரிப்பூம்பட்டினம் (பூம்பூகார்). திருவெண்காடர் என்ற இயற்பெயரோடு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த செல்வந்தர்தான் பட்டினத்தார்.

உலகின் நிலையாமையை, உயிருக்கு உயிரான வளர்ப்பு மகன் வழங்கிய ஒரு வாசகத்தின் மூலம் (காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே) அறிந்து, உணர்ந்து, அதிர்ந்து, நவரத்தினங்கள் வைத்துத் தைக்கப்பட்ட பட்டாடையை கழற்றி வீசியெறிந்துவிட்டு ஒருமுழம் கச்சையை இடுப்பில் சுற்றிக்கொண்டு,( இது கோவணமாகவும் இருக்கலாம் என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள்) வீட்டைவிட்டு வெளியேறித் துறவறம் பூண்டவர்.

சி.எஸ். சுந்தரமூர்த்தி ஓதுவார் பட்டினத்தாராக நடித்து வெளியான முதல் படம் 1935-ல் வெளியானது. ஆனால் தோல்வியடைந்தது. அது அடுத்த ஆண்டே, (1936) எம்.எம். தண்டபாணி தேசிகர் பட்டினத்தாராக நடித்த படம் வெளியாகி வெள்ளிவிழா கண்டது. தேசிகரே இசையமைத்து, பாடிய இந்தப் படத்தில் மொத்தம் 52 பாடல்கள்.

சென்னை பிராட்வே திரையரங்கில் 25 வாரங்கள் ஓடிய முதல் படம் இதுதானாம். பிராட்வே தியேட்டரில் பழைய பட்டினத்தார் பட கட்- அவுட் ஒன்றையும், 25 வாரங்கள் இதே திரையரங்கில் ஓடிய தெலுங்குப் படமான ‘கிருஷ்ண லீலா’வின் கட் அவுட் ஒன்றையும் இன்று போனாலும் திரையின் அருகில் காணலாம். பாகவதரின் ஹரிதாஸ் மூன்று தீபாவளிகளைக் கண்டதும் இந்தத் திரையரங்கில்தான்.

சுதந்திரப் போராட்டம் சூடுபிடித்திருந்த காலகட்டம் என்றாலும் தேசிகர் நடித்த பட்டினத்தார் படத்தின் பாதிப்பில் பல சம்சாரிகள், துறவிகள் ஆனது கறுப்பு வெள்ளை நாட்களின் அதிசயங்களில் ஒன்று.

இதன் பிறகு 29 ஆண்டுகளுக்குப் பிறகு 1962-ல் வெளியானது டி.எம்.சௌந்தரராஜன் பட்டினத்தாராக நடித்து வெளியான படம். இயக்குநர் கே.சோமு திரைக்கதை அமைத்து இயக்கிய இந்தப் படத்துக்கு வசனம் தஞ்சை ராமய்யாதாசும் நாவலாசிரியர் அகிலனும். எம்.ஜி.ஆர். சூப்பர் ஸ்டாராக வலம் வந்துகொண்டிருந்த நேரம் அது.

எம்.ஜி.ஆருக்காக டி.எம்.எஸ். பாடிய பல வெற்றிப் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருந்தன. டி.எம்.எஸ்ஸின் வேண்டுகோளுக்கு இணங்கிப் பட்டினத்தார் வேடத்தின் ஒப்பனைக்காகத் தனது மேக்-அப் மேன் பீதாம்பரத்தை அனுப்பிவைத்தார் எம்.ஜி.ஆர்.

இந்தப் படத்தில் பட்டினத்தாரின் மனைவி சிவகலையாக (கதாநாயகி) நடித்தவர் ஜெமினி கே. சந்திரா. இவர் எம்.ஆர். ராதாவின் மேக்-அப் மேன் கஜபதியின் மனைவி. மனைவி கதாநாயகியாக நடித்த அந்தப் படத்தில் அவருக்கு ஒப்பனையாளராகப் பணிபுரிந்தார் கஜபதி.

வீட்டை வீட்டுவெளியேறிய கணவர் துறவியாகவேனும் வீட்டுக்கு வர மாட்டாரா என்று ஏங்கி, பிறகு திருவிடை மருதூர் வரும் கணவரைக் காணச் சென்று அவரை அங்கே காணாமல் சிவகலை இறப்பதுபோலக் காட்சி பட்டினத்தார் படத்தில் அமைந்தது. எதிர்பாராத விதமாகப் பட்டினத்தார் படம் வெளியாகிய சில ஆண்டுகளில் இறந்துபோனார் ஜெமினி கே.சந்திரா.

திராவிட இயக்கம் செல்வாக்குச் செலுத்திய காலம் என்பதால் ஆத்திகத்தைத் தூக்கிப் பிடித்த இதே படத்தில் எம்.ஆர்.ராதாவின் சமூக விமர்சனமும் நாத்திகமும் சரிக்குச் சமமாக இருந்ததை ரசிகர்கள் கொண்டாடினார்கள். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றாலும் இம்முறை யாரும் துறவறம் மேற்கொள்ளும் அளவுக்குச் செல்லவில்லை.

படங்கள் உதவி: ஞானம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

மேலும்