ரா
ஜு முருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி தேசிய விருதையும் பெற்றது. இப்படம், மத்திய அரசின் கழிவறைத் திட்டம் தொடர்பான கதையை எடுத்துக்கொண்டு சாமானியர்கள் விஷயத்தில் அரசாங்கமும் அரசு நிர்வாகமும் எவ்வளவு மெத்தனமாகச் செயல்படுகின்றன என்பதை விமர்சித்திருந்தது. சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ என்னும் பொழுதுபோக்குத் திரைப்படத்தில் ஓரிரு வசனங்கள் மத்திய அரசின் ஜி.எஸ்.டி.யை விமர்சிக்கும் விதமாக அமைந்திருந்தன.
அந்தப் படத்தைப் பார்த்துக் கொதித்துப்போன மத்திய ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தார்கள். அதன் பயனாக, சாதாரணத் திரைப்படமான அது பெரிய வெற்றிபெற்றது. தொடர்ந்து மக்கள் மத்தியில் உருவாகிவரும் கொந்தளிப்புகளைப் பிரதிபலிக்கும் இத்தகைய காட்சியமைப்புகளைப் படத்தின் வெற்றிக்காகச் சிலரும் சமூகநிலையை எடுத்துரைப்பதற்காகச் சிலரும் தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
ஓராண்டுக்கு முன்னர் மத்திய அரசு அறிவித்த பண மதிப்பு நீக்கம், அதைத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் சாமானியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்னும் கருத்தைப் பிரதிபலிக்கும்வகையில் பல்வேறு இதழ்கள் செய்திகளை வெளியிட்டுவருகின்றன. சமூகத்தைப் பாதிக்கும் இத்தகைய விஷயங்களைப் படைப்புகளில் வெளிப்படுத்த வேண்டிய தேவை கலைஞர்களுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் வகையில் ‘அறம்’ படத்தை இயக்கியிருக்கிறார் ந.கோபி நயினார்.
பயத்தில் உயரும் ஒரு கை; அபயமாக நீளும் மற்றொரு கை என்னும் இலச்சினையைக் கொண்ட தலைப்பே இது ஓர் அரசியல் படம் என்பதை உணர்த்துகிறது. நாம் மிகச் சாதாரணமாகக் கடந்து செல்லும் தேசிய அளவிலான ஒரு பிரச்சினை, நாம் மிக விலகியிருந்து காணும் ஆழ்துளைக் கிணற்று விபத்து என்னும் ஒரு சம்பவத்தை மிக மிக நெருக்கமாக நமக்குக் காட்சிப்படுத்தி, அதன் பின்னணியில் மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வைத் தரும் சினிமாவாக வெளிப்பட்டிருக்கிறது ‘அறம்’.
துன்பத்தில் சிக்கும் எளிய குடும்பம்
ஆழ்துளைக் கிணற்றில் ஒரு குழந்தை தவறி விழுவதைச் சம்பவமாகக் கொண்டு 1990-ல் பரதன் இயக்கத்தில் ‘மாலூட்டி’ என்னுமொரு மலையாளத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இந்தப் படம் குடும்ப அரசியல் பேசியது. அத்துடன், ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை தவறி விழுவது அதில் ஒரு சிறிய பகுதி. பாதிக்கப்படும் குடும்பம் மேல் நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்தது. ஆனால், ‘அற’த்தில் அன்றாடப் பாட்டுக்கே அல்லல்படும் எளிய குடும்பம் பாதிக்கப்படுகிறது. மேலும், படம் முழுவதையும் ஆழ்துளைக் கிணற்றுச் சம்பவங்கள் மட்டுமே சூழ்ந்திருக்கின்றன. இயக்குநர் தாம் என்ன சொல்லப் போகிறோம் என்ற தெளிவுடன் படத்தின் திரைக்கதையை அந்தச் சம்பவங்களைச் சுற்றியே அமைத்து, அப்பிரச்சினையின் பல பரிமாணங்களையும் வீரியத்தையும் உணர்த்திவிடுகிறார்.
ராக்கெட் தொழில்நுட்பத்தில் எவ்வளவு உயர்ந்து நின்றாலும் மிகவும் அடிப்படையான உயிர் காப்பு விஷயத்தில் பெரிய அக்கறை காட்டாமல் இருப்பது என்பது வல்லரசுக் கனவு கொண்ட ஒரு நாட்டில் எவ்வளவு அபத்தம் என்னும் கேள்வியைப் படம் எழுப்புகிறது. மீதேனையும் ஹைட்ரோகார்பனையும் எவ்வளவு ஆழத்திலிருந்தும் தோண்டி எடுத்துவிடுகிற ஓர் அரசாங்கம், சில அடி ஆழத்துக்குள் தவறி விழுந்துவிட்ட சிறு குழந்தையைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் கையைப்பிசைந்துகொண்டிருப்பதைப் படம் வெட்ட வெளிச்சமாக்குகிறது. ராக்கெட் ஏவுதளம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீருக்கு வழி இல்லை. ஆனால், அந்தக் கிராமத்தினருகே லாரி லாரியாக நீர் மொள்ளப்பட்டுப் பணம் படைத்த மனிதர்களின் தேவைக்காக விநியோகிக்கப்படுகிறது. விவசாய நிலத்தில் கட்டிடங்கள் எழும்புகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்புகளை வசனங்கள், காட்சிகள் வழியே விளக்குகிறார் இயக்குநர்.
நம்மிடம் என்ன இருக்கிறது?
ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்பட்டிருந்தால் இத்தகைய விபத்துகளே ஏற்பட வழியில்லை. அரசாங்கப் பிரதிநிதிகளும் அரசு அதிகாரிகளும் அதையும் செய்யவில்லை. அதனால் ஏற்பட்ட விபத்திலிருந்து குழந்தையைக் காப்பாற்றவும் தகுந்த கருவிகளின்றி தட்டுத்தடுமாறுகிறார்கள். நம்மிடம் தொழில்நுட்பக் கருவிகளுக்குப் பஞ்சமேயில்லை. குழந்தை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து கிடக்கும் காட்சியைத் துல்லியமாகப் படம் பிடிக்கவும் அதைப் பார்க்கவும் தேவையான டிஜிட்டல் கருவிகள் எல்லாம் நம்மிடம் உள்ளன. குழந்தை விழுந்த சில மணித் துளிகளில் அது பற்றிய விவரங்கள் சூடு பறக்கும் செய்திகள் ஆகின்றன; தொலைக்காட்சிகளில் அறிவுஜீவிகள் அமர்ந்து அனல் பறக்க விவாதிக்கிறார்கள்.
ஆனால், எந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமோ அதை நிறைவேற்ற நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்த்தால் வெறும் கயிறுதான் கண்ணுக்கு முன் தொங்குகிறது என்பது எவ்வளவு மோசமான நிலை. அடிப்படையான விஷயங்களையே இன்னும் நிறைவேற்ற இயலாத, கையாலாகாத அரசாங்கம் வல்லரசுக் கனவில் மூழ்கித் திளைப்பது எந்த விதத்தில் நியாயம் என்னும் எண்ணத்தைப் படம் காட்சிகளின் வழியே தருகிறது. படத்தின் காட்சிகள் டிஜிட்டல் இந்தியா என்னும் முழக்கத்தை எள்ளிநகையாடுகின்றன.
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கம் கொண்ட, அரசுக்கு எதிராகச் சொல்லித் தீர வேண்டிய உண்மையைத் துணிச்சலுடன் பேசும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியதற்காகப் படத்தின் இயக்குநரைப் பாராட்டும் அதே நேரத்தில் இப்படியொரு படத்தை உருவாக்க உறுதுணை வழங்கிய நடிகர் நயன்தாராவும் மெச்சத் தகுந்தவர். படத்தின் மையக் கதாபாத்திரம் ஆட்சியர் மதிவதனி என்றாலும் படம் பெரும்பாலும் மையப் பிரச்சினையை அச்சாகக்கொண்டே சுழல்கிறது. தனக்கு வழங்கப்பட்டிருக்கும் வேடத்தை மிகவும் அநாயாசமாகச் செய்து முடித்திருக்கிறார் நயன்தாரா. நயன்தாரா மாத்திரமல்ல; படத்தின் ஒவ்வொரு நடிகரும் தொழில்நுட்பக் கலைஞரும் ஒருங்கிணைந்து படத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் உணர்வுபூர்வமான ஒரு சம்பவம் சுவாரசியமான ஒரு சினிமாவாகியிருக்கிறது.
பாதையை மாற்றும் படம்
சாமானியர்கள் விஷயத்தில் அரசு நிர்வாகமும் அரசாங்கப் பிரதிநிதிகளும் எவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகின்றனர் என்பதைச் சுட்டும் அதேநேரத்தில் மக்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும் இயக்குநர் தயங்கவில்லை. மக்களுக்காகச் செயல்பட வேண்டிய அரசாங்கமும் அரசும் மக்களைக் குறித்துக் கவலைகொள்ளாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படும்போது, மக்கள் தங்களைத் தாங்ளே காப்பாற்றிக்கொள்ள வேண்டியது குறித்து ஆலோசிப்பதே உத்தமம் என்பதைப் படம் உணர்த்துகிறது. ஜனநாயக வழியில் செயல்படும் அதிகாரிகளால்கூட மக்களுக்கு உதவிட முடியாத நிலையே யதார்த்தம் என்பதையும் குறிப்புணர்த்துகிறது.
லஞ்சத்துக்காகவும் சிறிய அளவிலான அலட்சியத்துக்காகவும் பலரைக் கொன்று குவித்த கதாநாயகர்களைக் கொண்ட சினிமாக்களே தமிழ்த் திரையில் கோலோச்சியிருக்கின்றன. இப்போது, வறண்ட நிலத்தின் வாடை வீச, நாம் எதிர்கொள்ளும் நிகழ்காலப் பிரச்சினையைச் சுவாரசியமான படைப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் கோபி நயினார். ஆழ்துளைக் கிணற்றில் உயிருக்குப் போராடும் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது நம் கடமை என்பதை வலியுறுத்துகிறார். தடம் மாறிப் பயணிக்கும் தமிழ் சினிமாவின் பாதையை மாற்றும் பணியில் தனது முயற்சியைச் செலுத்தியிருக்கிறார். அது தொடர வேண்டும்; அறம் வெல்ல வேண்டும்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago