அமிதாப் பச்சன் 75: அமிதாப் எனும் அதிசயம்!

By கருந்தேள் ராஜேஷ்

அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது ஐம்பது. அந்த வகையில், இந்தியாவின் பல சூப்பர்ஸ்டார் நடிகர்களுக்கு அவர் முன்னுதாரணமாகவும் திகழ்ந்தார் எனலாம். ரஜினிகாந்துக்குத் தற்போது அறுபத்து ஏழு வயது. இன்றும் ஹீரோவாகவே நடித்துக்கொண்டிருக்கிறார். அதனாலேயே ‘லிங்கா’ போன்ற அபத்தங்கள் நிகழ்ந்தன. கமல்ஹாஸனுக்கு வயது அறுபத்து மூன்று. அவரும் இப்போது வரை ஹீரோதான். இவ்வளவு ஏன்? கன்னடத்தின் ராஜ்குமார், இறக்கும்வரை ஹீரோ. விஷ்ணுவர்த்தனும் அப்படியே. சிரஞ்சீவி அரசியலில் இருந்து திரும்பிவந்தபின் இப்போதும் ஹீரோதான். இன்னும் இந்தப் பட்டியலில் மம்மூட்டி, மோகன்லால் என்று பலரும் உண்டு. இவர்கள் யாருமே செய்யத் துணியாததை, ஐம்பது வயதிலேயே அமிதாப் செய்துவிட்டார்.

இதற்கும் முன்னரே நடிப்பில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்த அனுபவம் அமிதாபுக்கு உண்டு. 1986ல், ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் ரீமேக்கான ‘ஆக்ரி ராஸ்தா’ படத்தில் நடித்துமுடித்ததோடு நடிப்பை விட்டுவிட்டு, அரசியலில் புகுந்தார். அதன்பின் 1988ல்தான் மறுபடி நடித்தார். இந்த இடைவெளியில், அலஹாபாதில் இந்தியாவின் மிகப்பெரிய வோட்டு வித்தியாசங்களில் ஒன்றில் பகுகுணாவுக்கு எதிராகப் போட்டியிட்டு ஜெயித்தார். பின் மூன்றே வருடங்களில் பதவியை ராஜினாமா செய்து, திரைப்படங்களில் மறுபடியும் நடிக்க ஆரம்பித்தார்.

ஹுதா கவா திரைப்படத்துக்குப் பின்னர், தனது ABCL நிறுவனத்தைக் கவனிப்பதில் நேரம் செலவிட்டார் அமிதாப். அந்த நிறுவனம் பல பிரச்னைகளில் மாட்டிக்கொண்டு, மீளாக் கடனில் தவித்தபோதுதான் திரும்பவும் நடிக்க வந்தார். ஆனால் அப்போது வயதுக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்கத் துவங்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் துவக்கினார். ஆரம்பத்தில் அப்படி அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. அமிதாபின் இரண்டாவது இன்னிங்ஸின் மிகப்பெரிய வெற்றிப்படமாகத் திகழ்ந்து, அவரை நல்ல நடிகராக அடையாளம் காட்டிய முதல் படம் – ‘மொஹப்பதே(ய்)ன்’. ஆதித்ய சோப்ரா இயக்கிய படம். ஷா ருக் கான், ஐஸ்வர்யா ராய் நடித்தது. இதில், கடுமையான ஒழுக்கம் நிரம்பிய கல்லூரி முதல்வராக, காதலை எதிர்த்து வாழும் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்தப் படத்துக்குப் பின்புதான் அமிதாப் பச்சன் என்ற நடிகருக்காகவே திரைப்படங்கள் எழுதப்பட்டன.

அப்படி வெளியான படங்களில் மிக முக்கியமானது ‘அக்ஸ்’ (Aks). அமிதாப் எழுபதுகளில் மாபெரும் ஹீரோவாகத் திகழ்ந்தபோது, அவரது வெற்றிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்த இயக்குநர் ப்ரகாஷ் மெஹ்ராவின் மகன் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா இயக்கிய படம். மிக வித்தியாசமான கதைக்களம் கொண்டது. அமிதாபுக்கு எதிராக நடித்தவர் இன்னொரு அட்டகாசமான நடிகரான மனோஜ் பாஜ்பாய். படம் பெருவெற்றி அடையாவிட்டாலும், அமிதாப்பின் வில்லத்தனமான நடிப்பை அனைவருக்கும் அடையாளம் காட்டியது. இதன்பின்னர் நடிகர் அமிதாப் பச்சனின் காட்டில் அடைமழை பெய்யத் துவங்கியது (இதுதான் கோன் பனேகா க்ரோர்பதி நிகழ்ச்சியில் அமிதாப் தொகுப்பாளராக மாறிய தருணமும் கூட. அது அவரை இந்தியாவின் அத்தனை வீடுகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்தது).

ஆனால் இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் சில கொடூரங்கள் அமிதாபுக்கு நிகழ்ந்தன. கரன் ஜோஹர் இயக்கிய ‘கபி குஷி கபி கம்’, சஞய் குப்தா இயக்கிய ‘காண்டே’ (க்வெண்டின் டாரண்டினோ இயக்கிய ரிஸர்வாயர் டாக்ஸின் அப்பட்டமான நகல்), கைஸத் குஸ்தாத் இயக்கிய ‘பூம்’, ரவி சோப்ரா இயக்கிய ‘பாக்பான்’ (இந்தப் படம், எண்பதுகளில் விசு இயக்கிய ‘வரவு நல்ல உறவு’ படத்தின் ரீமேக். யோசித்துப் பாருங்கள். விசு செய்த கதாபாத்திரத்தை அமிதாப் பச்சன் செய்தால் எப்படி இருக்கும்? பிழியப் பிழிய அழவைக்கும் ஒரு குடும்ப சீரியல் போன்ற படம் இது) என்று வரிசையான கொடுமைகள் அமிதாபுக்கு நிகழ்ந்தன. அமிதாப் பச்சன் என்ற ஹீரோ, நடிகராக மாறிவிட்டார் என்று தெரிந்ததும், பாலிவுட்டின் அத்தனை மொக்கை இயக்குநர்களும் அமிதாப்பின் மீது வெறியுடன் பாய்ந்து விழுந்து கடித்து விட்டனர் என்றுதான் இந்தக் காலகட்டத்தைச் சொல்லமுடியும். அவ்வப்போது அமிதாப்பை இவர்களிடம் இருந்து காப்பாற்றியவர்கள் என்று ஃபர்ஹான் அக்ஹ்தர் (லக்‌ஷ்யா), யாஷ் சோப்ரா (வீர்  ஸாரா – இதுவே ஒரு கண்ணீர்க் காவியம்தான். ஆனால் காலம் சென்ற மதன் மோஹனின் நல்ல இசையால் தப்பியது), அமோல் பாலேகர் (பஹேலி), நிஷப்த் (ராம் கோபால் வர்மா) போன்றவர்கள்தான். இதில் ராம் கோபால் வர்மா, அமிதாப்பை விடாமல் பிடித்துக்கொண்டு, அவரது திரைவாழ்க்கையிலேயே ஆகச்சிறந்த கொடூரமான ‘ஆக்’ (ஷோலேவின் ரீமேக்) படத்தை எடுத்தார். இதற்குப் பிறகும் சர்க்கார் படத்தின் இரண்டாம், மூன்றாம் பாகங்களில் நடித்தது அவசியம் அமிதாப்பின் பெருந்தன்மை என்றுதான் சொல்லவேண்டும்.

அமிதாப் நடிகராக மாறிய காலகட்டத்தில் ஒரு சில மறக்கமுடியாத படங்கள் உண்டு. அவற்றில் ‘ப்ளாக்’ படத்துக்குத் தனி இடம் உண்டு. அந்தப் படம் பார்த்தவர்கள், பார்வையற்ற ராணி முகர்ஜியின் கதாபாத்திரத்துக்கும், அமிதாப்பின் கதாபாத்திரத்துக்கும் இருக்கும் அற்புதமான தொடர்பை எண்ணிப் பார்க்காமல் இருக்கமுடியாது. சஞ்சய் லீலா பன்ஸாலி எடுத்த அபூர்வமான நல்ல திரைப்படம் இது (இப்போதெல்லாம், ராஜஸ்தானி அங்கிகள் அணிந்துகொண்டு, ஐம்பது – நூறு பேரை மிகப் பிரம்மாண்டமான செட்களில் நடனமாட விட்டு, தீபிகா படுகோனேவை நடுவில் நடனமாட வைப்பதையேதான் பல வருடங்களாக இவர் செய்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது திரைப்படங்களின் பெயரை மட்டும் மாற்றுவார்). அதேபோல் ராம் கோபால் வர்மா எடுத்த ‘சர்க்கார்’ படத்தையும் அவசியம் சொல்லியே ஆகவேண்டும். காட்ஃபாதரை நகலெடுத்திருந்தாலும் (நம்மூர் ‘நாயகன்’ போல), அற்புதமான தனித்தன்மையுடன் அமிதாப்பின் பிரம்மாண்டத்தை உணர்த்திய படம் அது. ’அக்னீபத்’ படத்தில் விஜய் தீனாநாத் சௌஹான் என்ற பெயரில் அட்டகாசமான நடிப்பை அமிதாப் கொடுத்திருப்பார். அதைவிட இது பிரம்மாண்டமான கதாபாத்திரம். இதேபோல், நம்மூர் பால்கி இயக்கிய ‘சீனி கம்’ (Cheeni Kum) படத்தையும் மறக்கமுடியாது. அமிதாப் பச்சன் காதலில் சிக்கியவராக நடித்த படங்கள் மிகக்குறைவு. அவற்றில் இது முக்கியமான ஒன்று. அறுபது வயதுக்கு மேற்பட்ட செஃப் ஒருவருக்குக் காதல் வந்தால் என்னாகும்? இளையராஜா தமிழில் இசையமைத்திருந்த அற்புதமான சில பாடல்களை ஹிந்திக்குக் கொண்டுசென்ற படம் இது. நன்றாகவும் ஓடியது. இதன்பின் பால்கி அமிதாப்பை வைத்து மேலும் இரண்டு படங்கள் இயக்கியாகிவிட்டது.

இதன்பிறகு பல படங்கள் வந்தாலும், ஷூஜித் சர்க்கார் இயக்கிய ‘பிகு’ (Piku) மற்றும் அவர் கதை எழுதிய ‘பிங்க்’ (Pink) படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும். இவை இரண்டையும் பார்க்கவில்லை என்றால் பார்த்துவிடுங்கள். இவற்றில் பிகுவே எனக்கு மிகவும் பிடித்த படம்.

நம் காலத்தின் மாபெரும் சூப்பர்ஸ்டார்களில் முதன்மையானவர் அமிதாப் பச்சன் என்ற வகையில், ஹீரோவாக இருந்தபின்னர் நடிகர் என்று மாறி, தன்னைக் கச்சிதமாக சினிமாவில் பொருத்திக்கொண்டவர் – அவர் இல்லாமல் அப்போதும் திரைப்படங்கள் இல்லை; இப்போதும் இல்லை என்ற நிலையைக் கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தக்கவைத்துவருபவர் – எனது பள்ளி நாட்களை மறக்கமுடியாமல் ஆக்கிய ஹீரோ – என்று எப்படி எண்ணிப் பார்த்தாலும் அமிதாப் பச்சனை மறக்கவே முடியாது. தமிழில் ரஜினியும் கமலும் இப்படி வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை (ஹீரோவாகவே இல்லாமல் பிற கதாபாத்திரங்களையும்) சரமாரியாக நடித்துப் பெயர் வாங்கும் காலகட்டம் எப்போது வரும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அனேகமாக எனது ஐந்து வயது மகன் கல்லூரி சேரும்போதாவது அது வந்துவிட்டால் மகிழ்ச்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்